ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2014

உதிரப்போக்கை நிறுத்தினார் குருநாதர்

ஒரு சமயம், தனது மனைவிக்கு இரத்தப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது, அதை குணப்படுத்த வேண்டும் என்று  எம்மைத் தேடி ஒருவர் வந்தார்..

நோய் பெண்மணிக்கு. ஆனால் அந்தப் பெண்மணியின் கணவர்தான் வந்திருந்தார். அவர் தனது மனைவிக்குத் தொடர்ந்து உதிரப் போக்கு போய்க் கொண்டிருக்கின்றது. டாக்டர்கள் இதனைக் குணப்படுத்த முடியாமல் கைவிட்டு விட்டார்கள் என்று கூறினார்.

தனக்குக் கண்ணில்லாத குழந்தை ஒன்றும், மற்றும் ஐந்தாறு குழந்தைகள் இருப்பதாகவும் இவர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டி இருக்கின்றது. ஆகவே, நீங்கள்தான் எனது மனைவியை குணப்படுத்தித் தரவேண்டும். உங்கள் குருநாதரிடம் சொல்லி மருந்து தாருங்கள் என்றார்.

அப்பொழுது, குருநாதர் எமக்குக் காட்சி கொடுத்து, எம்மிடம் பேசிக் கொண்டிருந்தார்.

யாம் இதன் விவரங்களை குருநாதரிடம் கேட்கப்படும் பொழுது, முருகன் வருகின்றார். ஆறாவது அறிவின் தன்மை பெற்று நீ இங்கே வா என்றார். 

இந்த ஆறாவது அறிவைச் சரியாகப் பயன்படுத்தாதினால் உருவான நிலை என்ன?

இவர்கள் சொன்ன குறை மேல் எமக்கு ஆசை வருகின்றது.  குழந்தைகள் சிரமப்படுகின்றார்கள் என்று சொல்லும் பொழுது  குருநாதர் காட்சி தருகின்றார்.

இப்பொழுது முருகனைக் காண்பித்து, அதன் பின்பக்கமாக குருநாதர் காட்சியில் வந்து சிரிக்கின்றார்.

யாம் குருநாதரிடம், அவர்களுடைய வீட்டில் ஐந்தாறு குழந்தைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு குருட்டுக் குழந்தையும் இருக்கின்றது. நாளை அவர்கள் இறந்து போனால் அவர்களுடைய குழந்தைகள் தவிப்பார்கள்.

அவர்கள் வருத்தமாகச் சொல்கிறார்கள், நீங்கள் சிரிக்கின்றீர்கள் என்றோம்.

போய்.., ஓமப்பொடி வாங்கிவா என்று, குருநாதர் எம்மிடம் கோபமாகச் சொன்னார்.

எமக்குக் கோபம் வந்து விட்டது. சாமி, அவர்கள் வேதனையாக இருக்கிறார்கள், நீங்கள் ஓமப்பொடி வாங்கிக் கொண்டு வரச் சொல்கிறீர்கள் என்றோம்.

எனக்குத் தெரியாது, நீ போய் ஐயப்பனைக் கேட்டுக்கொள் என்றார். குருநாதர்

காட்சியில் ஐயப்பன் வந்தார். ஐயப்பனிடம் கேட்டால், அவர் மௌனமாக இருக்கின்றார்.

நீ குருவையே எதிர்த்துப் பேசிவிட்டாய்,  இனி உன்னிடம் ஒன்றும் பேச மாட்டேன் என்று ஐயப்பன் கூறினார்.

குருநாதரிடம் யாம் கேட்டோம், ஐயப்பன் ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாரே என்றோம்.

அவர் எப்படிப் பேசுவார்? என்றார் குருநாதர்.

பின்னே யாரிடம் கேட்பது? என்றோம். யாம். குருவாகிய உங்களிடம் தானே கேட்க முடியும், 

யாம் என்ன தவறு செய்தோம்? தேடி வந்தவர்கள் நலம் பெறவேண்டும் என்று தானே கேட்டோம்,  என உரைத்தோம்.

நீ ஐயப்பனையே கேள் என்று குருநாதர் கூறிவிட்டார்.

பாவம், இந்தப் பெண்மணி இறந்ததென்றால், அவர்களுடைய குழந்தைகளெல்லாம் அனாதைகளாக நிற்கும். கண்ணில்லாத குழந்தையும் இருக்கின்றது, இவர்களை எல்லாம் பாதுகாக்க வேண்டுமல்லவா?

அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினோம் என்றால் அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வார்கள். ஆனால், குருநாதரும் ஐயப்பனும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

அதன் பிறகு, எமது மகள் மீராவைக் கூப்பிட்டோம். அப்பொழுது, மீரா சிறு வயது பெண். அப்பொழுது,  மீரா குருநாதரிடம் உரையாடினார்.

மீரா, எம்மைப் பார்த்து,
நீங்கள் குருநாதரிடம் முறை தவறிக் கேட்டீர்கள்.

குருநாதரிடம் கோபமாகப் பேசினால் எப்படி?

நோய் தீரவேண்டும் என்று கேட்டிருக்க வேண்டும், அதை விட்டுவிட்டு குருநாதரை அதிகாரம் பண்ணிக் கேட்கின்றீர்கள்.

அதிகாரம் செய்து வேண்டுமானால் நீ எடுத்துக் கொண்டு போ.., ன்று குருநாதர் மீராவுக்குக் காட்சி கொடுத்துக் கூறினார்.

அப்பொழுது, நோயாளியின் கணவர் ஓமப்பொடியை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

அந்தப் பெண்மணியை ஓமப் பொடியைச் சாப்பிடச் சொல் என்று மீரா மூலம் குருநாதர் கூறினார்.

அது எப்படி குணமாகும்? என்றோம் யாம். 

குருநாதர் தான் சொல்கிறார், ஆனால் அது எப்படி ஓமப்பொடி சாப்பிட்டுக் குணமடைய முடியும்? என்று  யாம் வாதிக்கின்றோம்.

இப்படி, மறுபடியும் விதண்டவாதம் செய்தவுடனே குருநாதர் மறுபடியும் மௌனமாகவே இருந்துவிட்டார்.

நீயே போய்க் காப்பாற்றிக்கொள்,  நீ குருவுக்கு மிஞ்சிய ஆளாக ஆகின்றாய் என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு நாங்கள் இருவருமே மௌனமாகி விட்டோம். இப்படி நான்கு மணி நேரம் ஆகிவிட்டது.

சாமி, என் மனைவிக்கு உடலிலிருந்து இரத்தம் முழுவதும் போய்விட்டது. டாக்டர்களும் கைவிரித்து விட்டார்கள். இன்றோ, நாளையோ என்று என் மணைவியின் நிலை இருக்கின்றது.
நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று  நம்பி வந்தால்,
குருநாதரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றீர்களே என்றார்
எம்மைத் தேடி வந்தவர்.

குருநாதரிடம் நோய் நீக்கும் வழியைக் கேட்டுக் கொண்டிருக்கின்றோம், அவர் கொஞ்சம்கூட கவனிக்கமாட்டேன் என்கிறார் என்றோம் யாம். இது எம்முடைய புத்திசாலித்தனம்.

அன்றைக்கு இருக்கக் கூடிய சூழ்நிலையில், இதனின் உணர்வுகள் எப்படி இயக்குகின்றது? என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

இதனைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர் ஒரு தேவர் அவர் எம்மை மாப்பிள்ளை.., மாப்பிள்ளை.., என்று அழைத்துக் கொண்டே வந்தார்.

என்னப்பா இது? நல்லையா நாயக்கர் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று நீ ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கின்றாய். என்னென்னவோ மந்திர வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றாய், இதெல்லாம் உனக்கு எதற்கு? என்று எம்மிடம் கேட்டார்.

நான் என்ன செய்ய வேண்டும்? என்று அவரிடம் கேட்டோம்.

நீ இது போன்ற மந்திர தந்திர வேலைகளைச் செய்யக் கூடாது. நீ மறுபடியும் வீட்டிற்கு வந்து வெளி வேலைகளுக்குச் சென்று, விறகுக் கடையும் கவனித்துக் கொள்ளவேண்டும் என்றார்.

தொடர்ந்து அவர், நீ பைத்தியத்துடன் சேர்ந்து சுற்றி இதையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றாய் என்று சப்தம் போட்டார்.

அப்பொழுது எனது மகள் மீரா எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. மீரா அவரைப் பார்த்து, கோபிக்காதீர்கள்.., குருநாதர் உங்களுக்கு லட்டு கொடுக்கின்றார் என்று சொன்னது.

அதற்கு அவர், என்ன பிள்ளை.., எங்கே கொடுக்கிறார்? என்று கேட்டார்.

முகர்ந்து பாருங்கள் வாசனை தெரியும் என்றது மீரா.

பக்கத்து வீட்டுக்காரர், எனக்கு ஒரு வாசனையும் தெரியாது, ஒரு கத்திரிக்காயும் தெரியாது, இதுவெல்லாம் யாரை ஏமாற்றுகிற வேலை? என்று கூறினார்.

இல்லை.., மறுபடியும் முகர்ந்து பாருங்கள், லட்டு வாசனை தெரியும் என்றது மீரா.

எனக்கு மூக்கடைத்துவிட்டது, வாசனை தெரியவில்லை என்று கூறினார் அவர்.

தாத்தா, குருநாதர் இப்பொழுது ஜிலேபி கொடுக்கின்றார், கொய்யாப் பழம் கொடுக்கிறார் என்று மீரா சொல்கிறது.

எதுவும் எனக்குத் தெரியாது, யாரை ஏமாற்றுகிறீர்கள்? கொய்யாப் பழத்தை கொண்டு வரச்சொல், என் கையில் கொடுக்கச் சொல் என்றார் தேவர்.

நீங்கள் முதலில் வாசனையைப் பாருங்கள், பிறகு கொடுக்கிறேன் என்றார். குருநாதர். இப்படி இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.

ஊரை எமாற்றி, எங்களைப் பைத்தியக்காரனாக்க விரும்புகிறார் உனது குருநாதர் என்று பேசினார் பக்கத்து வீட்டுக்காரர்.

மூக்கடைத்து விட்டது, வாசனை தெரியவில்லை என்றுதானே கூறினீர்கள். இப்பொழுது, நிஜமாகவே வாசனை தெரியும் பாருங்கள் என்று மீரா கூறிக் கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் நோயாளிப் பெண்மணியின் கணவர், என்னங்க.., நீங்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றீர்கள்? எனக்கு ஒரு நல்வழியைக் காண்பியுங்கள் என்று கூறினார்.

அதுதான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஓமப்பொடி கொடுங்கள், குணமாகும் என்று கோபமாக மீரா மூலம் கூறினார் குருநாதர்.

ஓமப்பொடி கொடுத்தால் நோய் குணமாகுமா? அது எப்படி? என்று நோயாளியின் கணவரும் கேட்டார்.

இது நடந்த நிகழ்ச்சி. குருநாதர், எமக்கு ஒவ்வொரு அனுபவத்தையும் நேரடியாகக் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து, முகர்ந்து பாருங்கள் வாசனை தெரியும் என்று திரும்பவும் மீரா கூறியது.

எனக்கு ஒரு வாசனையும் தெரியாது, மூக்கடைத்து விட்டது என்று நான் சொன்னால் திரும்பத் திரும்ப இதையே கூறுகின்றாயே என்று கேட்டார்.

குருநாதர் சிரித்துக் கொண்டே.., இப்பொழுது அழுத்தமாக உறிஞ்சிப் பாருங்கள் என்றார்.

பக்கத்து வீட்டுக்காரரும் அது போன்று செய்யவே நச்..,, நச்.., என்று பெரிய தும்மலாகத் தும்மினார்.

அவர் வெற்றிலையும், புகையிலையும், எப்பொழுதும் வாயில் போட்டு மென்று கொண்டிருப்பவர். இந்தத் தும்மலினால் அவர் வாயில் இருந்த வெற்றிலை, அவருடைய வேஷ்டி சட்டையில் எல்லாம் விழுந்து கறை படிந்துவிட்டது. எம் மீதும், வெற்றிலைக் கறையாகிவிட்டது.

இப்படி சிறிது நேரம் தும்மிக் கொண்டே இருந்தார். பக்கத்து வீட்டுக்காரரும் மீராவைப் பார்த்து, ஏய் பிள்ளை, தும்மலை நிறுத்தச் செய்கின்றாயா, இல்லையா? என்று கேட்டார்.

எனக்கென்ன தெரியும்?  குருநாதரிடம் கேளுங்கள்,

முகர்ந்து பார்க்கச் சொன்னார். வாசனை இல்லை என்று சொன்னீர்கள். இப்பொழுது வாசனை தெரிந்ததல்லவா என்றாள் மீரா.

இது என்னவோ பெரிய வேலையாக இருக்கின்றது. உங்கள் குருநாதரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். தும்மலை நிறுத்தச் செய் என்று கேட்டுக் கொண்டார், தேவர்.

அது சமயம், ஓமப்பொடி வாங்கி வந்தவர், இது என்ன எல்லோரையும் ஏமாற்றுவது போன்று இருக்கின்றது.
உங்களுடைய குருநாதர் பைத்தியக்காரராக இருந்தார்.
உங்களுடைய வாழ்க்கையும் பைத்தியக்காரர் போன்று இருக்கின்றது.
நானும் போயும், போயும், உங்களைத் தேடி வந்தேன் என்று கூறினார்.

தேவரும், என்னால் தும்ம முடியவில்லை, மாப்பிள்ளை.., உன் குருநாதரிடம் சொல்லி, என்னுடைய தும்மலை நிறுத்து என்று எம்மிடம் கூறினார்.

யாம், எமக்கென்ன தெரியும்?, நீங்களே எமது குருநாதரைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்றோம்.

இதற்கு எமது மகள் மீரா, இனிமேல் இது போன்று சொல்ல மாட்டேன் என்று சொல்லுங்கள் என்று கூறியது.

இனிமேல் அப்படிச் சொல்வேனா! உன் குருநாதரிடம் சொல்லி என்னுடைய தும்மலை நிறுத்து என்றார்.

முக்கால் அல்லது ஒரு மணி நேரம் தும்மிக் கொண்டிருந்தார். எனக்கு வயிற்று வலி ஆகின்றது, உடலெல்லாம் வலிக்கின்றது, என்னை விட்டுவிடு என்றார்.

சரி..,, தும்மல் நின்று போகும், குருநாதர் இன்னொரு பொருள்  தருகின்றார், வாசனை பாருங்கள் என்று மீரா கூறியது.

கொடு பிள்ளை, கொடு என்றார் தேவர். உடனே தும்மலும் நின்றது.

தும்மல் நின்றதைப் பார்த்துக் கொண்டிருந்த ஓமப்பொடியை வாங்கி வந்தவர் எம்மிடம், நைனா..,, ஓமப்பொடி கொடுத்தால் குணமாகும் போலத்தான் தெரிகின்றதுநான்தான் பைத்தியக்காரன் என்றார்.

யாம் ஓமப்பொடியைக் கொண்டு போய், உனது மனைவிக்கு கொடு என்றோம்.

அவர் தைக் கொண்டு போய்க் கொடுத்தவுடனே, இரண்டு மூன்று மாதமாக இருந்து கொண்டிருந்த உதிரப் போக்கு நின்று போனது. குணமானவுடனே  ஓடி வந்து எங்களிடம் சொன்னார்.

அதன் பிறகு குருநாதர் எமக்குச் சொன்னார். ஐயப்பனிடம் எப்படிக் கேட்பது? நீ அவரையே மிரட்டுகிறாய், முருகனை மிரட்டுகிறாய், அதன் பிறகு, நான் என்ன சொல்ல வேண்டியிருக்கின்றது என்றார்.

நீ எப்படி இருக்கவேண்டும்?
குருநாதரிடம் எப்படிப் பேச வேண்டும்?
நீ என்னென்ன செய்ய வேண்டும்? 
என்று எமது மகள் மீராவிற்கு குருநாதர் காட்சி கொடுத்து,
மீரா மூலம் எமக்கு உபதேசம் கொடுத்தார்.

இவ்வாறு, அனுபவபூர்வமாகத்தான் எமக்குப் பல நிலைகளை உணர்த்தி, நாம் எவ்வாறு மெய் வழியில், குரு வழியில் செல்வது? என்று உபதேசித்தார். 

இதன்வழியில், குருநாதர் காட்டிய மெய் உணர்வுகளைக் கடைப்பிடித்து வருபவர்கள் அனைவரும்,
உங்கள் வாழ்க்கையில் இருள் நீங்கி
மெய்ப்பொருள் காணும் திறன் பெற்று,
நோய் நீங்கி, நோய் நீக்கிடும் அருள் சக்தி பெற்று,

குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடவும் என்றென்றும் அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடவும் எமது அருளாசிகள்.