ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2014

“எப்பொழுது பார்த்தாலும் இவன்/இவள் இப்படித்தான்” என்று குறையாகச் சொல்வார்கள் - உண்மை என்ன...?

1. “எப்பொழுது பார்த்தாலும் இவன் இப்படித்தான்” என்று குடும்பங்களில் குறை வந்துவிடும்
ஒவ்வொருவரும் குடும்பத்திலோ, மற்ற நிலைகளிலோ, நம்மையறியாமல், அடிக்கடி பேசுகின்றனர். அவர்கள் உடலில் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் சத்துக்கள், அவர்கள் உடலில் வேலை செய்துவிடுகின்றது. அவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றாலும், முடியவில்லை.

இப்பொழுது நாம் ஒவ்வொருவரும் நம் அனுபவத்தில் பார்க்கலாம். பையன் மேல் நாம் வெறுப்பாக இருப்போம். அவன் நல்லது செய்துவிட்டு வந்தாலும் கூட, லேட்டாகி விட்டது என்கிற பொழுது, அவனை நினைத்தவுடன், 
“அவன் எப்பொழுது பார்த்தாலும், இப்படித்தான் இருக்கிறான்”. 
ஒரு காரியத்திற்குப் போனால், லேட்டாகி, 
அந்தக் காரியத்தை முடித்தவிட்டு வருவான், என்று சொல்வோம்.

ஜெயித்துவிட்டு வந்தான் என்றால் கூட, ஏற்றுக் கொள்ள மாட்டோம். 
அவன் சென்று வந்த காரியம் என்ன என்று கேட்காதபடி, அவன் இப்படித்தான், எப்பொழுது சென்றாலும் லேட்டாக வருவான், என்று அவனைத் திட்டவும், பேசவும், ஏசவும்தான் செய்வோம்.

அவன் உண்மையைச் சொன்னாலும்கூட, ஏற்றுக் கொள்ள மாட்டோம். பொய் சொல்கின்றான் என்ற எண்ணம்தான் தோன்றும். அதைக் கேட்டு அறிவதற்கு தாமதமாகும்.

நாம் நல்லது நினைத்தாலும்கூட, நம்மையறியாமல்
அந்த உணர்வுகளை நிற்கச் செய்வோம்.
அந்த உணர்வின் தன்மை
அவனைக் கெட்டவனாக மாற்றச் செய்யும்.

இதைப் போன்று, ஒவ்வொரு குடும்பத்திலும், ஒருவர்பால் கெடுதலான எண்ணங்களை வைத்துவிட்டால், அந்த உணர்வின் பார்வையிலே பேசும் பொழுது,
நாம் என்ன நல்லது செய்தாலும்,
அந்த எண்ணங்களுக்குத் தப்பாகத்தான் தெரியும்.
2. உண்மையை அவர்கள் உணர வேண்டும் என்று எண்ணி
ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்
ஆகையினாலே, அதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டுமென்றால், “ஆத்ம சுத்தியை” நாம் முதலில் செய்து கொள்ள வேண்டும்.

ஆத்ம சுத்தி செய்து முடித்தபின், அவர்கள் "பேசிய" முறைகள், அவர்கள் "செய்த" முறைகள், அவர்கள் உணர்ந்து, அவர்களே அதை அனுபவித்துத் தெரிந்து கொள்ளும் ஆற்றல் பெறட்டும், என்ற இந்த உணர்வின் நிலைகளை நீங்கள் மனதில் எண்ணிக் கொள்ளுங்கள். வாயிலே சொல்லிவிடாதீர்கள். சொன்னால் வம்பு வந்துவிடும்.

உங்கள் எண்ணத்தால் இப்படி வளர்க்கச் செய்யும் பொழுது, அந்த உண்மையின் தன்மையை அவர்கள் அறியும் தன்மை வந்துவிடும். ஏனென்றால், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு, சோர்வோ, மனச் சஞ்சலமோ, வெறுப்போ அடைந்தால், இதைப் போன்ற உணர்வுகள் நம்மைப் பாதிக்காது.

நாம் எடுத்துக் கொண்ட இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள்
நம்மை அறியாமையிலிருந்து மீட்க,
நமக்கு அந்தச் சக்தி உதவும்.

குடும்பத்திற்குள், இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நிறைய உண்டு. மாமியாருக்கும், மருமகளுக்கும் பிடிக்காது. மகனுக்கு, அப்பாவைக் கூடப் பிடிக்காது. அந்த அளவிற்கு, இன்று பெரும்பகுதி ஆகிவிட்டது.

இன்றைக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே, அந்த நிலைதான். இதைப் போன்ற நிலைகளெல்லாம், நாம் ஒவ்வொரு நிமிடமும் நம் உணர்வலைகளை மாறாமல் இருப்பதற்கு, இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

யாம் வெறும் வார்த்தையில் சொல்கிறோம், என்று எண்ணி விடாதீர்கள். ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்கு வாக்காகக் கொடுத்து, உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்கு, இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்திருக்கிறோம்.