தாய் எத்தனையோ
வேதனைப்பட்டுத் தன் குழந்தைகள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அந்தத்
தாய்க்கு நாம் உபகாரம் செய்யும் நிலை எது...?
உயர்ந்த உணர்வுகளை
எடுத்துத் தாய் விரும்புவது போல் நாம் உயர்ந்தவராக வேண்டும்... நம் சொல்லிலே இனிமை
பெற வேண்டும்... நம் செயல் அனைத்தையும் பிறர் மதிக்கும் தன்மையாக இருக்க வேண்டும்.
இப்படிப் பிறரை
நாம் மகிழச் செய்யும் சக்தியாக நாம் மாறினால் அதைக் காணும் நம் தாய் பேரானந்த நிலை
பெற்று நமக்காகப் பட்ட துயரத்தை எல்லாம் மாற்றலாம்... அகமகிழ்ந்து தன் துயரத்தை மாற்றிக்
கொள்ளும் உணர்வும் தாய்க்கு வரும்.
ஆண்களானாலும் பெண்களானாலும்
இதைப் போன்று தாயை மதித்தல் வேண்டும்.
1.நம்மை உருவாக்கிய
கடவுள் என்று தாயை மதித்தல் வேண்டும்
2.தன்னைக் காத்த
தெய்வம் என்று தாயை மதித்தல் வேண்டும்
3.நமக்கு நல் உணர்வு
ஊட்டிய குரு என்று மதித்தல் வேண்டும்
சந்தர்ப்பத்தால்
பல உணர்வுகளை நாம் பெற்றாலும் தாய் நமக்கு என்ன செய்தது...? என்று குறைப்பட்டுத் தாய்
மனது புண்படும்படி எவரும் செய்யாதீர்கள். தாயைப் போற்றும் நிலையும் மகிழ்ந்து வாழும்
செயலையும் தான் நாம் செயல்படுத்த வேண்டும்
நாம் எத்தனை குற்றத்தைச்
செய்தாலும் தாய் தாங்கிக் கொள்ளும். ஆக... தன் பிள்ளைகள் உயர வேண்டும் என்று மனதைக்
கூட்டுகின்றது. ஆகவே அதன் உணர்வின் தன்மை நம்மை மகிழச் செய்யும் சக்தியாகச் செயல்படுத்தும்.
ஆனால் அப்படி நம்மை
மகிழ்ச் செய்யும் மனம் கொண்டு நம்மை வளர்ச்சியின் தன்மைக்குச் செயல்படுத்தும் தாய்க்கு
நாம் வேதனைப்படும் செயலைச் செலுத்தினால் நாம் எங்கே செல்வோம்...? என்று சற்று சிந்தித்துப்
பாருங்கள்.
இதைப் போன்ற உணர்வில்
இருந்து விடுபடுங்கள். அருள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்... அருள் ஞானத்தைப் பெருக்கிக்
கொள்ளுங்கள்.
1.தாயன்பைப் பெற
முயற்சி எடுங்கள்
2.தாயை மகிழச்
செய்ய உங்கள் வாழ்க்கையின் செயல்களைப் புனிதமாக்குங்கள்
3.உங்கள் சொல்லை
இனிமையாக்குங்கள்... செயலைப் புனிதம் பெறச் செய்யுங்கள்...!
தாய்க்கு செய்யும்
சேவையும் கடமையும் அவர்களை நாம் மகிழச் செய்வது தான். எத்தனையோ இன்னல்களைக் கடந்து
நம்மை மனிதனாக உருவாக்கியது. இந்த உண்மையின் உணர்ந்து செயல்பட்டுத் தாய் தந்தையரை மகிழச்
செய்வோர் எவரோ அவரே சொர்க்கம் அடைகின்றார்...!
அத்த்கைய பண்புடன்
தாயின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது நாம் எண்ணிய உயர்ந்த உணர்வுகள் கவரப்பட்டு
எத்தகைய இன்னல்கள் வந்தாலும் மாற்றி அமைக்கும் திறனை நாம் பெற முடியும்.
1.தாயின் உணர்வுகளை
நாம் எடுக்கப்படும் பொழுது தான்
2.துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை நாம் பெறும் தகுதியும் பெறுகின்றோம்
3.நம்மை அறியாது
ஆட்டிப்படைக்கும் நிலைகளிலிருந்து விடுபடவும் முடியும்.
கணவனும் மனைவியும்
வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நீங்கள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் ஒன்றென இணைந்து பகைமை
உணர்வை மாற்றிடும் சக்தி பெறுங்கள்.
நளாயினியைப் போன்று
கணவன் மனைவியை மதித்து மனைவி கணவனை மதித்து இரு உணர்வும் ஒன்றான பின் சாவித்திரி என்ற
நிலையில் என்றுமே இணைந்து வாழும் சக்தியைப் பெற முயற்சி எடுங்கள்.
நாம் கவர்ந்து
கொண்ட அந்த உணர்வுகள் தான் வசிஷ்டர் என்பது. அதாவது தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர்
பிரம்மகுரு என்பார்கள். பத்தாவது நிலையை அடைய கூடிய நாம் இந்த உயர்ந்த உணர்வினை நாம்
நுகரப்படும் பொழுது அது வசிஷ்டர் ஆகின்றது.
1.கவர்ந்து கொண்ட
பேரருள் உணர்வுகள் நம்முடன் இணைகின்றது.
2.இணைந்து கொண்ட
உணர்வுகள் பிரம்மமாக உருவாகிறது
3.பிரம்மகுரு என்ற
நிலையில் அந்த அருள் சக்தி நம் உடலுக்குள் உருவாகி அது இணைந்தே வாழும் அருந்ததியாக...!
ஆகவே நமது வாழ்க்கையில்
நாம் எதை வெல்ல வேண்டும்...? எதை வளர்க்க வேண்டும்...? என்பதை உணர்தல் வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வைக் கவர்ந்து அதை உடலுக்குள் ஆழமாகப் பதித்து அதன் உணர்வுகளை உங்களுக்குள் இந்த
ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வாக வளர்த்துக் கொள்ளுங்கள்.
அதே வசிஸ்டர் நீங்கள்
கவரும் உணர்வுகள் கவர்ந்து கொண்ட உணர்வுகள் நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உடலிலே பிரம்மமாகின்றது.
அருள் சக்தி கொண்ட இருளை நீக்கி அந்த உணர்வுதான் பத்தாவது நிலை அடைந்து நஞ்சினை வென்று
ஒளியாக்கி இந்த உணர்வினை உங்கள் உடலில் இணைந்தால் அருந்ததி இருளை நீக்கும் அந்த உணர்வுகள்
இணைந்து வாழும் என்ற நிலையில் உங்கள் வாழ்க்கையில் அதை பெற வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்,
மாமகரிஷி ஈஸ்வராய
குருதேவர் காட்டிய வழியில்
1.உங்கள் உயிரைக்
கடவுளாக எண்ணி... உங்கள் உயிரை ஈசனாக மதித்து... விஷ்ணுவாக வணங்குகின்றேன்.
2.உங்கள் உடலைச்
சிவமாக மதித்து நீங்கள் உயர்ந்த உணர்வுகள் பெற வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.
3.அருள் உணர்வுகளை
உங்களுக்குள் வினையாக்க வேண்டுமென்றும்
4.துருவ நட்சத்திரத்தின்
உணர்வைக் கணங்களுக்கு அதிபதி கணபதியாக்கி
5.தீமைகளை நீக்கும்
உணர்வாக உங்கள் உடலைச் சிவமாக்கி
6.பேரொளி என்ற
உணர்வாக உங்களில் வளர்க்கும் தன்மை பெற வேண்டும் என்று தான் குரு அருள் எனக்கு உபதேசித்தது...!
அதன் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெற்றால் உங்களிலே இருள் சூழா நிலையும் அருள் ஒளி பெருகும் நிலையும் இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் முடியும்.