ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2016

எந்த வாகனத்தில் சென்றாலும் விபத்து ஏற்படாமல் தடுக்கத் தியானிக்க வேண்டிய முறை

ஒட்டுனர்கள் வாகனங்களைச் செலுத்த ஆரம்பிப்பதற்கு முன் பயணம் இனிமையானதாகவும் சுமுகமானதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்து கொள்தல் வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

பின்பு துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்கள் பயணம் இனிமையானதாகவும் சுமுகமானதாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

எங்களைப் பார்ப்பவர்கள் நல்ல எண்ணம் கொண்டு செயல்பட அருள்வாய் ஈஸ்வரா, எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் எண்ணி ஏங்கித் தியானித்துவிட்டு வண்டியை ஓட்ட ஆரம்பியுங்கள்.

இவ்வாறு நீங்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டு வண்டியை எடுத்தீர்கள் என்றால் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்ட உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பைக் கொடுக்கும்.

அதே சமயத்தில் நீங்கள் எடுத்துக் கொண்ட பணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் நீங்கள் எண்ணிய வண்ணம் நடைபெறுவதற்கும் ஏதுவாகும்.

சாலையில் நாம் வண்டிகளை ஒட்டிச் செல்லும் சமயங்களில் பல விபத்தின் நிலைகளைப் பார்க்க வேண்டி வரும். அதைப் பற்றி நாம் பிறரிடம் விவரித்துச் சொல்வோம்.

அந்த விபத்து எதனின் நிலைகளில் ஏற்பட்டதோ அதே உணர்வுகள் நம்மையும் நம்மையறியாமலே விபத்தில் சிக்க வைத்துவிடும்.

ஆகவே, உடனுக்குடன் மேலே சொல்லியபடி ஆத்ம சுத்தி செய்து வந்தால் நாம் போகும் பாதையில் கலவரமோ, தடையோ அல்லது வழிப்பறியின் நிலைகள் இருந்தால் நாம் செய்த ஆத்ம சுத்தியின் வலு நம்மைக் காக்கும்.

அதாவது, அந்தப் பக்கம் செல்லாது நம் உணர்வே தடுத்து நமக்குப் பாதுகாப்பைக் கொடுக்கும்.

அதே சமயத்தில் நாம் போகும் பாதையில் பல வாகனங்கள் வருகின்றது. சிலர் தவறான முறையில் வருவார்கள். வழக்கமாக நாம் என்ன செய்வோம்?

கோபப்பட்டுப் பேசுவோம். அவர்கள் தவறினைச் சுட்டிக் காட்டிக் கோபப்படுகின்றோம். இப்படி அடிக்கடி கோபப்பட்டால் நம் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுவிடும்.

ஆகவே, ஆத்ம சுத்தி செய்து அந்தக் கோப உணர்வுகள் நமக்குள் பதியாது தடை செய்தல் வேண்டும்.
வாகன உரிமையாளர்கள் ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை
முதலில் கூறியபடி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை வலுவேற்றிக் கொண்ட பின் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் இந்த வாகனத்தில் பயணம் செய்வோர்களும் பணி புரிபவர்களும் ஆரோக்கிய நிலையில் இருந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தொழிலாளர்கள் குடும்பம் முழுவதும் படர்ந்து அவர்கள் அனைவரும் மன வளம், மன பலம், ஆரோக்கியம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் வாகனத்தைப் பார்க்கும் அனைவருக்கும் நல்ல எண்ணம் வந்திட அருள்வாய் ஈஸ்வரா. நாங்கள் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இப்படி ஒரு ஐந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை ஆத்ம சுத்தி மூலம் உங்களுக்குள் வலுவேற்றிக் கொண்டு உங்கள் பார்வையால் வாகனத்தைப் பாருங்கள்.

அது நன்மை பயக்கும் செயலாக அமையும்.

உங்கள் சொல் பிறரை மகிழ்விக்கும் தன்மைக்கு உயரும். உங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறும். உங்கள் தொழிலில் கவனமுடன் செயல்படுவீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அனைவரும் பெறுக. எல்லா நலமும் வளமும் பெறுக.

ஓம் ஈஸ்வரா குருதேவா.