ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 22, 2014

காசிக்குச் சென்றால் பாவம் போகுமா...?

தாய் தந்தையரின் அருளாசி இல்லாது நமக்கு உயர்வு இல்லை
தாயின் அன்பினாலும்,
தந்தையின் அரவணைப்பினாலும் நாம் வளர்ந்தோம்.
அந்தத் தாய் தந்தையரின் அருளாசி இல்லாமல் நமக்கு உயர்வு கிடையாது. உயர்ந்த சக்தி பெறமுடியாது.

தாய் தன் குழந்தை உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று சதா தன் எண்ணத்தை வலுப்படுத்தியவர். ஆகவே, தாய் தந்தையரை நாம் முதல் தெய்வங்களாக வணங்கி நம்முள் நல் உணர்வின் எண்ணங்களை வலுப்படுத்துவோம்.

நம் தாய் தந்தையர் தெய்வ சக்தி பெறவேண்டும் என்று தியானிப்போம்.
ஐந்து புலனறிவு – பஞ்ச பாண்டவர்கள்
சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய வெப்பம், காந்தம், விஷம் இவை இணைந்து தனக்குள் ஈர்த்துச் சேர்த்துக் கொண்ட மணம், உணர்வு என்ற நிலையில் ஐந்து புலனறிவு கொண்டதாக இயங்குகிறது.

இவ்வாறு இயங்குகிறது என்பதற்கு “பஞ்ச பாண்டவர்” என்று காரணப் பெயரிட்டார்கள் ஞானிகள்.
அர்ச்சுனனுக்கு கண்ணன் சாரதியாக இருந்தான்
அர்ச்சுனன் என்பது உடலின் உணர்வுகள்.

கண்ணன் எனும் கண், தான் பார்த்த உணர்வு கொண்டு சாரதியாக இருந்து உடலின் உணர்வுகளை இயக்குகின்றது என்பதை மக்கள் அனைவருக்கும் உணர்த்திடும் நிலையாக ஞானிகள் அன்று கண்ணன் அர்ச்சுனனுக்கு சாரதியாக இருந்தான் என்று காவியமாக உரைத்தனர்.
மனித உணர்வின் இயக்கத்தின் நிலைகள்
தான் செல்வத்தை வைத்துக் கொண்டு இதைத் திருடிச் செல்ல,
“திருடன் வந்துவிடுவானோ..,
திருடன் வந்துவிடுவானோ..?”
என்று அச்சத்தின் உணர்வுகளை ஒருவர் தனக்குள் வளர்க்கும் பொழுது இந்த அச்சத்தின் உணர்வுகள் பரத்தில் (வெளியில்) பரவி, திருடனை இவரிடம் அழைத்தே வந்துவிடும்.

இது மனித உணர்வின் நிலைகள்.
சேவற்கொடியோன் - விளக்கம்
அதிகாலையில் கூவி, அன்று விடியப் போவதை முன் கூட்டியே அறிவிக்கும் சேவலைப் போன்று,
நமது ஆறாவது அறிவானது
நாளை என்ன நடக்கும் என்பதை
முன் கூட்டியே உணர்த்தும் தன்மை வாய்ந்தது.

ஆகையால், ஆறாவது அறிவின் வடிவான முருகனை சேவற்கொடியோன் என்று காரணப்பெயர் வைத்து அழைத்தனர் ஞானிகள்.
தீமைகளை வேகவைத்தால் அவை வளரமுடியாது
தாவர இன வித்துக்களை வேக வைத்து நிலத்தில் போட்டால் அவ்வித்துக்கள் முளைப்பதில்லை.

இது போன்றே தீமை தரும் உணர்வுகளை நாம் அறியாது நுகர நேர்ந்தால் உடனே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணினால், நகர்ந்த அந்த அருள் உணர்வுகள் நாம் நுகர்ந்த நஞ்சான உணர்வுகளை ஒடுக்குகின்றது.

நஞ்சான உணர்வுகள் நமக்குள் விளைவதில்லை.
கொசு மனிதனாகின்றது? நாம் எப்படி மகரிஷி ஆகவேண்டும்?
மனித இரத்த வாசனையைக் கண்டு
மனிதர்களையே சுற்றி வந்து மனிதர்களைக் கடிக்கும் கொசு,
அது இறந்தபின் கொசுவின் உயிரான்மா
மனித ஈர்ப்புக்குள் சென்று அடுத்து மனித சரீரம் பெறுகின்றது.

இது போன்று, மகரிஷிகளின் அருள் ஒளியின் உணர்வுகளை எண்ணி ஏங்கி தம்முள் வளர்ப்பவர் அருள் ஒளியின் ஆற்றலைத் தம்முள் பெறுவார்கள்.
சந்தர்ப்பத்தை உருவாக்கும் திறன் பெற்றவன் மனிதன்
பிரபஞ்சத்தில் சூரியனின் இயக்க உணர்வுகள்
சந்தர்ப்பத்தால் மோதும்போதுதான் உருமாற்றங்கள் ஏற்படுகின்றது.

ஆனால், மனிதர்கள் அந்த சந்தர்ப்பங்களை உருவாக்கும் திறன் பெற்றவர்கள்.
நாம் எதை எண்ணி ஏங்கி எடுக்க (சுவாசிக்க) வேண்டும்?
பட்டுப் புழு தன்னைச் சுற்றி கூடு கட்டி,
தான் கட்டிய கூட்டிற்குள்ளேயே அடைபட்டுவிடுகின்றது.

பின், தான் கூட்டிலிருந்து வெளியில் வரவேண்டும் என்ற உணர்வை எண்ணி ஏங்கி எடுத்து பட்டுப் பூச்சியாக உருமாறி வெளிப்படுகின்றது.

இதைப் போன்று துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கி தியானிக்கும்பொழுது துருவ மகரிஷிகளின் அருள் சக்தியினை நாம் பெறும் பருவம் பெறுகின்றோம்.

அப்பொழுது, இந்த உடலைவிட்டு அகன்றால் நாம் என்றும் பதினாறு என்ற அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.
காசிக்குச் சென்றால் பாவம் போகுமா?
பாவத்தைத் தொலைக்க இராமேஸ்வரம், காசி கங்கை போகிறேன் என்று சொல்கிறார்கள். அப்படிப் போனால் நமது பாவங்கள் அனைத்தும் போய்விடுமா?

நமக்குள் அருள் உணர்வுகளைப் பெருக்கும் பொழுதுதான் பாவங்கள் தொலையும். மகிழ்ச்சியின் உணர்வுகள் பெருகும்.