ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2016

நம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய "அருள்வாக்கு"

குழந்தைப் பேறு ஆனபின் நாம் குழந்தையைப் பார்க்கச் செல்வோம். அதே மாதிரி அந்தத் தாயும் குழந்தையைப் பார்க்கும்.

ஆக, குழந்தையைப் பார்க்கும் சமயங்களில் ஆத்ம சுத்தி செய்து கொண்டு பார்க்கவேண்டும்.

பின் குழந்தையை உற்றுப் பார்த்து இந்தக் குழந்தை ஞானக் குழந்தையாக வளரவேண்டும். அன்னை தந்தையை மதித்து நடக்கும் ஞானக் குழந்தையாக வளரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

குழந்தை உடல் நலத்துடன் வாழ வேண்டும். உலக அறிவினைக் கண்டுர்ந்து செயல்படும் ஞானக் குழந்தையாக வளர்ந்திட வேண்டும் என்று குழந்தையை ஆசீர்வாதம் செய்யுங்கள்.
குறும்புத்தனமான குழந்தைகளுக்கு நல் அறிவை ஊட்டும் முறை
தாய் தந்தையர் தங்களுடைய குழந்தைகளை வளர்த்து வரும் பொழுது அவர்களிடத்தில் சிறு தவறைக் கண்டாலும் உடனே கொதித்தெழுந்து கண்டபடி பேசாதீர்கள்.

ஏனென்றால் குழந்தைகள் தவறு செய்யும் பொழுது அதனைக் கண்டு நாம் வெறுப்புடன் திட்டினோம் அல்லது அடித்தோம் என்றால் அந்த வெறுப்பின் உணர்வுகள் குழந்தையிடம் பதிந்து மேலும் அவனைத் தவறு செய்யவே தூண்டும்.

ஒருவனைத் “திருடன் திருடன் என்று திருப்பித் திருப்பித் திட்டிக் கொண்டிருந்தோம் என்றால் அவன் திருடனாக இல்லாமிலிருந்தாலும் கூட அவனைத் திருடனாக்கிவிடும்.

ஏனெனில் அவனில் பதிய வைக்கப்பட்ட உணர்வுகள் அவனிடம் அதனின் இயக்கத்தைச் செயல்படுத்திவிடுகின்றன.

அதே சமயம் அவனை ஏசிய உணர்வுகள் உங்களிடத்திலும் பதிந்து அதே தவறைச் செய்யத் தூண்டும். இந்தக் கோபமான உணர்வுகள் உங்களிடத்தில் அதிகமாக விளைய விளைய அவைகள் உங்களிடத்தில் நோயாக மாறுகின்றது.

ஆகவே, உங்கள் குழந்தை தவறு செய்வதைக் காணும் பொழுது மகரிஷிகளின் அருளை எண்ணி அவனுக்கு நல்லறிவுரைகள் செய்து அவன் தன்னுடைய தவறுகளிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணிக் கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்யுங்கள். 

அருள் உணர்வை அவர்களுக்குள் பதிவு செய்யுங்கள். காலை மாலை வேளைகளில் குழந்தைகளைத் தியானத்தில் அமரச் செய்யுங்கள்.

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் பொழுதோ பரிமாறும் பொழுதோ இந்த ஆத்ம சுத்தியினைக் கடைப்பிடியுங்கள்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.

அதன் பின்பு துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் குழந்தைக்குக் கிடைக்கப் பெற்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவர்கள் ஞானத்திலும் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்தவனாக வளர அருள்வாய் ஈஸ்வரா என்ற எண்ணத்தை ஒரு நிமிடம் ஏங்கித் தியானிக்கவும்.

நம் வாழ்க்கையில் எதையெல்லாம் நாம் உயர்வு கொண்டு பதிவு செய்கின்றோமோ அதுவெல்லாம் நமக்குள் வளரும்.

அதே சமயத்தில் நாம் சிலரை எப்படிப் பார்க்கிறோம்?

“குறும்புக்காரப் பையனாக இருக்கின்றான்.., பார்ப்பதைப் பார்..,என்போம். அப்பொழுது உங்கள் அப்பாவைத் திட்டு, அம்மாவைத் திட்டு என்று குழந்தைகளிடம் ஆரம்ப நிலைகளில் இப்படிப் பதிவு செய்துவிடுகின்றோம்.

சிலர் குழந்தைகளிடம் கேலிப் பேச்சாகவும் குறும்புத்தனமான உணர்வுகளையும் வளர்த்துப் பதித்துவிடுகின்றார்கள்.

இதைப் போன்ற உணர்வுகள் குழந்தைக்குள் பதியாது மாற்றிட வேண்டும்.
தாய் தந்தையர் குழந்தைகளுக்கு அனுதினமும் அருள் வாக்கினைக் கொடுக்க வேண்டும்
குழந்தைகள் கல்வியில் குறைவாகவோ அல்லது உடலில் ஊனமோ அல்லது மற்ற நிலைகளோ இருப்பினும் அதை நினைவில் கொள்ளாதீர்கள்.

குழந்தைகள் வளரும் பருவத்தில் பள்ளிக்குச் செல்லும் பொழுதும், மற்றவர்களிடம் பழகும் பொழுதும், அவர்களுக்கு உணவு கொடுக்கும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி குழந்தை பெறவேண்டும் என்ற உணர்வைத் தாய் தன் குழந்தைக்குப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குழந்தைகள் பெற்று மன பலம் பெற்று மன வளம் பெற்று உடல் நலம் பெற்று கல்வியில் அருள் ஞானம் பெற்று பொருள் கண்டுணர்ந்து செயல்படும் நிலை அவர்கள் பெறவேண்டும் என்ற உணர்வுகளை ஊட்டுங்கள்.

துருவ நட்சத்திரத்தை எண்ணிக் குழந்தைகளை ஆசீர்வதித்துப் பள்ளிக்குச் செல்லச் செய்யுங்கள். அனைத்திலும் வெற்றி பெறவேண்டும் என்று மேலே சொன்ன வாக்கினைச் சொல்லி ஆசீர்வதியுங்கள்.

பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரை குருவாக ஏற்றுக் கொள்ளப் பழக்குங்கள்.

பள்ளியில் அமர்ந்த பின் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் (குழந்தை தான் பெறவேண்டும்) என்று எண்ணி ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்கள் அனைத்தும் எனக்குள் ஆழமாகப் பதிவாக வேண்டும் என்ற எண்ணத்தில் உற்றுக் கேட்கச் சொல்லுங்கள்.

தாய் தந்தையர் இருவரும் குழந்தைகளுக்கு அனுதினமும் இதைப் போன்ற அருள் வாக்கினை நினைவுபடுத்துங்கள்.

இத்தகைய நிலைகளில் குழந்தைகள் சென்றால் குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்களில் நாம் வளர்க்கும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளால் ஆசிரியர் போதிக்கும் உணர்வுகளைச் சீராகப் பதிவு செய்வார்கள்.

பாட நிலைகளில் நல்ல நிலைகளில் தேர்ச்சி பெறுவார்கள். துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுடன் குழந்தைகள் படித்துணரப்படும் பொழுது தெளிந்த மனமும் அனைத்தையும் அறிந்திடும் அறிவும் அவர்களுக்குள் வளர உதவும்.

ஆக, குடும்பத்தில் மன மகிழ்ச்சியின் நிலைகள் பெருகும். தாய் தந்தையை அரவணைத்து குடும்பப் பொறுப்பினை உணர்ந்து செயல்படும் நிலை ஏற்படும்.