ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2014

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மையின் நிலைகள் - 8

பிறரைப் பார்த்து நாம் அங்கலாய்த்தால் என்னவாகும்?
அங்காளேஸ்வரியின் சிலையைப் பார்த்தோமென்றால், அங்காளேஸ்வரி ஒரு குழந்தையைத் தன் மடியில் படுக்க வைத்து குழந்தையின் குடலை உருவுவதைப் போன்று சிலை வடித்திருப்பார்கள்.

காரணம், மனிதர்கள் சிலர் மற்றவர்கள் நம்மைவிட பல விதத்தில் முன்னேறும் பொழுது இவர்களுக்கு நம்மைவிட இவன் முன்னேறுகிறானே என்ற அங்கலாய்ப்பு வந்து விடுகின்றது.

இப்படிப்பட்ட அங்கலாய்ப்பு உணர்வுகளைத் தன்னுள் எடுக்கும்பொழுது, எடுத்துக் கொண்ட அங்கலாய்ப்பு உணர்வுகள்
அவர்கள் உடலில் குழந்தை போன்றிருக்கும்
நல்ல குணங்களைக் கொன்று விடுகின்றது
என்பதே ஞானிகள் உரைத்த உண்மை.
சித்திரபுத்திரன் கணக்கு
நாம் எதனின் காட்சியைக் கண்களால் காணுகின்றோமோ அது சித்திரம் ஆகின்றது.

கண்களால் கண்ட காட்சியின் உணர்வுகள் நமது சுவாசத்தில் கலந்து நம்முள் ஜீவ அணுவாக விளைந்துவிடுகின்றது. இது புத்திரன்.

ஆக, சித்திரபுத்திரன் கணக்குப் பிரகாரம் எமன் தண்டனை அளிக்கிறான் எனும்பொழுது
நாம் எதனின் உணர்வைக் கவர்ந்து
நம்முள் விளையச் செய்தோமோ
அதனின் உணர்வின் செயலாக நமது எண்ணங்கள் இயங்கி
நமது உணர்வின் எண்ணங்களுக்கொப்ப
நம்மை உயர்ந்தவோ தாழ்த்தவோ செய்கின்றது.
எமன் என்பது யார்?
மனிதரின் சொர்க்கத்தையும் நரகத்தையும் எமன்தான் தீர்மானிப்பதாகக் கூறுவார்கள்.

எமன் என்பது நமது எண்ணங்கள்தான். நமது எண்ணங்கள் நல்லதாக இருக்கும் பொழுது நமக்குள் நன்மையும், தீயதாக இருக்கும் பொழுது தீமையும் விளைகின்றது.

ஆகவே, நமது எண்ணங்கள் எப்பொழுதும் நமக்கும் பிறருக்கும் நன்மை தருவதாக இருக்க வேண்டும்.