ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 18, 2021

மோகத்தை (சபல புத்தி) நல்லதாக மாற்றும் வழி முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

காமத்தின் வழியில் பிறக்கும் “மோகம்...” என்பது சரீர உணர்வு அலைகளின் நாதத்தில் கலந்து தனக்குத் தேவையான ஆகார அமில குணத் தன்மைகளைத் தனதாக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது.
 
1.புலனறிவு கொண்டு ஈர்க்கப்படும் செயல் எண்ணத்திற்கும்
2.ஆகார நியமனங்கள் இல்லாது சரீரம் உணர்வு கொண்டு இயக்கப்படும் எண்ணத்திற்கும்
3.தனக்குத் தானே சில கட்டுப்பாடுகள் அமைத்துக் கொண்டு
4.மனோ தைரிய வீரிய குணத்தை... வீரமான செயல் தன்மை கொண்டு செயல்பட்டால்
5.சபலம் என்ற மோகம் அதன் வழியில் நம்மை இயக்காது மறைந்து விடும்.
 
இது போன்ற சபலத்தின் வழியில் சிக்காதபடி குரு தன் சிஷ்யனை உயர்த்தும் மார்க்கத்தில் பயிற்சி வழி முறைகளைக காட்டிப் பக்குவப்படுத்துவார். அந்தப் பக்குவத்தில் நற்குணங்களின் உயர் தன்மையின் வீரிய குணச் செயல்பாட்டையும் போதிப்பார்.
 
அப்படிப்பட்ட ஒரு உயர்வின் சிறப்பைக் குரு வழியாகக் காட்டும் இராமாயணக் காவியத்தில் “பூவினும் மெல்லிய மனம் கொண்ட பெண் கல்லானாள்...!” என்று அகலிகையைக் காட்டுகிறார்கள். அந்தக் கல்லே பின் “பெண்ணாக ஆனாள்...!” என்றும் காட்டுகிறார்கள்.
 
அதனின் உட்கருத்து என்ன...?
 
ரிஷித் தன்மை பெற வழி காட்டப் போதனைப்படுத்திய வான்மீகி மாமகரிஷி ரிஷிபத்தினியின் சக்தியும் பெற வேண்டும் என்ற சூட்சமத்தைக் காட்டுகிறார்.
 
விசுவாமித்திரர் பெற்ற உபதேசத்தில் அவர் பெற்ற சக்தியின் செயலையே கல்லான அகலிகை தன் நிலை உயர்த்தப் பெண் ஆனாள் என்று “அகலிகை சாப நீக்கப் படலத்தில் காட்டுகின்றார்.
 
1.ஏனென்றால் காம குணத்தையே அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது “தெய்வீகம்...”
2.அதைக் “காமாட்சி...” என்று காட்டுவதும் ஈஸ்வரத் தத்துவமே...!
 
ஆனால் மோகத்தின் வேகத்தைக் காட்டினால் என்ன ஆகும்...?
 
அங்கே தெய்வீகத் தன்மைகள் மாறி சிருஷ்டி அல்லாத தன்மைக்கு அந்தக் குணங்கள் தனக்கொத்த வீரியம் கொள்ளும் பொழுது... காமம் அந்த மோகத்தின் சபலமாகி விடுகின்றது.
 
அந்த மோக மயக்கம் நீக்கும் தத்துவத்தைத் தான் “சாப நீக்குப் படலம்...” என்று செயல்படுத்திக் காட்டினார். ரிஷிபத்தினி சக்தியின் உயர்வைத் தன் காப்பியத்தில் பாசம் என்ற வழிச் செயலுக்கு ஆக்கம் தந்தார் அந்த வான்மீகி மாமகரிஷி.
 
கௌதம முனிவருக்குத் தன் நிலையை உயர்த்த ரிஷிபத்தினி வேண்டும். அந்தச் சக்தியின் தொடர் அகலிகையின் எண்ணத்தின் பால் செலுத்திப் பெற அகலிகையின் சிறு சலன சபலம் தடையாகிப் போனது.
 
1.கௌதம முனிவன் பெற்ற சஞ்சல சபல நிலை நிறைவேறாத எண்ணத்தால்
2.தனக்குள் எழுந்த கோபமும் அந்தக் கோபத்தின் பின் எழுந்த விரக்தியும்
3.விரக்தியின் பின் எழுந்த மனோதிடமும் வைராக்கியமும்
4.இந்தக் கூட்டு முறை வழித் தொடரில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு
5.தானும் தனித்த சுயப்பிரகாசத்தை எட்ட மண்டலமாவேன்...! என்ற சுய வீரிய குணத்தைக் காட்டவே “அகலிகை கல்லானாள்!” என்று காட்டப்பட்டது.
 
சபல குணத்தின் தன்மையை உருவகப்படுத்திக் காட்டவே இந்திரன் என்ற பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் வான்மீகி.
 
சபல குண வலையில் விழுந்ததால்... தன் மனது சபல குணத்தின் பால் திருப்பிய குணத் தன்மையால்... இந்திரனால்... “அகலிகை தன் நிலையில் மாசு கொண்டாள்...” என்பது இது அந்த மோக குணத்தால் தான்!
 
1.இந்திரன் என்ற சரீர உருவகத்தை யாரும் மனத்தினாலும் எண்ண வேண்டியதில்லை...!
2.இந்திரன் என்று மகரிஷி காட்டியது மோகத்தால் எழும் சபல குணத்தைத்தான்!
 
அகலிகையின் சக்தி கௌதம முனிவனின் சக்தியுடன் ஒன்றும் பொழுதுதான் அது ரிஷிபத்தினி என்ற சிறப்பை அடைகிறது... அப்போது தான் அளவிடுவதற்கரிய சிறப்பைப் பெறும் என்று காட்டுகின்றனர்.
 
ஆக... சிவ சக்தி என்ற ஐக்கிய நிலையில் தான் வானஇயலில் மண்டலமாக வளரும் சக்திக்கு வலுக் கொள்ள முடியும் என்பதையும் நன்கு புலப்படுத்தி உலகிற்கு நீதியைப் போதனைப்படுத்தும் தன்மைக்கு அதை அருளியிருக்கின்றார்.
 
இதை விசுவாமித்திரர் வாயிலாகவே வான்மீகியார் காட்டி உபதேசிக்க வைக்கின்றார்.
 
அதாவது அகலிகை தன் நிலை உணர்ந்து.. தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டு... தன்னுடைய பதியான கௌதம முனிவனுக்குச் சக்தியை ஊட்டித் தானும் அந்த ரிஷியின் சக்தியுடன் ஒன்றினாள்...! அதாவது
1.பால்வெளிச் சூட்சமத்தில் கலக்கும் தொடர்பைக் காட்டி
2.ரிஷியின் சக்தியுடன் ரிஷிபத்தினிச் சக்தியையும் கலக்கும் ஆத்ம கலப்பே
3.ஆத்ம ஜோதிக் கலப்பாக முழுமை பெறும்...! என்று காட்டுகின்றார்.
 
இப்படிப்பட்ட பூரணத் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய காவியத்தை.. சூட்சமமாகக் காட்டப்பட்ட அந்தத் தத்துவத்தையே... பலர் “சபல குணத்தை இந்திரன்...” என்று உருவகப்படுத்தி தங்களுக்குள் உள்ள அறிவின் ஞானத்தால் அறிந்தோ அறியாமலோ மாசுபடுத்தி விட்டார்கள்.
 
இராமன் கால் பட்டு அகலிகைக்கு விமோசனம் என்பதன் பொருள் என்ன...?
 
அகலிகைக்குக் குருவாகி உபதேசிக்கும் தன்மையில்
1.அவள் கல்லான மனத்தின் பால் நின்று
2.தியானம் என்ற வழி முறையை... எண்ணத்தால் அந்த உயர்வைப் பெறும் வழியை... (இராமன் என்றால் எண்ணம்)
3.விசுவாமித்திரர் புரிய வைத்தார் என்பதே அதன் பொருள்.