ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2026

வேதனை என்ற நஞ்சு மிகவும் கடுமையானது

வேதனை என்ற நஞ்சு மிகவும் கடுமையானது


வாழ்க்கையில் நன்மையே நாம் செய்து பழகுகின்றோம். நன்மையின் எல்லையை அடைந்தாலும் மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு ஈகை இரக்கம் பண்பு பரிவு என்ற நிலையில் பிறர் துயர்படுவதைக் கேட்டறிய நேர்கிறது.
 
எவ்வளவு பெரிய கொடியவனாக இருப்பினும் ஒரு சமயம் அதைக் கேட்டு அறிந்தால் நுகர்ந்த உணர்வுகள் அவன் பல கொலைகளைச் செய்திருந்தாலும் தன் எதிரிலேயே பாவமான நிலையில் உதவி இல்லாதபடி வேதனைப்படுகிறான் என்றால்
1.கொடிய தவறு செய்தவனும் அவனுடைய ஈகையால் அதை நுகர்ந்த பின் உதவி செய்யும் எண்ணங்களே வருகின்றது.
2.கொடூரம் செய்பவனாக இருப்பினும் அப்பொழுது அதை அவன் எண்ணவில்லை.
 
கொடூர உணர்வுகள் இவனுக்குள் சேர்ந்தது… கொடூர செயல்களைச் செய்யும் உணர்வுகளே இவன் உடலில் விளைந்தது.
 
அத்தகைய செயல்களை அவன் செய்து கொண்டிருப்பினும் ஒரு மனிதன் தனக்குள் முடியாத நிலைகளில் வேதனையுடன் துடித்துக் கொண்டிருந்தால் இவனைக் காத்திடும் அந்த இரக்கமான உணர்வுகளை அவன் நுகர்ந்து அறிந்தபின்  ஈகையால் அவனுக்கு உதவி செய்யும் எண்ணத்தைத் தான் கொடுக்கும்.
 
வேதனையால் துடித்துக் கொண்டிருப்பவனைச் செயலற்றவன் என்று உணர்த்தும். இருப்பினும்
1.அவனைச் செயலற்றதாக்கிய அந்த நஞ்சை இவன் சுவாசித்த பின்
2.இவன் உடலுக்குள் வந்து இவனுடைய வலிமையையும் அது குறைக்கின்றது.
 
எப்படி ஒரு புலி இரக்கமற்ற செயல் கொண்டு மற்ற மிருகங்களைக் கொன்று புசித்தாலும் அது போல இவன் பல பிழைகளைச் செய்தவனும் விஷம் கொண்டோர் உணர்வை உற்று நோக்கி அவன் இரக்கப்பட்டுச் செயல்படும் பொழுது நஞ்சின் தன்மை ஊடுருவி விட்டால் அவன் வலு இழந்து விடுகின்றது.
 
புலி மற்றதைக் கொன்றாலும் சிறு விஷம் கொண்ட தேள் அந்தப் புலியைக் கொட்டி விட்டால் அது துடித்து அலறும். பாம்பு விஷம் கொண்டதாக இருந்தாலும் அதை ஒரு குச்சியை வைத்து ஒரு அடி அடித்தால் அந்தப் பாம்பு இறந்து விடுகின்றது.
 
விஷம் கொண்ட தேளின் உணர்வுகள் புலிக்குள் சென்று விட்டால் புலியையும் அது பலவீனப்படுத்துகின்றது.
1.இது போன்றுதான் எத்தகைய வலிமை கொண்டிருந்தாலும்
2.இரக்க உணர்வு கொண்டு பிறர் உணர்வுகளை நாம் உற்று நோக்கப்படும் பொழுது
3.நம் வலிமையை அந்த நஞ்சு செயலிழக்கச் செய்யும் சக்தி பெற்றது.
 
மனிதனின் வாழ்க்கையில் கடும் வேதனையையோ ஒரு விபத்தையோ அல்லது ஒரு வேதனைப்படுவோரையோ பார்க்காமல் இருக்க முடியாது. அப்படி நுகர்ந்து விட்டால் அது நம் உடலில் நோயாக மாறுகின்றது.
 
ஒரு  வேதனைப்படும்படியான செய்தியைப் பேசிக் கொண்டிருந்தாலும் அது ஆழப் பதிந்து நமக்குள் அதனால் வேதனை உணர்வுகள் தூண்டித் தூண்டி பலம் இழக்கப்படுகின்றது.
 
நமக்கும் வேதனை வருகின்றது… நல்ல உணர்வுகள் மறைகிறது. நல்ல சிந்தனைகளைச் சிந்திக்க முடியாது ஆகின்றது… இந்த உடலை அழிக்கின்றது. நல்ல சொல் வராதபடி உருவாகின்றது.
 
இது போன்ற தீமைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும். எவரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் மூஷிகவாகனா… அது கணங்களுக்கு அதிபதியாகின்றது.
 
நல்ல குணங்கள் கொண்டு நாம் இருப்பினும் வேதனைப்படுவோரின் உணர்வைச் சுவாசித்தால் இந்தக் குணங்கள் நம் நல்ல குணங்களை அடிமையாக்கி அது அதிபதியாக மாறி நம்மை வேதனைப்படும்படியாக உருவாக்கி விடுகின்றது.
 
இப்படி… சந்தர்ப்பத்தில் நாம் நுகரும் உணர்வுகள் தீமைகளை எவ்வாறு விளைவிக்கின்றது…? என்பதனை தெளிவாகக் காட்டி உள்ளார்கள் ஞானிகள். இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.