ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 4, 2016

நமக்கு நோய் வருவதன் காரணமே அன்றாட உணவில் கலந்து வரும் (பூச்சிக் கொல்லி) கெமிக்கல் தான்...!

நாம் எந்த உணர்வை எண்ணுகின்றோமோ அது நம் சுவாசத்தில் கலந்து உமிழ் நீராகின்றது. அந்த உமிழ் நீர் உடலினுள் சென்று இரத்தத்தில் கலக்கின்றது.

புளிப்பான மாங்காயைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் இயல்பாகவே உங்களிடத்தில் உமிழ் நீர் சுரப்பதைக் காணலாம். நமது உணர்வுக்குத் தக்கவாறு உமிழ்நீர் சுரக்கின்றது என்பதை நாம் அறிய வேண்டும்.

நாம் எந்த உணவை உட்கொள்கின்றோமோ அந்த உணவுடன் நம் உணர்வுக்குத் தக்கவாறு உமிழ் நீர் சுரந்து உணவுடன் கலந்து நம் வயிற்றினுள் செல்கின்றது.

அங்கு அந்த உணர்வின் சத்துக்கள் பிரிக்கப்பட்டு இரத்தத்தில் கலக்கின்றது.

நாம் உணவு உண்ணும் பொழுது மகிழ்ச்சி நிறைந்த உணர்வுகளைக் கொண்டிருப்போமாயின் அந்த மகிழ்ந்த உணர்வுகள் உணவுடன் கலந்து உடலினுள் இணைந்து உணவை நன்கு ஜீரணிக்கச் செய்து உடலை மகிழ்ந்த நிலையாக இருக்கச் செய்கிறது. அதே சமயத்தில் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.

ஆனால், உணவு உண்ணும் பொழுது வேதனை கோபம், வெறுப்பு, சோர்வு போன்ற உணர்வுக்ளைக் கொண்டிருப்போமாயின் அந்த உணர்வுகள் உணவுடன் கலந்து முதலில் உணவைச் சுவை கெடச் செய்வதுடன் உணவுடன் உட்சென்ற உணர்வுகள் நமது ஜீரணத் தன்மையைக் கெடச் செய்கின்றன.

மேலும் அந்த உணர்வுகள் நமது தசைகளில் இணைந்து உடலில் வேதனையை உண்டாக்குகின்றன. ஆகவே, நம்முள் தீய உணர்வுகள் பதிந்து நம்முள் நோயாக விளைவதைத் தவிர்க்க வேண்டும்.

உணவு உண்ணும் பொழுது துருவ நட்சத்திரத்தை எண்ணி அதிலிருந்து வரும் ஆற்றல்மிக்க உணர்வுகளை நம் உடலில் இணைக்கும் பொழுது அவைகள் நம்முடன் ஜீவ அணுக்களாக விளைந்து நமது உடலாகின்றன.

பின் நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் நல் மணமாக வெளிப்படுகின்றன. நம் உடலும் ஆரோக்கியமானதாக மகிழ்ந்த நிலையாக வலுப் பெறுகின்றது.

சாப்பிடத் தொடங்கு முன் கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிட்டு ஒரு நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் சாப்பிடும் இந்த உணவு முழுவதும் படர்ந்து இந்த உணவை உட்கொள்வதால் நாங்கள் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் தியானித்துவிட்டு பின் உணவை உட்கொள்ளுங்கள்.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் காய்கறிகளோ பல வகைகளிலோ கீரை வகைகளிலோ அல்லது உணவு தானியங்களிலோ எதுவாக இருந்தாலும் பூச்சிக் கொல்லி மருந்தைப் போட்டுத் தான் பயிர் செய்கின்றார்கள்.

நாம் பல முறை கழுவிச் சுத்தப்படுத்தினாலும் முழுமையாக அவற்றை அகற்ற முடிவதில்லை. கண்ணுக்குத் தெரியாத நிலையில் அதனுடன் கலந்திருக்கின்றது.

நாம் சமைத்து அவைகளை உட்கொள்ளும் பொழுது நம் உடலில் சேருகின்றது. தினசரி சிறுகச் சிறுகச் சேர்ந்து அந்த விஷத்தின் ஆற்றல் உடலில் அதிகமாகி நல்ல உடலையும் நோய்வாய்ப்படச் செய்கின்றது.

இந்த நிலைகளிலிருந்து நாம் விடுபட நாம் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் மேலே சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து விஷத்தன்மையான ஆற்றல்கள் நமக்குள் செயல்படா வண்ணம் காத்திடலாம்.

நம் உடலையும் காத்திடலாம். நம் உணர்வுகளையும் காத்திடலாம்.

ஆறாவது அறிவின் துணையால் எதையும் அறிந்துணர்ந்து செயல்படும் மனித நிலை பெற்று இருக்கின்றோம். மனிதனான நாம் உணவு உட்கொண்டால் அதில் உள்ள நஞ்சினை மலமாக மாற்றி நல்ல உணர்வை உடலாக்குகின்றது.

ஐந்தறிவு கொண்ட மாடோ ஆடோ தான் புசிக்கும் உணவில் இருக்கும் நஞ்சினை உடலாக மாற்றி நல்லவற்றை மலமாக வெளியேற்றுகின்றது.

மனிதனுக்கு எண்ண வலு அதிகம். மாட்டிற்கு உடல் வலு அதிகம். நாம் அதனை உணவாக உட்கொள்கின்றோம். அதனால் நம் உடல் வலு பெறலாம்.

ஆனால், மாட்டின் உடலில் விளைந்த உணர்வின் ஆற்றல்கள் நமது ஆன்மாவாக மாறுகின்றது. நமது உயிரில் எந்தத் தன்மை ஆன்மாவாகப் பதிவாகின்றதோ அதைனின் நிலைக்கு நம் உயிர் செயல்படுத்துகின்றது.

எந்த அசைவ உணவை நாம் விரும்பிச் சாப்பிடுகின்றோமோ அதனின் நிலைக்கு நம் உயிர் நம்மை அழைத்துச் சென்றுவிடும். நம் கடைசிக் காலங்களில் நாம் எந்த அசைவ உணவை அதிகமாக உட்கொண்டோமோ அதனின் நினைவு வரும்.

நாம் எதனைப் பதிவு செய்கின்றோமோ அதுவே நினைவாகச் செயல்படுகின்றது. பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து மனிதனான நாம் பனித நிலையைப் பெற முடியாதபடி கீழ் நோக்கிச் செல்ல வைக்கும்.

எண்ண வலுக் கொண்டு ஆத்ம சுத்தி செய்து அந்த உணவை உட்கொள்ளச் செய்யும் நிலைகளிலிருந்து விடுபடுங்கள். உடலையும் உணர்வையும் புனிதப்படுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பெருக்குங்கள். உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக்கும் தகுதியை இந்த மனித வாழ்க்கையில் முழுமையாகப் பெற்றிடுங்கள்.