ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 7, 2021

உயிருடன் ஒன்றும் தியானமே உண்மையான சரணம் என்று உணர்த்தியவரே “காண்டீப முனிவர்...” என்ற ஐயப்பன் - ஈஸ்வரபட்டர்

விண்ணிலே தோன்றும் உயிர்த் தன்மை அணுக்களாகப் புவிக்குள் வந்து உடல் பெற்றாலும் இந்தச் சரீர வாழ்க்கையில் மெய்யை உணரத் தலைப்பட்டால்
1.தன்னுள்ளே ஒளி நாதத்தைக் கூட்டி ஒளியாகக் கலக்க
2.ஒலி நாத வித்துக்களே தேவை.
 
ஒலி நாத வித்துக்களைப் பெறும் வழியை அறிந்து... அதன் வழி நடந்து... அதற்குரிய இடம் சேரும் தன்மைகளில் வீரியத்தைக் கூட்டித்
1.தனக்குகந்த ஒலி நாதத்தைத் தானே ஈர்த்துத் தேடிக் கொள்ளும்
2.அந்த ஒலி நாதத்தைப் பெறும் அந்தந்த உயிர்த் தன்மை அணுக்களையும் தன் வழியில் வழி நடத்தி ஒலி நாத வித்துக்களாக மாற்றி
3.அதனதன் அமில குண நிலைக்கொப்ப வீரிய நிலை கொண்டு ஒளி நிலையாக
4.நட்சத்திரங்களாக கோளங்களாகப் படைக்கும் சக்தியை வளர்த்தால் அது ஆதி சக்தியின் சக்தியாக அந்தச் சக்தியில் தான் கலக்கும்.
 
இதன் உண்மை வழிதனில் செயல்பட்டுத் தனக்குகந்த அமில குண வழி வீரியம் கொண்டவரே “காண்டீப முனிவர் என்ற மகான்...!”
 
பௌருஷம் என்ற என்ற புருஷார்த்த தன்மை வீர குணமாகச் செயல் கொண்டாலும் கோப நிலையை வளர்த்துக் கொண்ட நிலையில் ஆத்மாவின் அமில முலாமாக வளர்த்த பிறகு அதன் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டார்.
 
கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே ஒளி நிலை பெறும் மார்க்கம்...!” என்றும் அந்த ரிஷிகளின் சக்தியில் தன்னைச் சேர்க்கும் என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார் காண்டீபர்.
 
தாய் சக்தியின் கூட்டு அமில சக்தியோ அல்லது ரிஷி பத்தினி என்ற (மனைவி) சக்தியின் ஆத்ம கலப்போ தான் மாமகரிஷியாக நம்மை ஆக்கும் என்ற உண்மையை உணர்ந்தார்.
 
அதனின் உந்துதலாக மகரிஷி என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ண உறுதியே பின் ஐயப்பனாக... ஐயப்ப முனிவராக...! வளர்ந்து அந்த ரிஷித் தன்மை அடையும் நிலை பெற்றுவிட்டார்.
 
அன்று காண்டீப முனிவராக இருந்து பெற்ற ஞானத்தின் தத்துவத்தில் தன் வளர்ப்பைத் தான் வளர்த்து அதற்காகக் கண்டு கொண்டதே சரணகோஷ நாதத்தின் ஒலி (சரணம் ஐயப்பா...!).
 
1.மனித உடலே ஒரு காண்டீபம்.
2.அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்).
3.உயிர் இல்லை என்றால் உடல் ஏது..? இயக்கம் ஏது..? நான் ஏது..?
4.இந்தத் தத்துவத்தைக் காட்டி நான்(ண்) ஏற்றுதல் என்ற இணைப்புச் செயலில்
5.உயிருடன் ஆன்மாவைத் தொடர்புபடுத்தும் பக்குவத்தைக் காட்டினார் காண்டீப முனிவர்.
 
நான்.. நான்...! என்று எல்லோரும் சொல்கிறோம். அந்த நானே இந்த நாணிலிருந்து வந்தது தான். ஆனால் நான் என்று சொல்லி உள் நின்று இயக்கும் உயிரை மறந்த நிலையில் “உடலைத்தான் நான்...!” என்று நம்பி கடைசியில் உயிரையும் ஆன்மாவையும் அறியாது அதைக் காக்காது மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே இருளுக்குள் சென்று விடுகின்றோம்.
 
உயிரையும் ஆன்மாவையும் நெருங்கிச் சேர்த்து உயிரான்மாவை (தன்னை) மீட்டிடும் ஒலி நாத ஒளியாகக் காண்டீபம் என்ற கூட்டு இயக்கமாக வீரிய எண்ண உயர் நிலைக்குத் “தன்னைத் தயாராக்க வேண்டும்…” என்றார்.
 
1.உயிரினை மீட்டும் ஒலி நாதத்தையே “நாணின் ஒலி என்றும்
2.அதையே உயிர் நாத கீதமாக்கி அந்த வழியின் தொடர்பில் தொடர்ந்து மீட்டும் பொழுது
3.எழும் ஒலி நாதம் “சரணம்...!” என்று உயிர்ப்பிப்பதாகக் கூறி
4.நம் உயிருடன் ஒன்றிடும் ஜெபத்தையே “சரணம்…” என்ற சரணாகதித் தத்துவத்தை வெளிக்காட்டினார் காண்டீப மகரிஷி.
 
ஐயப்பன் பெற்ற பேரின்ப இரகசியம் இந்த ஜோதித் தத்துவம் தான்.
 
அதாவது உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி நிலைப்படுத்திச் சரீரத்தையே ஒளியாக்கி உயிர் ஆன்மக் கலப்பின் ஜோதி ஸ்வரூபமாக்கிக் கொண்டார் ஐயப்பன்.
 
தனக்குள் எப்படிப் பேரொளியாக மாற்றிக் கொண்டாரோ அந்த அத்தனை உயிரணுக்களையுமே
1.ஆத்ம பிம்ப ஒளிக் கதிர்களாகப் பிரித்து வானில் ஒன்றுபடுத்தி
2.தன் ஆத்ம ஜோதியை எல்லோருக்கும் காட்டினார் ஐயப்பன
3.அந்த ஐயப்ப ஜோதியே நாம் காணும் “ஆகாய ஜோதி...!”