குரு அவர்களைச் சந்தித்து அவரின் ஆசியைப் பெறுவதற்காக
அன்பர்கள் கூட்டம் அதிகமாக இருக்கலாம்.
குருவைச் சந்தித்து ஆசி பெற வந்திருக்கும் அனைவரது உடல்களிலும்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து, அவர்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள்
மீதும் படர்ந்து, ஜீவான்மாக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர
அருள்வாய் ஈஸ்வரா என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவர்கள் மன பலம்,
மன வளம், உடல் நலம், செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கும் தொழில் வளமும் பெற அருள்வாய்
ஈஸ்வரா என்று மனதில் எண்ணித் தியானிக்க வேண்டும்.
இவ்வாறு நாம் பிறரின் நலனுக்காக நாம் எண்ணி எடுக்கும்
உணர்வானது நம்மிடத்தில் பெருகி அதனின் நற் பலன்களை நாம் முதலில் பெறுகின்றோம்.
குருவிடத்தில் ஆசிர்வாதம் பெறும் சமயம் நேராக நிமிர்ந்து
நின்று, நேர் பார்வையுடன், நீங்கள் எதனைப் பெற வேண்டும் என்று எண்ணி வந்தீர்களோ அந்த
ஏக்கத்தில் வலுவான நிலையில் ஆசி பெறுதல் வேண்டும்.
உதாரணமாக, தொழில் வளம் பெற வேண்டும், நோய் நீங்கி நலம்
பெற வேண்டும், மனக் கவலைகள் அகல வேண்டும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும், புத்திரபாக்கியம்
பெற வேண்டும், மகள் திருமணம் நடைபெற வேண்டும், என எண்ணியிருப்பீர்களானால் அவைகளை துருவ
நட்சத்திரத்தின் அருள்சக்தியால் பெற வேண்டும் என ஏக்கமுடன் மனதில் எண்ணி, பெற வேண்டும்
என்ற எண்ண வலுவுடன் ஞானகுருவிடம் அருளாசி பெற வேண்டும்.
குரு அவர்கள் எப்பொழுதும் நீங்கள் நலம் பெற வேண்டும்,
உங்களை அறியாது இயக்கும் தீய உணர்வுகளில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும், நீங்கள்
எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை
எண்ணி சதா தவமிருந்து கொண்டே இருக்கின்றார்கள்.
நாம் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அந்தச் சக்தி பெறவேண்டும்
என்ற உணர்வுடன் ஏங்கி ஆசிர்வாதம் பெறும் பொழுது, நமது இன்னல்கள் நீங்கி, பொருள் கண்டுணர்ந்து
செயல்படும் நிலையினை நமக்குள் உருவாக்கும்.
மன மகிழ்ச்சியினை நமக்குள் ஏற்படுத்தும்.
ஞானகுருவின் பாதங்களில் விழுந்து வணங்குவதைத் தவிர்க்க
வேண்டும். பாத நமஸ்காரம் என்பது அரசர்களால் உருவாக்கப்பட்டது. அது நமக்குத் தேவை இல்லை.
நமது தாய் தந்தைக்குத்தான் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.
குரு அவர்கள் உபதேசிக்கும் பொழுது அதைக் கூர்ந்து கேட்டு,
அவர் உபதேசிக்கும் உணர்வின் ஆற்றல்கள் அனைத்தும் நம்முள் பதிய வேண்டும் என்ற ஏக்கத்தில்
உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.
அப்படி உற்றுக்
கேட்பதினால் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகள் நம்மில் பதிவாகின்றது.
நாம் தியானித்து “ஆத்ம சுத்தி” செய்யும் சமயங்களில் அவ்வுணர்வுகள்
நம்மிடம் பெருகி நம்மை அறியாது நம்மை இயக்கும் தீமையை விளைய வைக்கும் உணர்வுகளில் இருந்து
நாம் விடுபட முடிகின்றது.
அதனால் உங்களுக்குள் மன மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
ஆகவே, மேல் கண்ட முறைகளில் நீங்கள் உங்கள் எண்ணத்தைச்
செலுத்தி, அவ்வழியில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற பிரார்த்திக்கின்றோம்.
குருவின் துணையால் விண்ணின் ஒளியை அடைவோம்.