நாம் செய்ய வேண்டிய பணிகளை எண்ணிக் கொண்டு சாலையில் நடந்து
கொண்டிருப்போம். அப்பொழுது எதிர்பாராது ஒருவர் காரில் அடிபட்டுக் கீழே விழுந்து விடுகின்றார்.
இதனைக் காணும் நாம் திடுக்கிட்டு “அச்சச்சோ..,” என்று மனம் பதைபதைக்கின்றோம்.
அடிபட்டவர் இறந்துவிட்டாரோ அல்லது உயிருடன் இருக்கின்றாரோ
என்று கூடப் பார்க்காமல் “அவருக்கு என்னவாயிற்றோ..,” என்று மனம் பதைக்கும் பொழுது காரில்
அடிபட்டு இறந்த உணர்வுகள் இங்கே ஒன்றாகி பதட்டம் அடைந்த நம் உடலுக்குள் இறந்தவரின்
உயிரான்மா உள்ளே புகுந்துவிடுகின்றது.
ஒரு விளக்கில் (பல்பில்) நெகடிவ், பாசிடிவ் என்ற இரண்டையும்
இணைக்கும் பொழுது அந்த பல்ப் எரியத் தொடங்குவது போல் பதட்டமைடைந்தவரின் உணர்வும் இறந்தவரின்
உணர்வும் ஒன்றாக இணையும் பொழுது இறந்தவரின் ஆன்மா இந்த உடலுக்குள் புகுந்து செயல்புரியத்
தொடங்குகின்றது.
அதாவது காரில் அடிபட்டு இறந்தவர் தன் வாழ்க்கையில் என்னென்ன
வேதனைகளை அனுபவித்தாரோ அவையனைத்தையும் இவருடைய உடலில் செயல்படத் தொடங்குகின்றது.
சாலையில் நடைபெறும் இது போன்ற விபரீதங்களைத் தவிர பிற
சண்டை சச்சரவுகளையும் நாம் காண நேரிடும்.
இரண்டு பேருக்குள் நடைபெறும் வாய்ச் சண்டையில் ஏச்சுக்களும்
பேச்சுக்களும் சாபங்களும் வெளிப்படும்.
இதை நாம் உற்றுக் கவனிப்போம் என்றால் பிறர் யாரும் நமக்குச்
சாபமிட வேண்டியதில்லை.
ஒருவர் மற்றொருவருக்கு விடும் சாபங்களை உற்றுக் கவனித்தாலே
போதும். அந்தச் சாபத்தின் உணர்வுகள் நமக்குள் உட்புகுந்துவிடும்.
புகுந்த அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் விளைந்து கை கால்
குடைச்சல் சலிப்பு சஞ்சலம் போன்றவைகளை நம்மிடத்தில் உண்டாக்கிவிடும்.
கர்ப்பாமான பெண்கள் இதைப் போன்ற சாப உணர்வுகளைக் கண் கொண்டு
உற்று நோக்கித் தனக்குள் பதிய வைக்கும் பொழுது அந்த உணர்வுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு
வினையாக, பூர்வ புண்ணியமாக சேர்ந்து அதனால் ஊனமுள்ள குழந்தையாகப் பிறந்துவிடும்.
இது போன்று தெருவில் நடக்கும் அசம்பாவிதங்களையோ மற்ற சண்டை
சச்சரவுகளைக் காணும் பொழுது உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்வது மிகவும் நல்லது.
ஆத்ம சுத்தி செய்து நம்மைத் தீமையான உணர்வுகளிலிருந்து காத்துக்
கொள்ள வேண்டும். இதை நாம் ஒரு பழக்கமாகப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும்
படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள்
இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள்
அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.
விபத்துக்களைப் பார்த்த பின் செய்ய வேண்டியது
விபத்தில் அடிபட்டு இறந்தவரைக் கண்ணுற்றுப் பார்க்கும்
பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இறந்தவரின் உயிரான்மாவிற்குக் கிடைத்திட
அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அந்த உயிரான்மா
சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து அழியா ஒளிச் சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா
என்று “அந்த உயிரான்மாவை உந்தி விண்ணுக்குச் செலுத்த வேண்டும்”.
சண்டை சச்சரவுகளைப் பார்த்த பின் செய்ய வேண்டியது
சண்டை சச்சரவுகளைப் பார்க்கும் பொழுது துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி சண்டையிடுபவர்களின் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
எண்ணுதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் சண்டையிடுபவர்களுக்குள்
ஒன்றுபட்ட உணர்வுகள் உண்டாகி நட்புடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா
என்று ஒரு ஐந்து நிமிடம் தியானிக்க வேண்டும்.
இத்தகைய முறைப்படி நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டால் பிற
தீமையான உணர்வுகள் நம்மைப் பாதிக்காதவாறு நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.