ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2014

அகஸ்தியரின் அற்புத சக்திகள் - நீர் சக்தி

1. நீர் நிலைகளைப் பெருக்கும் சக்தி பெற்றவர்
நமது பூமியில், உண்மையின் தன்மைகளைக் கண்டுணர்ந்த முதல் மனிதர் அகஸ்தியர். அகஸ்தியர் தம் வாழ்நாளில், தமது தாயின் கருவில் பெற்ற  பேரருள் துணை கொண்டு, மலைப் பகுதிகளில் உள்ள தாவர இனங்களின் உணர்வுகளை நுகர்ந்து அறிவதற்காக, பல பகுதிகளுக்குச் சென்றார்.

இந்திய எல்லைக்குள் எத்தனை மலைப் பகுதிகள் இருந்ததனவோ, அத்தனை மலைப் பகுதிகளிலும் அலைந்து திரிந்து ஒவ்வொரு தாவர இனத்தின் உணர்வுகளை நுகர்ந்து அறிந்தார்.

காவிரி என்று சொல்லும் பகுதியில்,  "பாகமண்டலம்"  என்ற ஒரு இடம் உண்டு.
அந்த பாகமண்டலத்தில், அகஸ்தியர் அமர்ந்து, தம்முள் விளைந்த சத்தினை அங்கே பரப்பப்படும்பொழுது, மேகக் கூட்டங்கள் வருவதை அங்கே அடக்கி, தமக்கு வேண்டிய நீர் நிலைகளை உற்பத்தி செய்து கொண்டவர் அகஸ்தியர்.

வறண்ட பிரதேசமாக இருந்த இடங்களுக்கு, அகஸ்தியர் சென்று அமர்ந்து தியானம் செய்ததன் காரணமாக, அங்கே மேற்பரப்பில் நீர் ஊற்றுக்கள் தோன்றின.

இப்படி,  அகஸ்தியர் சென்ற இடமெல்லாம், அவர் பாதம் பட்ட இடமெல்லாம், அகஸ்தியருடைய அருள் சக்தி மண்ணில் படரப்படும் பொழுது, நீரினைக் கவரும் ஆற்றல் பெற்றன.

ஏனென்றால் அகஸ்தியர், வேண்டிய நீரை, ஜீவ சக்தியைக் கவரும் சக்தி பெற்றவராக இருந்தார். இதனால் அவர் சென்ற இடமெல்லாம் நீர் நிலை பெருகி, செழிப்பின் தன்மையைப் பெற்றன. 
2. பல சஞ்சீவிகளையும், உணவுப் பொருள்களயும் உற்பத்தி செய்தவர் அகஸ்தியர்
மனிதர்களுக்குத் தேவையான பற்பல சஞ்சீவிகளையும், தாவர இனப் பொருள்களையும் உற்பத்தி செய்தவர், அகஸ்தியர் தான்.
அகஸ்தியர் அக்காலத்தில் தாம் கற்றுணர்ந்த உணர்வின் தன்மையை, தமது உடலில் விளைவித்த நிலைகள் கொண்டு, மனிதர்கள் உண்பதற்கு ஏற்ற கனிவர்க்கச் செடிகளை, தாவர இனங்களை உருவாக்கினார். நாவற்பழம் போன்று இருக்கும். அது அந்த காலத்தில், மனிதருக்கு உணவாக உட்கொள்ள உதவியது.

கொய்யாப்பழத் தாவர இனங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியானது என்று கூறுகின்றார்கள். காட்டுப் பகுதியில், கொய்யா மரத்தை ஆதியில் உருவாக்கியவர் அகஸ்தியர் தான். கொய்யா மரம், நம் நாட்டுச் சரக்குதான்.

காட்டுப் பகுதியில் விளைந்த கொய்யாப் பழங்கள், மலைவாசிகளுக்கு உணவுப் பொருளாக இருந்தது. வரகு என்று சொல்கின்றோமே, அந்த தானியமும் அகஸ்தியரால் உருவாக்கப்பட்டது தான்.

இன்னொன்று அரிசி போன்றே இருக்கும், ருசியாகவும் இருக்கும். அதை எடுத்து தேய்த்துச் சாப்பிட்டால், ரொம்ப ருசியாக இருக்கும்.  இவைகள் எல்லாம் மனித வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்று அகஸ்தியரால் செயல்படுத்தப்பட்ட நிலைகள்.

இது போன்ற நிலைகளை, எமக்குக் காண்பித்து உணர்த்தியவர் நமது குருநாதர் தான். யாம் உண்மையின் உணர்வை அறிவதற்காக, இத்தனையும் கொடுத்தார்.