Sunday, August 14, 2016

நம்மை அறியாமலே நல்லதைப் பெறும் மார்க்கம்

உதாரணமாக, நாம் நன்மைகள் பல செய்தாலும் ஒரு நெருப்பு பாய்ந்து வரப்படும் பொழுது நான் நன்மைகள் செய்தேன் என்று நெருப்பு நம்மைத் தாக்காமல் விட்டுவிடுகின்றதா?

அல்லது திரவகம் தவறிக் கீழே விழுந்த பின் நான் நன்மை செய்தேன் என்று எண்ணினால் அந்தத் திரவகம் மனிதன் மேல் தவறி விழுகாமல் இருக்கின்றதா? பட்ட இடம் வெந்துவிடும், சுட்டு நம் உடலில் பெரிய காயமாகிவிடும்.

இதைப் போன்று நாம் பகைமையற்ற நிலையில் இருந்தாலும் பல நன்மைகள் செய்தாலும் சந்தர்ப்பம் நாம் பகைமையூட்டும் அதன் அருகிலே இருக்கப்படும் பொழுது அந்த நிலை ஆகிவிடுகின்றது.

இந்த நிலை வந்த பின்பு “நான் நன்மை செய்தேனே.., எனக்கு இப்படி ஆண்டவன் சோதிக்கின்றான்..,” என்றால் நம்மை ஆள்வது யார்? நம்மை உருவாக்கியது யார்? நம்மை இயக்குவது யார்?

ஏனென்றால், நமக்குள் உள் நின்று நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரிடம் வேதனைப்படும் உணர்வுகள் பட்டால் அந்த வேதனை என்ற உணர்வை வேதனையான அணுக்களை உயிர் உருவாக்கிவிடும்.

உருவாக்கியபின் அதனையும் ஆளத் தான் செய்யும். உயிர் அந்த வேதனைப்படும் அணுக்களை வளர்க்கத்தான் செய்யும். வேதனையான உணர்வுகளை நமக்குள் உயிர் ஊட்டத்தான் செய்யும்.

ஆகவே, உயிர் நாம் எண்ணுவதை உருவாக்குகின்றது. உருவாக்கி அந்த உடலுக்குள் இருப்பதை அது ஆண்டு கொண்டும் இருக்கின்றது.

நாம் எண்ணியதை இயக்குகின்றது என்பதை உணர்த்துவதற்குத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள் ஞானிகள்.

நம் வாழ்க்கையில் கசந்த நிலைகள் வருவதிலிருந்து விடுபடும் நிலைக்குத்தான் விநாயகர் தத்துவத்தைக் காட்டியுள்ளார்கள். 

நீ எந்த வினையைச் சேர்க்க வேண்டும்? எதை உயிரிலே இணைக்க வேண்டும்? என்பதையும் உணர்த்தியுள்ளார்கள்.

அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைத் தாங்கி சூரியனின் கதிரியக்கங்கள் வருகின்றது.

அதை நம் பூமி தன் துருவப் பகுதி வழியாகக் கவர்கின்றது. அதனை நாம் பெறக் கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் விநாயகரை நீர் நிலை இருக்கும் பக்கம் வைத்தார்கள்.

ஆற்றிலே குளித்துவிட்டு வந்தபின் அந்த விநாயகரை நாம் உற்றுப் பார்க்கின்றோம். 

அப்பொழுது நாம் தெரிந்தோ தெரியாமலோ நம்முள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் (சூரியன் காந்தசக்தி கவர்ந்து வரும்) உணர்வின் தன்மை நம் உயிரில் பட்டுவிடுகின்றது.

உயிரில் படும் துருவ நட்சத்திரத்தின் அலைகள் நமக்குள் அணுவாக உருவாகும் கருவாக உருவாகிவிடுகின்றது. அணுவின் வளர்ச்சியில் துருவ நட்சத்திரம் எப்படித் தீமைகளை ஒடுக்கி ஒளியின் சுடராக மாற்றுகின்றதோ அந்த நிலையை நாமும் பெறுகின்றோம்.

ஆக, நம் வாழ்க்கையில் கசந்த நிலையில் வரும் நிலைகளை அங்கே வேம்பு என்று காட்டி அதன் அருகிலே அரச மரத்தை வைத்து உன் வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளை அரசைப் போன்று மாற்றியமைக்கும் நல் வினைகளை "அருள் மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொள்" என்பதைத் தான் அங்கே காட்டினார்கள் ஞானிகள்.

நம் வாழ்க்கையில் அறியாது வந்த தீய வினைகள் சாபவினைகள், பாவ வினைகள் பூர்வ ஜென்ம வினைகளை போன்றவைகளை நீக்கிடும் நிலைக்கே அவ்வாறு செய்தார்கள்.

இந்த வினைகளை நீக்கிவிட்டு நல்ல வினைகளாக அருள் ஒளியின் சுடரை நீ சேர்த்துக் கொள் என்பதே விநாகர் தத்துவம். ஆக, நேற்றைய செயல் இன்றைய மனித சரீரம். இன்றைய செயல் நாளைய சரீரம்.

அதாவது இன்று நீ சேர்க்கும் இந்த நல் வினைகளுக்கோப்ப அந்த அரசைப் போன்று விண்ணுலகம் சென்று ஒளியின் சுடராக வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்வதே “கல்கி” மனிதனின் கடைசி எல்லை.

இவ்வாறு நம்மை அறியாமலே சாதாரண பாமர மக்களும் ஆற்றல்மிக்க நிலைகளைப் பெறச் செய்தனர் ஞானியர். நாம் அந்த ஞானிகள் காட்டியபடி செய்கின்றோமோ? சற்று சிந்தித்துப் பாருங்கள்.