இன்று பத்திரிக்கைகளை எடுத்துப் படிக்கத் தொடங்கினாலே
வெட்டு, குத்து, கொலை, கொள்ளை, வழிப்பறி, குண்டு வெடிப்பு என்று அச்ச உணர்வுகளைத் தோற்றிவிக்கும்
செய்திகளையே பக்கத்திற்குப் பக்கம் பெரிய அளவில் படத்துடன் போட்டிருக்கின்றார்கள்.
அச்ச உணர்வுகளைத் தோற்றுவிக்கும் அத்தகைய செய்திகளைப்
படிக்கும் பொழுது அவைகள் எளிதில் நம்முள் பதிவாகிவிடுகின்றது.
பொழுது போக்கிற்காக பத்திரிக்கைகள், நாவல்கள் மர்மக் கதைகள்
இது போன்ற கதைகளைப் படிக்கும் பழக்கம் பெண்கள், ஆண்கள் இருவருக்குமே உள்ளது.
அது சமயம் அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் விவரிக்கப்பட்டுள்ள
கதாபாத்திரப் படைப்பின் வேதனை, சலிப்பு, சங்கடம், கோபம், குரோதம், அவசரம், ஆத்திரம்
ஆகிய உணர்வுகளை அதே உணர்வுடன் ஒன்றிப் படிக்க நேருகின்றது.
ஒவ்வொரு கதாபாத்திரம் செயல்படுவதையும் விவரித்து உருக்கமாக
எழுதியிருப்பார்கள். நாம் கதைகளுடன் ஒன்றிப் படிப்பதால் அந்த உணர்வுகள் அனைத்துமே நமக்குள்
ஆழமாகப் பதிவாகிவிடுகின்றது.
சிறுகச் சிறுகச் சேரும் இந்த உணர்வுகளில் நாம் எந்த உணர்வின்
தன்மையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதனின் செயலின் நிலைகளில் நம்மைச் செயல்பட வைக்கும்.
அதே மாதிரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டால்
இன்று பல சானல்களில் வித விதமான நிலைகளில் ஒளி பரப்பிக் கொண்டுள்ளார்கள். இதைக் குழந்தைகள்
பார்க்கும் சந்தர்ப்பங்களில் தீமையின் உணர்வுகள் பதிய நேர்கின்றது.
குழந்தைகளுக்கு வேறு எண்ணம் இல்லை. ஆர்வத்துடன் உற்று
நோக்கும் பொழுது அந்தப் பிஞ்சு உள்ளங்களில் பதிவாகிவிடுகின்றது.
ஆனால், அவர்கள் வளர்ந்த பின்பு பதிந்த அத்தகைய உணர்வுகள்
அனைத்தும் செயலாக்கத்திற்கு வருகின்றது. ஆகவே, இதனைத் தவிர்த்துக் கொண்டால் மிகவும்
நலம் பயக்கும் செயலாக இருக்கும்.
இவ்வாறு பல வகையான தீமையின் உணர்வுகளை நமக்குள் ஆழமாகப்
பதித்துக் கொள்கின்றோம். பதிந்த உணர்வுகள் ஜீவ அணுக்களாக நமக்குள் நம்மிடத்தில் விளைந்து
விடுகின்றன.
இதனால் நாம் வேறு வேளையில் ஈடுபட்டிருக்கும் சமயம் நமக்குப்
பின்னால் ஏதாவது ஒரு பொருள் விழுந்த சப்தம் கேட்டால் உடனே திடுக்கிட்டுத் திரும்பிப்
பார்ப்போம்.
என்னமோ, ஏதோ என்ற அச்ச உணர்வு நம்மை ஆட்கொள்ளும். பஸ்ஸில்
பயணம் செய்து கொண்டிருப்போம். நாம் செல்லும் பஸ்ஸின் ஓட்டுனர் கவனமாக வண்டியைச் செலுத்திக்
கொண்டிருப்பார்.
திடீரென்று இடையில் ஒருவன் பஸ் வருவதை அறியாமல் புகுந்து
விடுவான். இதனால் ஓட்டுனர் “சடார்..,” என்று பிரேக்கைப் பிடிப்பார்.
ஆனாலும், நம் மனதிலோ “என்ன ஆயிற்றோ..?” என்ற பயத்துடிப்பு
உண்டாகின்றது.
நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்தில் விபத்துக்கு உட்பட்ட
நிலைகளில் எத்தனையோ வேதனையுடன் வெளிப்பட்ட அணுக்கள் பல வகைகள் உண்டு.
ஆகையினால் விபத்தைக் காணும் சம்வங்களில் நம்மையறியாமல்
“என்ன ஆனது..?” என்று ஆர்வ மிகுதியால் கூர்ந்து கவனிப்போம். அப்பொழுது அந்த உணர்வின் அணுக்கள்
நம்முள் புகுந்துவிடும்.
விபத்து நேரவிருந்த ஆள் தப்பிவிடுவான். ஆனால், அது சமயம்
நாம் சுவாசித்த அச்ச உணர்வுகள் நம்மிடத்தில் பிரமையை உண்டாக்கிவிடும்.
அச்ச உணர்வுகளைப் படித்ததன் விளைவு அந்த அச்ச உணர்வுகள்
நமக்குள் ஆழமாகப் பதிந்து விடுகின்றது. ஓட்டுனர் “கிரீச்..,” என்று பிரேக்
போட்டவுடன் கண்களை அழுத்தமாக மூடிக் கொள்வோம்.
அங்கு என்ன நடந்தது என்று கூடப் பார்த்திருக்க மாட்டோம்.
ஏனென்றால் அந்த உணர்வின் வேகம் அறியும் தன்மையைக் கொடுப்பதில்லை.
ஆக இந்த உணர்வின் அலைகள் நமக்குள் இணைந்த பின் “அடிப்பட்டானே..,” என்று எண்ணும்
பொழுது அந்த உணர்வுகள் நம் சுவாசத்தில் கலந்து நம்மைப் பித்தனைப் போன்று ஆக்கிவிடுகின்றது.
அதே நினைவில் இருந்தால் “ஐயோ.., யாரோ வருகிறார், கதவைத்
தட்டுகிறார், ஐயோ.., மோதிவிட்டது, ஐயோ.., கழுத்தை நெரிக்கிறார்” என்று உளற ஆரம்பித்துவிடுவோம்.
இதைப் போன்ற அச்ச உணர்வுகள் நம்மிடத்தில் அதிகமாக விளைய
விளைய அடுத்து நாம் ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாலும் “கிரீச்..,” என்று சப்தம்
கேட்டால் போதும் ஒதுங்குவதற்குப் பதில் வண்டியிலேயே விழுந்துவிடுவோம்.
ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் நம்மையறியாமல் ஆபத்துக்கே
அழைத்துச் செல்லும்.
எனவே எந்தப் பத்திரிக்கையை எடுத்துப் படித்தாலும் அதில்
உள்ள செய்திகள் நமக்குள் பதிந்து ஆபத்தை உண்டாக்காமல் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
பத்திரிக்கைகளைப் படித்து முடித்தவுடன், தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளைப் பார்த்தவுடன் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும்
படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள்
அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் இனி நாட்டிலும்
இந்த உலகிலும் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் எல்லோருக்கும் நன்மை தருபவைகளாக இருக்க
வேண்டும் ஈஸ்வரா என்று ஐந்து நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.
இதன் மூலம் நஞ்சான உணர்வுகள் நமக்குள் சேராமல் தடுத்து
நம் ஆன்மாவைக் காத்துக் கொள்ள முடியும்.