கெட்டது உங்களுக்குள் வராது தடுத்துக் கொள்ளும்
நிலையாக அந்த அருள் ஞானிகளின் உணர்வு நாங்கள் பெறவேண்டும், அந்த உணர்வின் சக்தி பெறவேண்டும், எங்களை அறியாது வரும் இருள் நீங்க
வேண்டும் என்று தியானிப்பது தான் தியானம்.
ஆக, நாம் வாழ்க்கையில் நாம் நல்லதை எண்ணிச் செயல்பட்டாலும், பிறருடைய துன்பங்களை
உணர்ந்து தான் நாம் செயல்படுகின்றோம். சிலர் துன்பப்படுவதைக் கேட்டுணர்ந்து அல்லது
பார்த்துணர்ந்து நாம் செயல்படும் போது அந்த உணர்வை அறிகின்றோம்.
ஆனால் அவருக்கு உதவி செய்கின்றோம். அவர் உடலில்
இருந்து தீமையான உணர்வுகள் நமக்குள் வந்து நம் நல்ல உணர்வை அழித்து விடுகின்றது. ஆனால்
அந்த உணர்வை நாம் துடைக்க வேண்டும்.
நல்ல சட்டையைப் போட்டுச் சென்றாலும் அழுக்கு வந்த
பின் துவைத்து நாம் சுத்தப்படுத்தி வெளுத்துக் கொள்கின்றோம்.
இதை போல நம் நல்ல உணர்வுக்குள் பிறர் படும் துயரமான
உணர்வுகள் கேட்டறிந்து அது அழுக்காகப் படிந்து விட்டால், அந்த ஞானிகள் துடைத்த உணர்வை
நம் உடலுக்குள் செலுத்தி இதைத் துடைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த ஞானிகளின் ஆற்றலை எடுக்க வேண்டும் என்றால்
முதலில் நம் மூதாதையர்களை நாம் விண் செலுத்த வேண்டும். கூட்டுத் தியானம் இருந்து உணர்வின்
சக்தியை ஒங்கச் செய்து உணர்வின் அலைகளுக்குள் நாம் அந்த ஆன்மாக்களை விண் செலுத்த வேண்டும்.
அப்படி விண் செலுத்தி விட்டால் அந்த அந்தக் குடும்பத்தில்
உள்ளோர் இதைப் போல எண்ணினால் விண்ணின் ஆற்றலைப்
பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
அதே சமயத்தில் உங்களை அறியாது வந்த தீமைகளை நீக்கிடும்
உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் இது விளையும். அதற்குத் தான் கூட்டுத் தியானங்களை இங்கே
அமைத்துள்ளோம்.
இங்கே தபோவனத்திற்கு வரக்கூடியவர்கள் இந்தத் தியான
மண்டபத்தில் அமர்ந்து, அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும். என் உடல் முழுவதும்
படரவேண்டும் என்ற ஏக்கத்தினை செலுத்தித் தியானிக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் எதையெல்லாம் நன்மை பெறவேண்டுமோ,
என் பார்வை நல்லதாக வேண்டும், என் சொல்லில் இனிமை பெறவேண்டும், என்னைப் பார்ப்போருக்கு
நல்ல உணர்வு பெறவேண்டும் என்று எண்ணவேண்டும்.
யாரையெல்லாம் எண்ணி அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தியால்
நலம் பெறவேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ அந்த உணர்வு அது உங்களுக்குள் விளைகின்றது.
அடுத்து நீங்கள் அவருடன் பேசி உறவாடப் போகும் போது
இந்தச் சொல்லின் தன்மை அங்கே பட்டு அவர்கள் அறியாமை நீங்கும் தன்மை ஏற்படும்.