ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2014

நாம் விண்ணின் அங்கம், உடல் பூமியின் அங்கம் - முதல் பாடம்

1. நமக்கு எது பயிற்சி?
நமக்குள் என்ன நடக்கிறது? என்பதையும், 
எது நம்மை மாற்றுகிறது? என்பதையும், 
இவ்விதம் நம்மை நாமே அறிந்து, 
எப்படி வாழவேண்டும்? என்பதையும் அறிந்துணர்ந்து,
அருள்வழியில், குரு காட்டிய வழியில் நடப்பதுதான் பயிற்சி.

நான் (ஞானகுரு) சக்தி கொடுக்கிறேன்,  நீங்கள் பயிற்சி கொண்டு அதை எடுக்க வேண்டும். உங்கள் எண்ணம் எப்படியோ.,  என்னுடைய குறை அல்ல. நான் எப்படிச் செய்ய முடியும்?

உங்களுக்காக நான் சாப்பிட்டால் என் பசிதான் தீரும். நீங்கள் மீண்டு கரை ஏற வேண்டியது  உங்கள் தன் பலம் கொண்டு.
2. உயிரணு (நாம்) விண்ணின் அங்கம்,  உடல் பூமியின் அங்கம்
உயிரணு பூமிக்கு வந்து சேர்ந்ததும், தாவர இனச் சத்தைக் கவர்ந்து கருவாகி, பல கோடி சரீரங்கள் எடுத்தபின், மனிதனாகப் பிறப்பதற்குரிய அனைத்து உணர்வுகளின் தன்மைகளும் உயிரான்மாவில் இணைந்ததும், அவ்வுயிரணு அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் பொழுது, மனித உடலைப் பெறக்கூடிய தன்மை பெறுகின்றது. அப்பொழுது, பூமியில் நாம் மனிதனாகப் பிறக்கின்றோம்.

ஆக உயிருடன் ஒன்றி, இந்த மனித உடலை அல்லது உயிருடன் கூடிய இம்மனித உடலை, இந்த உயிர் தான் முன்னதாகவே நுகர்ந்தெடுத்து, இணைத்துக் கொண்ட உணர்வுகளின் தன்மைக்கொப்ப உடலை அமைத்துக் கொள்கின்றது.

இம்மனிதப் பிறவியில் இந்த உடலை எடுத்து வந்த உயிரணு,
சூரியனிலிருந்து வந்து,
அதன் ஒரு பகுதியாக, அதன் ஓர் அங்கமாக,
இந்த பூமியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆனால், உடல், இந்த பூமியில் பரமாத்மாவில் படர்ந்துள்ள
உணர்வுகளின் உறைவிடமாக அங்கமாக,
அதன் உணர்வுகளுக்கொப்ப இந்த உடல் உயிர் உருவாக்கும் தன்மையில் உருவாகி, பூமியில் உலா வருகின்றது.

ஆக, உயிர் சந்தர்ப்பவசத்தால்  உடலை விட்டுப் பிரியும் நேரம் உடல் தான் இறக்கின்றது. உயிர் பரமாத்மாவில் கலந்து உணர்வுக்கு ஒப்ப மறு உடல் பெறுகின்றது. உணர்வுகள் அழிவதில்லை,  உணர்வுகள் மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால்.
உயிர் என்றுமே அழிவில்லாத இயக்கம்.
அதை அறிந்து,  புரிந்து,  உணர்ந்து,
முதல் பாடமாக நமக்குள்  பதிய வைத்துக் கொண்டால்தான்,
மற்ற பாட நிலைகள் தெளிவாகும்.