
யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்
உங்களுக்குள் ஞானிகள் உணர்வுகளைப்
பதிவு செய்கின்றோம்.
1.யாம் உபதேசிக்கும் உண்மைகளை நீங்கள் பிறருக்கு எடுத்துச் சொல்ல
வேண்டும்.
2.அந்த நேரத்தில் உங்களுக்குள் அந்த உண்மையின் உணர்வுகள் வளர்ச்சியாகும்.
யாம் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள். எது தீமை…?
எது நன்மை…? என்பதை அறிந்து கொண்டீர்கள். எல்லோருக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள். கோவிலுக்குச் சென்றால் எப்படி வணங்க வேண்டும் என்று
வழிகாட்டுங்கள்…?
தாய் தந்தையரைத் தெய்வமாக வணங்குங்கள். குறைகள் இருந்தால் அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் ஞானியாக வேண்டும்… நல்லவனாக வேண்டும் என்ற உணர்வைச் சொல்லிப்
பழகுங்கள்.
அவர்கள் சொல்லும் கஷ்டத்தைக் கேட்டால் அது உங்களுக்குள் வளராதபடி அவர்களுக்கு ஞானத்தை ஊட்டித்
தெளிவாக்குதல் வேண்டும்.
ஆகவே தியானத்தைக் கடைப்பிடிக்கும் நீங்கள்
1.உங்களை யாம் எப்படிக் குரு
வழியில் சீர்திருத்தம் செய்கின்றோமோ இதைப் போல
2.மற்றவர்களுக்கு இந்த வாழ்க்கையின் உண்மை நிலைகளை
எடுத்துக் கூறி அவர்களைத் தெளிவானவர்களாக நீங்கள் மாற்ற வேண்டும்.
3.ஞானிகளைப் போன்று மாற்றும் சக்தி உங்களுக்குள் வந்தால் தீமைகளை மாற்றி அமைத்து
4.நன்மையின் நிலைகளை உங்களுக்குள்ளும் விளையச் செய்ய முடியும்.
கஷ்டம் என்று மீண்டும் மற்றவர்கள் சொன்னால் “நாம்
சொல்வதை அவர்கள் கேட்கவில்லையே…” என்று வாதத்திற்கும் போக வேண்டாம் வேதனைக்கும் போக வேண்டாம்.
1.எப்படியும் அவர்கள் பெறுவார்கள் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2.சந்தர்ப்பம் வரும் பொழுது அவர்களும் அதைப் பெறுவார்கள்.
3.அவர்கள் அதைப் பெறும்
பொழுது அந்த மகிழ்ச்சி உங்களுக்குக்
கிடைக்கும்.
நான் சொல்லியிருந்தோம்… இன்று அவர்கள் அதை உணர்ந்து வந்து விட்டார்கள்.
அந்தச் சந்தர்ப்பங்கள் கஷ்டம் என்று வரும் பொழுது நல்வழியில் வழி நடத்தும்.
ஆக மொத்தம் கடவுள் செய்வார் சாமி செய்வார்
சாமியார் செய்வார் என்று
மற்றவர்களை எண்ணாதபடி உங்களை நீங்கள் நம்புங்கள்.
நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ அந்த உணர்வினை உங்கள் உயிர் உருவாக்கும்.
மற்ற யாரும் செய்து கொடுக்க மாட்டார்கள்.
நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் செயல்படுத்திக் கொடுக்கும்.
1.நான் (ஞானகுரு)
செய்வேன் என்றால்… நல்லதாக வேண்டும் என்று சொல்லும் பொழுது
எனக்குள் அந்த நன்மையின் தன்மை உருவாகின்றது.
2.அதே போல் நல்லது பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் உங்கள் உயிர் தான் அதை உருவாக்கிக் கொடுக்கின்றது.
வேறு யாரும் உருவாக்குவதில்லை…!