பலருடைய இச்சைகளிலும் பல தீமைகளிலும் பல மதங்களின் இணைப்பிலும்
அரசியல் பேத நிலைகளிலும் நாம் வாழும் வாழ்க்கையில் நமக்குள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால்
விளைந்திட்ட உணர்வின் தன்மைகள் கொண்டு நாம் மீள முடியாத துயரத்தில் சிக்கியிருக்கின்றோம்.
நம் காற்று மண்டலம் மிகுந்த நச்சுத் தன்மையாக இருக்கின்றது.
உலக மக்களின் அறிவின் தன்மையில் மெய் ஒளி காணும் தன்மை மறைந்துவிட்டது.
இன்றைய உலகில் மன பேதம் இன பேதம் மொழி பேதம் அரசியல் பேதம்
என்ற நிலைகள் மனித வாழ்க்கையில் உருப் பெற்று வளர்ந்துள்ளது.
அதன் வழிகளில் மனிதனை மனிதன் கொல்லும் நிலைகளும் இரக்கமற்ற
செயல்களில் சிறு குழந்தைகளைக் கூடக் கொன்று இரசிக்கும் உணர்வின் நிலைகள் தான் மனிதனுக்குள்
விளைந்து இருக்கின்றது.
அதே சமயத்தில் மகரிஷிகள் காட்டிய அருள் வழிகள் அனைத்தும்
காலத்தால் மறைந்து விட்டது. மனிதர்களுக்கு அதனை அறியும் தன்மையே அற்றுப் போய்விட்டது.
விஞ்ஞான அறிவால் பெரும் இருண்ட உலகமாக நமது பூமி மாறி
வரும் இவ்வேளையில் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தீமைகளின் தன்மையைப் பிளந்து
நம் உணர்வின் தன்மையை மெய் ஞான உலகமாக நாம் மாற்ற முடியும்.
நமக்குள் விளைந்திடும் உணர்வுகளால் பிற்கால சந்ததிகளின்
நிலைகளும் மெய்ஞான உலகைச் சிருஷ்டிக்க முடியும். உங்கள் குடும்பத்தைச் சார்ந்தோரும்
இந்த நிலை பெறுவார்கள்.
குடும்ப வாழ்க்கையில் அருள்ஞானத்தைப் பின்பற்றி துருவ
நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை நாம் ஈர்த்தெடுத்துக் கூட்டமைப்பாகத் தியானித்தோம்
என்றால் அந்தச் சக்தி கருவில் வளரும் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.
விஞ்ஞான அறிவால் ஏற்படும் தீமைகளை அழித்திடும் உணர்வின்
தன்மை கொண்டு மெய்ஞானியின் உணர்வில் வளர்ந்து உலகில் இருள் சூழ்ந்த நிலைகளை அழித்திடும்
தன்மை பெற்ற குழந்தைகளை நாம் உருவாக்க முடியும்.
மகரிஷிகள் தோன்றுவார்கள்
ஆகவே, கருவிலே விளையும் குழந்தைகளுக்கு அந்த மெய்ஞானிகளின்
உணர்வைப் “பதிவு செய்..,” என்றார் குருநாதர்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஆற்றல் இங்கே விளைய விளைய
இருள் நீக்கிப் பொருள் காணும் தன்மை வளரும். இதன் உணர்வு கொண்டு குழந்தைகள் பிறக்கப்
பிறக்க மகரிஷிகள் தோன்றுவர்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உலகில் விளையும், “இந்த
உலகம் உய்யும்” என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தியுள்ளார்.
திருஞான சம்பந்தர் நான்கு வயதிலே அருள்ஞானத்தின் நிலைகளை
எப்படிப் பெற்றாரோ இதைப் போல இக்காலங்களில் தியானம் செய்யும் குடும்பங்களில் கருவுற்று
வளரும் குழந்தைகள் அனைத்தும் ஞானக் குழந்தைகளாகப் பிறக்கும்.
அவர்கள் வளர வளர நமக்குப் பாதுகாப்பின் நிலைகள் உருவாகும்.
“தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி” என்று சொன்ன அகஸ்தியமாமகரிஷி கண்டுணர்ந்த உணர்வுகள் இந்தக் குழந்தைகளிடம் விளைவதைக்
காணலாம்.
மனிதனாக இருக்கும் நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும்
நம் உயிர் (ஈஸ்வரன்) கடவுளாக நின்று அந்த உணர்வின் சத்தை உடலாக்குகின்றது.
நாம் ஒரு நெல்லைக் கொண்டு பயிர் செய்தோம் என்றால் அந்தப்
பயிரின் தன்மைகள் பல நெல்களாக விளைச்சல் தருகின்றது. ஆகவே, அருள் உணர்வின் தன்மைகளை
நமக்குள் பெருக்கிக் கொள்ள நாம் தியானிப்போம்.
எங்கள் குடும்பங்களில் கருவில் வளர்ந்து வரும் குழந்தைகள்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா.
எங்கள் குழந்தைகள் உலக அறிவின் ஞானம் பெற அருள்வாய் ஈஸ்வரா.
எங்கள் குழந்தைகள் உலகில் இருளான உணர்வுகளை நீக்கிடும்
அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.
எங்கள் குழந்தைகள் உலகில் பொருளறிந்து செயல்படும் திறன்
பெற அருள்வாய் ஈஸ்வரா.
எங்கள் குழந்தைகள் உலகைக் காத்திடும் அருள்ஞானம் பெற அருள்வாய்
ஈஸ்வரா.
எங்கள் குழந்தைகள் அருள் மகரிஷிகளின் அருள் ஞான சக்தி
பெற அருள்வாய் ஈஸ்வரா.
உலகில் என்றென்றும் இந்தக் குழந்தைகள் மகரிஷிகளாக வளர்ந்து
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் உலகைக் காத்திடும் நிலைகள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
தியானமும் தவமும்
மன பேதமின்றி மொழி பேதமின்றி மத பேதமின்றி அரசியல் பேதமின்றி
நாங்கள் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.
எந்த ஆட்சி இருந்தாலும் மன பேதமில்லாது அரசியல் பேதமில்லாது
மக்களுக்காக ஆட்சி புரிந்திட அருள்வாய் ஈஸ்வரா.
மனிதர்களைக் காத்திடும் எண்ணம் ஓங்கி வளர்ந்திட அருள்வாய்
ஈஸ்வரா.
மனிதர்களுக்குள் அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும்
அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.
மனிதனை மனிதன் என்று மதித்திட அருள்வாய் ஈஸ்வரா.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்தப் பூமி முழுவதும்
படர்ந்து விஞ்ஞான அறிவால் காற்று மண்டலத்தில் கலந்துள்ள நச்சுத் தன்மைகள் அகன்றிட அருள்வாய்
ஈஸ்வரா.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி விண்வெளியிலும்
பரவிப் படர்ந்து விஞ்ஞான அறிவால் ஏற்பட்ட நஞ்சின் தன்மை விண்வெளியில் கரைந்திட அருள்வாய்
ஈஸ்வரா.
இவ்வாறு நாம்
தியானித்து ஏங்கி எடுக்கும் இந்த உணர்வுகள் உலக மக்கள் அனைவரின் உடலிலும் படர வேண்டும்
என்று தியானிப்போம். கூட்டுத் தியானங்களில் தியானிப்போம்.
இதே உணர்வின் நினைவு கொண்டு இரவு படுக்கச் செல்லும் முன்னும்
காலையில் எழுந்தவுடன் எல்லோரும் தியானித்து இனி வரும் காலங்கள் அருள் உலகமாக மெய் உலகமாக
உருவாகிவிட வேண்டும் என்று தவமிருப்போம்.
துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நமக்குள் பெற்று
இந்தப் பூமியில் படர்ந்துள்ள தீமையான சக்திகளை அகற்றிடும் நிலையாக நாம் இனிமேல் செயல்படுவோம்
என்று உறுதி கொள்வோம்.
இதைப் படித்துணர்ந்தோர் குடும்பங்களில் கருவுற்றிருந்தால்
மகரிஷிகளின் அருளாற்றலை எடுத்து அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்குங்கள்.
அவர்களின் எண்ணத்தால் வலுக் கொண்ட நிலை கொண்டு உலகில்
தீமைகளை அகற்றிடும் ஞானிகளாக பெரும் மகரிஷிகளாகத் தோன்றிடுவார்கள்.
அருள்ஞான மகரிஷிகளின் நிலைகள் அங்கே விளைந்திடும்.
அதன் வழிகளில் நாம் பிறவியில்லா நிலை அடைவதற்கும் அடுத்து
வரும் நிலைகளைப் புனிதப்படுத்தும் நிலையாக உருப் பெரும்.
ஆகவே, துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெறுவோம்.
நம் பேச்சால் மூச்சால் கூட்டுத் தியானத்தின் ஒளி/ஒலி அலைகளால் துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை இந்தப் பூமியில் படரச் செய்து தீமைகள் உருவாக்கும் சக்திகளை மறையச் செய்வோம்.
நம் எண்ணத்தால்
நம்மைக் காப்போம்
நம் எண்ணத்தால்
நம் குடும்பத்தைக் காப்போம்
நம் எண்ணத்தால்
நம் ஊரைக் காப்போம்
நம் எண்ணத்தால்
நம் நாட்டைக் காப்போம்
நம் எண்ணத்தால்
நம் தாய் பூமியைக் காப்போம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா..,
ஓம் ஈஸ்வரா குருதேவா.., ஓம் ஈஸ்வரா குருதேவா