ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 21, 2014

பழனியில் பித்தரைப் போன்று இருந்த ஈஸ்வரபட்டரின் சரித்திரம் (பூர்வாங்கம்)

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் மங்களூரில் ஏழ்மையான ஒரு குடிமகனாகப் பிறந்தார். ஈஸ்வர மங்களா என்ற ஊரில் ஒரு சிறு கோவில். அவர் தாய் தந்தையர் பூஜித்து வந்த ஆலயம் அது.

அன்னை தந்தையர் அந்த ஆலயத்தில் பூஜித்து வந்தாலும், இளமைப் பருவத்தில் ஐந்து அல்லது ஆறு வயதுள்ள போது தாய் தந்தையருடன் அந்த ஆலயத்திற்குச் செல்வது அவருடைய வழக்கம்.

ஆனால், அந்த ஈஸ்வர மங்களா என்பது ஒரு கிராமம். அங்கே பரம்பரையாக இன்று
ஒரு குழந்தைக்கு ஈஸ்வரன் என்றால்
அடுத்து இரண்டாவது தலைமுறைக்கும்
ஈஸ்வரா என்று பெயர் வரும்.

அதிலே இந்த மனை அந்த மனை என்று மனைகளுடைய பெயர்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள். அப்பொழுதுதான் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதற்காக அவ்வாறு செய்வார்கள்.

அவ்வாறு வளர்ந்த வந்த நிலையில் அவருடைய தாய் தந்தையர்கள் காலரா நோயில் சிக்கி மரணமடைந்து விடுகின்றார்கள். ஏழ்மையின் நிலையில் அவர் தவித்துக் கொண்டிருந்தார். மற்ற சொந்தக்காரர்களும் அப்பொழுது அவரைக் கவனிக்கவில்லை.

ஆக, அன்னை தந்தை நினைவு கொண்டு அவர்கள் பூஜித்து வந்த ஆலயத்தில் நினைவுகளைச் செலுத்தி, அந்த நிலையிலேயே தன் சிறிய வயதில் ஏங்கிக் கொண்டிருந்தார்.

அன்னை தந்தையரை இவர் ஆறு வயதிலேயே பிரிய நேர்ந்தாலும் அவர்கள் சொந்தக்காரர்கள் யாரும் இவரை அணுகி நேசிக்கவில்லை.

அவ்வாறு ஏழ்மையில் வாடிக் கொண்டிருக்கும் அந்த நிலையில் ஆனால், எதிர்பாராதவிதமாக ஆற்றல்மிக்க சக்தியே அங்கு அவருக்குள் இயங்கத் தொடங்கி, அந்த இளமைப் பருவத்திலேயே உலகம் முழுவதற்கும் அவர் சுற்றுப் பயணம் செய்துள்ளார்.

இளமைப் பருவத்தில் ஆதிசங்கரர் எவ்வாறு சென்றாரோ அதே போன்று, இவருடைய இளமைப் பருவத்தில் இவர் அறியாதபடியே பல ஆற்றல்களை இவர் பெற்றார்.

ஒவ்வொரு பாஷையும் இந்த பாஷைதான் என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கு அனைத்து பாஷைகளையும் அறிந்திடும் ஆற்றல் கொண்டு பல நிலைகளில் அவருக்குள் செயல்பட்டது.

ஐந்து அல்லது ஆறு வயதில் வெளியே கிளம்பி இந்த பூமி முழுவதும் வலம் வந்துள்ளார். இந்த பூமிக்குள் எத்தனை பாஷைகள் உண்டோ அத்தனையும் இவருக்குத் தெரியும்.

நமது சூரிய குடும்பத்தின் தொடர் கொண்ட 2000 சூரியக் குடும்பங்கள் உண்டு. இப்படி ஏனைய எத்தனையோ சூரியக் குடும்பங்கள் இருப்பினும் இந்த 2000 சூரியக் குடும்பங்களில் உயிரினங்கள் வளர்ச்சி பெற்ற சில பூமிகளும் உண்டு.

அதிலே இருக்கும் பாஷைகளையும் அங்கே நடக்கும் சம்பவங்களையும் அடிக்கடி அதைக் கண்டுணரும் சக்தியும் இவருக்குள் வந்துள்ளது.

ஏனென்றால், குரு எமக்கு இதையெல்லாம் முதலிலேயே சொல்லவில்லை. பின் அவருடைய நிலைகளை அறிய வேண்டும் என்று எண்ணும்போதுதான், அவருடைய வாழ்க்கையின் நிலையைப் பற்றி அதை ஒவ்வொரு நிலையிலேயும் எமக்கு உணர்த்தினார்.

அவர் எமக்கு உணர்த்திய ஒவ்வொரு நிலையையும் நீங்களும் அறிய முடியும், உணர முடியும்.

அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த உணர்வலைகள் இங்கே படர்ந்திருப்பதையும், அவர் கண்ட பேரண்டத்தின் நிலைகளையும் காணும் பாக்கியம் உள்ளோருக்கு (உங்களுக்கு) இது கிடைக்கவும் செய்யும்.

நான் கல்வியறிவு இல்லாதவன். நமது குருவும் அதே போன்று தான் அவர் கல்வியில் ஞானமில்லாதவர். ஏனென்றால், அவருக்குள் ஆட்கொண்ட ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டுதான் உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார்.

இந்த 2000 சூரியகுடும்பத்தின் உண்மை நிலைகளையும் உணர்ந்தறிந்தவர் நமது குருநாதர். அவர் அறியாது அவருக்குள் இருந்த ஆற்றல்மிக்க சக்தியின் நிலைகள் கொண்டு பேரண்டத்தின் நிலைகளை அவர் அறிய முடிந்தது.

இருப்பினும், அவர் பித்தரைப் போன்றுதான் இந்த உலகிலே உலாவிக் கொண்டிருந்தார். அதன் காரணத்தை யாம் அவரிடம் யாம் கேட்டோம்.

இந்தப் பித்தனான உலகிலிருந்து
மக்கள் பித்தைப் போன்று வாழ்க்கை வாழ்ந்திடும்
ஒவ்வொரு பித்து நிலைகளிலிருந்து
மக்கள் மீளவேண்டும் என்ற சிந்தனைதான் எனக்கு
என்று அப்பொழுது எமக்கு அடிக்கடி உபதேசிப்பார்.

நமது குருநாதர் இளமையிலே ஏழ்மையில் வாடிவந்த நிலையிலிருந்து தீமைகளிலிருந்து விடுபட்டு, அவர் உடலிலே விண்ணின் ஆற்றல்களைப் பெருக்கி அந்த உணர்வு கொண்டு ஒளியின் சரீரம் பெற்று, இன்றும் அவர் விண்ணின் ஆற்றலுடன் சுழன்று கொண்டுள்ளார்.

ஆகவே, பேரண்டத்தின் உண்மைகளை கண்டுணர்ந்த இயக்கம் அவருக்குள் இருந்தாலும், அதன் வழிகொண்டு
எதை எதை, எவ்வாறு பெறவேண்டும் என்று உபதேசித்து
எமக்குள் அதைப் பதிவு செய்தார்.

அவருக்குள் விளைந்த விண்ணிலே உள்ள சப்தரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகள் அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வின் அலைகள் எமக்குள் பதிவு செய்த அந்த சக்தி இங்கே படர்ந்து கொண்டுள்ளது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பெற்ற அந்த அனைத்து ஆற்றல்களையும் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை இப்பொழுது இங்கே உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

எமது குரு அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.