ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 13, 2014

ஞானகுருவின் பொன்மொழிகள் -- Quotes of Gnanaguru September 2014

30.09.2014
அனைவரையும் மகிழ்ந்திடும் நிலை பெறச்செய்து,
அந்த மகிழ்ச்சியின் தன்மையில்
நமது மகிழ்ச்சியின் தன்மையை
நம்மில் வளர்த்திடும் நிலை பெறவேண்டும்.
29.09.2014
“தன் உடலைக் காக்கும்” எண்ணத்தாலே பரிணாம வளர்ச்சியில் இந்த மனிதப் பிறப்பைப் பெற்றோம்.

இந்த மனிதப் பிறப்பில் “தன் உயிரான்மாவைக் காக்கும்” உணர்வை வளர்த்து ரிஷி நிலை பெறுவோம்.
25.09.2014
மின்னலைக் கண்டு லேசரைப் படைத்தவர் விஞ்ஞானி
மின்னலை நுகர்ந்து தன்னுள் ஒளியைப் பெருக்கியவர் அகஸ்தியர்

அகஸ்தியமாமகரிஷியின் அருளைப் பெற்று, நம்மிடம் உள்ள இன்னலைத் துடைப்போம்.
24.09.2014
மனதைச் சமப்படுத்த பக்குவம் தேவை
பக்குவம் பெறுவதற்கு அருள்ஞானம் தேவை
அருள்ஞானம் இருந்தால் தீமைகளை அடக்க முடியும்
தீமைகளை அடக்கினால் சிந்தனைத் திறனைப் பெறமுடியும்
சிந்தனைத்திறன் பெற்றால் செயல்திறனைப் பெறமுடியும்
23.09.2014
ஒர் நோயாளி தன் நோய் தீர வேண்டுமென்றால், மருத்துவர் தரும் மருந்தை கட்டாயமாக சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

இதே போன்று நம்முள் அறியாது சேர்ந்த நஞ்சான உணர்வுகளை நீக்க வேண்டுமென்றால், நமக்குள் கட்டாயப்படுத்தித்தான் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெருகச் செய்ய வேண்டும்.
22.09.2014
உயிரினப் பரிணாம வாழ்க்கையானது ஞானிகள் நமக்கு உருவாக்கிக் கொடுத்த பரமபத விளையாட்டு போன்றது.

பரமபத விளையாட்டில் ஏணிகளும் பாம்புகளும் விளையாட்டை நிர்ணயிப்பது போன்று, நமது பரிணாம வாழ்க்கையில்
நஞ்சான உணர்வுகளை நமக்குள் இணைக்கும்போது
இதனின் உணர்வுகள்
நம்மைக் கீழான பிறவிக்கு அழைத்துச் செல்கின்றது.

அருள்ஞானிகளின் உணர்வை நம்முள் இணைக்கும் பொழுது
பிறவா நிலை எனும் பெருவீடு பெருநிலையைப் பெறச் செய்கின்றது.
21.09.2014
எந்த வண்ணத்தில் நாம் மின் விளக்கைப் பொருத்துகின்றோமோ அந்த வண்ணத்தை ஒளிரச் செய்கின்றது எலக்ட்ரிக் (மின்சாரம்).

இதைப் போன்று நமது உயிரும் எலக்ட்ரிக்.

நமது உயிரில் அருள்ஞானிகளின் அருள் உணர்வுகளை இணைக்கும்பொழுது நமது உயிர் தன்னில் விளைந்த உணர்வுகளை இயக்கி நம்மிடத்தில் மெய்ப் பொருள் காணும் திறனைப் பெறச்செய்யும்.
20.09.2014
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
நம்மையெல்லாம் கடவுளாக்குகின்றார்
நம்மைக் கடவுளாக மதிக்கின்றார்
நாமெல்லாம் கடவுளாக ஆகவேண்டும்
என்று விரும்புகின்றார்.

அதனைத்தான் செயல்படுத்த அவர் காட்டிய நெறிகளில் நீங்கள் பெறவேண்டுமென்று அந்த உணர்வை இங்கே வழிகாட்டுகின்றார்.
19.09.2014
வளரும் குழந்தைகளுக்கு உணவுடன் அருள்ஞான உணர்வுகளையும் சேர்த்து ஊட்டி வளர்ப்பீர்களேயானால் அந்தக் குழந்தைகள் உலகைக் காக்கும் உத்தமஞானிகளாக, அருள்ஞானிகளாக உருவாகுவார்கள்
18.09.2014
உடலுக்கு ஊட்டம் தருவது பாதாம் பருப்பு கலந்த பால். ஆனால், அந்தப் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலந்தால் அது தன் சத்தினை இழந்து, முழுவதும் விஷத்தன்மையாக மாறி ஆளையே கொல்லும் தன்மை பெற்றுவிடும்.

இதைப் போன்றுதான், நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல உணர்வுகளில் நஞ்சான உணர்வுகள் கலந்தால் நல்ல உணர்வின் அணுக்கள் செயலிழந்து நம்மை வீழ்த்துகின்றது.

ஆகவே, அனுதினமும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் இணைத்து நம்மையறியாது வரும் நஞ்சான உணர்வுகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
17.09.2014
உங்களை நீங்கள் நம்புங்கள்
நீங்கள் எடுக்கும் உணர்வுதான் தெய்வம்
பேரண்டத்தின் பெரும் உணர்வுகள் உங்களுக்குள் உண்டு
மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசியுங்கள்
உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவட்டும்
உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காக்க உதவட்டும்

உலகில் மெய்ஞான அருள் ஒளி பரவட்டும்
16.09.2014
தயவு செய்து பிறருக்கு ஏற்படும் துன்பங்களையோ, வேதனைகளையோ பார்த்து சந்தோஷப்படாதீர்கள்.

பிறரின் துன்பத்தைப் பார்த்து, “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்” என்று சந்தோஷப்படுவீர்களானால் அதனின் உணர்வுகள் உங்களில் விளைந்து நோயாக உருவாகிவிடும்.
15.09.2014
சித்திரையாக சிறு திரையாக இருந்து நம்மில் மெய்பொருளைக் காணவிடாது தடைப்படுத்தும் நஞ்சான உணர்வுகளை, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வின் துணை கொண்டு நாம் நீக்குதல் வேண்டும்.
14.09.2014
விஞ்ஞானிகள் இரு உயிரினங்களின் அணு செல்களை எடுத்து ஒரு புதுவிதமான உயிரினத்தை உருவாக்குவது போன்று, அருள் ஞானிகளின் அருள் உணர்வை நம்முள் இணைத்து “அருள் ஒளியினை” நாம் உருவாக்க முடியும்..
13.09.2014
கடல் அலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட சிறு துரும்பு அலைகளால் அங்குமிங்கும் அலைக்கழிவது போல நாமும் நம் மனித வாழ்க்கையில் சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் அலைக்கழிக்கப்படுகின்றோம்.

துயர்மிகு இவ்வாழ்க்கையிலிருந்து காத்துக் கொள்வதற்காக மேலான மெய்ஞானத்தைப் பெறவேண்டும் என்று நாம் பாடுபடும் பொழுது மெய்ஞானிகளின் அருளை நாம் பெறமுடியும்.
11.09.2014
ஒருவரைத் தேள் கொட்டிவிட்டதென்றால், தியானம் எடுத்தவர்கள் அவர் கையில் ஏதாவது கொடுத்து வாயில் போடச் சொல்லி,
மரத்தில் கைகளை வைக்கச் சொல்லி
விஷம் இறங்கிவிடும் என்று சொன்னால்

அந்த விஷம் இறங்கிவிடும்
10.09.2014
கல்வி, விஞ்ஞானம் போன்றவைகள் நம் சமூக வாழ்க்கைக்கு மட்டுமே உதவ முடியும்.

மெய்ஞானம் ஒன்று மட்டுமே நம் ஆன்மாவுக்கு உயர்வு தரும். அந்த மெய்ஞானத்தை குருவின் அருளால்தான் பெறமுடியும்.

09.09.2014
இன்னும் அறிய வேண்டும் என்ற ஆவல் எழும் பொழுது அது ஞானத்தின் வளர்ச்சிக்கு உரமாகின்றது. அனைத்தும் தெரியும் என்கிற பொழுது அது ஞானத்திற்கு முற்றுப்புள்ளியாகின்றது.


பின், முன்னால் இருக்கும் உண்மைகள் கூட கண்ணால் காணமுடியாத நிலை உருவாகிவிடும்.

08.09.2014
நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் நம்முள் ஜீவ அணுக்களாக விளைந்து ஓம், ஓம் என்று இயங்கிக் கொண்டுள்ளன. இவைகளுக்கெல்லாம் ஈசனாக ஓமுக்குள் ஓமாக இருந்து இயக்குவது உயிர்.


சாபம் என்பது கொடிய விஷம் போன்றது.
சாபம் கொடுத்தவரும் கெடுவார்
சாபம் பெற்றவரும் கெடுவார்.
காலில் ஏறிய விஷம் தலை வரை பாய்வதைப் போன்று சாபம் பெற்ற்வர் மட்டுமல்லாது சாபம் பெற்றவரின் வாரிசுகளும் கெட்டழிவர்.