ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 5, 2021

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நுகர்ந்து நுகர்ந்து தான் அகஸ்தியன் சகலத்தையும் அறிந்துணர்ந்தான்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனாகப் பிறந்த அகஸ்தியன் தாய் கருவிலிருக்கப்படும் போதே உயர்ந்த சக்திகளைப் பெற்றான்.
 
அகஸ்தியனின் தாய் மிருகங்களிடமிருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் மின்னல்களிலிருந்தும் தப்ப வேண்டும் என்ற நிலையில் விஷத்தை முறிக்கும் பல பல பச்சிலை மணங்களை நுகர்ந்தது... உடலிலே பூசிக் கொண்டது.
 
நஞ்சினை வென்றிடும் தாவர இனத்தின் மணங்களை நுகரும்போது அது தாயின் இரத்தத்திலும் அது கலந்து கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்கும் (அகஸ்தியனுக்கும்) அதே விஷத்தின் தன்மை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது.
 
மின்னல்கள் தாக்கினாலும் அவைகளிலும் கடும் விஷம் உண்டு. அந்த விஷமான சக்தி மனிதன் மீது தாக்கினால் நல்ல அணுக்கள் மடியும் அல்லது மயக்கம் அடையும்.

1.ஆனால் அந்த விஷத்தை முறிக்கக்கூடிய பச்சிலைகளை அகஸ்தியன் தாய் நுகர்ந்ததனால்
2.அந்த மின்னலையும் அடக்கி இவனைக் காக்கும் உணர்வுகளை அந்த உணர்ச்சிகள் அங்கே தோற்றுவிக்கின்றது.
 
இப்படித் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் அவன் பிறந்த பின் இவனைக் கண்டாலே விஷ ஜெந்துக்கள் அருகிலே வருவதில்லை. மின்னல் பாய்ந்தாலும் அந்த விஷங்கள் இவனைத் தாக்குவதில்லை.
 
நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக எப்படி உருவானது...? என்றும் அந்த மின்னல்கள் எவ்வளவு தூரத்திற்கு ஊடுருவிப் போகின்றது...? என்றும் அறியும் தன்மை அப்பொழுது அவன் பெறுகின்றான்.
 
1.அந்த மின்னலின் உணர்வுகளை வைத்து ஒரு செடியை இவன் உற்றுப் பார்க்கும் போது
2.அதனின் உணர்ச்சியின் மணங்களைப் பற்றியும்... உணர்வின் இயக்கங்களைப் பற்றியும் அறிகின்றான்.
3.இப்படி எல்லாம் கண்டுணர்ந்ததால் தான் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயர் வந்தது.
 
ஏனென்றால் தாயின் கருவிலே பெற்ற உணர்வுகள் வளர்ச்சியாகி இந்தப் பிரபஞ்சத்தையே கண்டுணர்ந்து நஞ்சினை நீக்கக் கற்றுக் கொண்ட முதல் மனிதன் தான் அந்த அகஸ்தியன்.
 
வான இயலைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் திருமணமாகும் போது தான் பார்த்த உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கும் எடுத்துச் சொல்கின்றான்.
 
மனைவியும் கணவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு அதை எல்லாம் தானும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குகின்றது. அப்பொழுது இரண்டு மனதும் ஒன்றாகின்றது.
1.ஒன்றான பின் கணவன் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று மனைவியும்
2.மனைவி உயர வேண்டும் என்று கணவனும் இருவரும் எண்ணுகின்றனர்.
 
இப்படி இருவரும் ஒரு மனமாக எண்ணி எடுத்த உணர்வுகள் தான்
1.அந்தத் துருவத்தின் வழியாக வரக்கூடிய சக்தியை எடுத்து இரு உயிரும் ஒன்றாகி
2.உயிரைப் போல் உணர்வின் ஒளிக் கற்றைகளை உருவாக்கும் அணுக்களாக விளைந்து
3.இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்கின்றனர்.
4.பிரபஞ்சத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
 
மனிதனாக உருவான நிலையில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்தால் அந்தக் கருத் தன்மைகள் கொண்டு குழந்தையாக உருவாகின்றது.
 
குழந்தையை உருவாக்கினாலும் பிறந்த பின் தன் பிள்ளைக்கு உடல் நலம் இல்லை என்றால் வேதனைப்பட நேர்கின்றது. “பிள்ளை நோயால் அவதிப்படுகின்றானே...” என்ற அந்த உணர்வினை தாய் நுகர்ந்தால் அந்தப் பையனுக்குள்ளும் இதே உணர்வுகள் சேர்கின்றது.
 
அதே போல் குடும்பத்தில் யாராவது வேதனையை எடுத்து வளர்த்துக் கொண்டால் வேதனைப்பட்டே கடைசியில் இறந்தால் அவர்களுடன் பற்றுடன் வாழ்ந்த நிலையில் அதே உணர்வை நாம் எண்ணினால் அந்த இறந்தவரின் ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.
 
அதே போல் ஒரு நோயாளியாக இருப்பவனின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அந்த நோயாளியின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால் அதே வேதனை மீண்டும் நமக்குள் வந்து அவனில் விளைந்த நோய் நமக்குள்ளும் விளைகிறது.
 
இதைப் போல் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நம்மை அறியாமல் நமக்குள் நடக்கின்றது.
 
இதிலிருந்தெல்லாம் மீண்டிட வேண்டும் என்பதற்குத்தான்...
1.அந்த அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்ற ஆற்றலையும்
3.துருவ நட்சத்திரமான ஆற்றலையும் உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.
 
அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. துருவத்தின் வழி கவர்ந்து நம் பூமி நமக்கு முன் பரவச் செய்கின்றது.
 
அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பழக வேண்டும். உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் அந்த அரும் பெரும் சக்திகளை இணைத்து வலுவாக்க வேண்டும்.
 
ஆகவே கஷ்டம் என்ற நிலை எப்பொழுது வருகின்றதோ அடுத்த கணமே அதைத் துடைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்.

இதை எல்லாம் மனிதன் ஒருவனால் தான் செய்ய முடியும்.