ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 20, 2014

உடல் பற்று கொள்ளாமல், உயிர் பற்று கொண்டு உயிருடன் ஒன்ற வேண்டும்

1. பிரம்ம முகூர்த்த வேளை
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் படரவிடும் பொழுது, நம் உடலுக்குள் எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளிச் சுடராக மாற்றிடும் திறன் பெற்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாம் பெறவேண்டும் என்று, நாம் ஏங்கி ஆசைப்பட்டு, காலை பிரம்ம முகூர்த்த வேளையில் நாம் அறிவின் ஞானம் கொண்டு, தியானிக்க வேண்டும்.
பிரம்மம் என்றால் உருவாக்குதல்.
முகூர்த்தம் என்றால், இணைத்தல்.

பிரம்ம முகூர்த்த வேளை என்பது, அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை. அந்த நேரத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், பூமியில் நேரடியாகப் பரவும் நேரம். அந்த நேரத்தில், தியானித்து, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் பிரம்மமாக்க வேண்டும்.
2. முருகன் தகப்பன்சாமி - விளக்கம்
ஆறாவது அறிவு (முருகன்) என்ற
நம் உடலில் விளைந்த உணர்வினை எண்ணி,
அதன் துணை கொண்டு, உடலுக்குள்
அந்த துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை
இயக்கச் செய்யவேண்டும்.

இதைத்தான், “ஓம்” என்ற பிரணவத்தை, “சிவனுக்கே ஓதினான் முருகன்” என்றார்கள் ஞானிகள்.

நட்சத்திரத் துகள்கள் மின்னலாகி, பூமியில் படர்ந்துவிட்டால்,  காற்றில் இருப்பதை புவியின் ஈர்ப்பால் கவர்ந்து,  வைரங்கள்  விளைகின்றது.
அதுபோல் இந்த உடலை உருவாக்கிய அணுக்களும்  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைக் கவர்ந்து உயிருடன் இணைத்து தியானிக்கும்பொழுது, அவை அனைத்தும் இந்த உயிரைப் போலவே சிறுகச் சிறுக மாறி ஒளியாக மாறிவிடும். 

இனியாகிலும் உடல் பற்று கொள்ளாமல்
உயிர் மீது பற்று கொண்டு, 
உயிருடன் ஒன்றுதல்தான்,
உண்மையில் செயல்படவேண்டிய இயக்கம் 
என்று அறிதல் வேண்டும். எமது அருளாசிகள்.