ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2016

இரு மனமும் “ஒரு மனமாகும்” திருமணம் இரு உயிரும் “ஒரு உயிராகும்” திருப்பூட்டு

திரு + மணம் = திருமணம்
(மிக மிக உயர்ந்த மணம்)
திரு + பூட்டு = திருப் பூட்டு
(இரு உயிரையும் இணைக்கும் பூட்டு)
..
திருப்பூட்டு வைபவம் என்பது இனியதொரு விழா. அந்த இனிய வாழ்வில் அம்மி மிதித்து அருந்ததி பார் என்று மணமக்களிடம் கூறுவார்கள்.

அவ்வாறு கூறுவதன் உண்மை நிலையைப் பார்ப்போம்.

பல பொருள்களை வைத்து அம்மியில் அரைப்பதன் மூலம் எல்லாம் கலந்து ஒன்றுடன் ஒன்று இணைந்து  புது மணமுள்ள பொருளாக வெளிப்படுகின்றது.

அது போன்று மணமக்களான இருவரின் மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ்ந்து அருந்ததி போன்று மகிழ்ந்த உணர்வுகளுடன் வாழ்வில் இருள் நீங்கி பொருள் காணச் செய்யும் நிலைக்காகவே “அம்மி மிதித்து அருந்ததி பார் என்று கூறுவார்கள்.

மணமக்கள் வசிஷ்டர் அருந்ததி போன்று ஒரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்களால் திருப்பூட்டு வைபவங்கள் உண்டாக்கப்பட்டன.

ஆனால், இடைக்காலத்தில் திருப்பூட்டு வைபவங்களில் யாகங்களும் மந்திரங்களும் சம்பிரதாயங்களும் நுழைந்து கொண்டன.

யாகம் என்பது எது? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். யாகம் என்பது நெருப்பை உண்டாக்கி அந்த நெருப்பில் மணமுள்ள பல பொருள்களைப் போட்டு எரிப்பதல்ல.

நமது உயிர் ஒரு நெருப்பு. அதில் உயர்ந்த நல் எண்ணங்களைப் போடும் பொழுது உயிரான நெருப்பு அந்த எண்ணங்களைச் சமைத்து நமது உடலாக மாற்றி நறுமணமுள்ள உணர்வுகளாக வெளிப்படுத்துகின்றது.

அதுவே நமது எண்ணம் சொல் செயல்களாக வெளிப்பட்டு நம்மைப் புனிதப்படுத்துகின்றது என்ற உண்மைத் தத்துவங்களை உணர்த்தவே நமது முன்னோர்கள் திருப்பூட்டு வைபவங்களை உண்டாக்கினார்கள்.

இதனின் உண்மையை நாம் அறிய வேண்டும்.

திருப்பூட்டு வைபவம் நடைபெறும் இடத்தில் கூடியிருக்கும் அனைவரும் ஒன்று பட்டு ஒரே நிலையில் கீழ்க்கண்டவாறு எண்ணுதல் வேண்டும்.

மணமக்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று ஒன்றுபட்டு வாழ வேண்டும். அவர்கள் வாழ்வில் இனிமையும் அன்பும் நிறைந்திருக்க வேண்டும் என்று ஏகோபித்த நிலையில் எண்ணி அந்த அலைகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

இவ்வாறு எண்ணும் பொழுது அந்த உணர்வின் அலைகள் மண்டபம் முழுவதும் நிறைந்து மண்டபத்தில் நல் மணங்கள் படர்ந்து அது மணமக்களிடத்தில் வலு நிறைந்ததாகச் சேர்ந்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் இனிமையும் அன்பும் நிறைந்ததாக இருக்கச் செய்யும்.

திருமணக் காலங்களில் நீங்கள் சென்றால் மற்றவர்களை வேடிக்கை பார்க்கும் நிலைகள் இல்லாதபடி நண்பர்கள் கிடைத்துவிட்டால் அவர்களிடம் நம் சொந்தக் கதைகளைப் பேசிக் கொண்டிருக்காமல் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் அமர்ந்திருங்கள்.

இன்றையக் காலங்களில் சாங்கிய முறையில் தான் திருப்பூட்டுகின்றார்கள். சாங்கியத்தை வைத்துத் திருமணம் நடப்பதை “இது சரியா.., அது சரியா.., என்று அதைக் குறையாக எண்ண வேண்டாம்.

சாங்கியம் செய்வது பற்றி எண்ணாது துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற அந்த உணர்வை அமைதி கொண்டு உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி மணமக்கள் பெறவேண்டும். வசிஷ்டரும் அருந்ததியும் போன்று அவர்கள் வாழ்ந்திட வேண்டும் என்று எண்ணுங்கள்.

மணமக்கள் அன்னை தந்தையரை மதித்து அன்னை தந்தையரின் அரவணைப்பில் என்றுமே ஒன்று சேர்ந்து இணைந்து வாழ்ந்திட வேண்டும்.

மணமக்கள் இருவரும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் ஒரு மனமும் ஒரு மனமாகி, இரு உணர்வும் ஒன்றாகி, இரு உயிரும் ஒன்றாகி இணைந்து வாழ்ந்து வளர்ந்திட வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எண்ணத்தால் எண்ணி “உங்கள் பார்வையை மணமக்களுக்குப் பாய்ச்சி வாழ்த்துங்கள்.

இதே போல் உறவினர்கள், நண்பர்கள் ஒன்று சேர்ந்து திருப்பூட்டு நடக்கும் காலங்களில் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று அந்த உணர்வை ஏங்கிப் பெற்று மணமக்களை வாழ்த்திப் பழகுங்கள்.

தற்காலத்தில் திருமணங்கள் மிக ஆடம்பரமாகவும் தேவைக்கு அதிகமாகச் செலவு செய்யும் நிலை தான் உள்ளது.

மேலும் வரதட்சணை என்ற பெயரில் பணம் நகைகள் கேட்டு அதனால் கடன் தொல்லைகள் அதிகமாகி குடும்பத்திலுள்ளோர் வேதனையுடன் வாழும் நிலைகள் தான் இன்றைய சமுதாயத்தில் இருக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும். ஞானிகள் உணர்த்திய வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

அந்த மகரிஷிகள் உணர்த்திய அருள் வழிகளைக் கடைப்பிடித்து நம் இல்லத் திருமணங்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைப் படரவிட்டு மணமக்களை மெய் ஞானிகள் வாழ்ந்த வாழ்க்கை வாழ்ந்திட ஆசீர்வதிப்போம்.