ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 24, 2021

இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை நீங்களும் முழுமையாகக் காண முடியும்

1.இருபத்தியேழு நட்சத்திரங்கள் உமிழ்த்தக் கூடிய கதிரியக்கச் சக்திகள் அவை ஒவ்வொன்றும் கலவையாகும் போது எப்படி மாறுகின்றது...?”
2.அதிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் தங்கமாக எப்படி மாறுகிறது..?
3.செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் அதிலே சிவப்பு நிறமான நிலைகள் எப்படி இருக்கின்றது...?
4.புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகின்றது...?
5.பல நட்சத்திரங்களின் கலவைகள் இதனுடன் (புதன்) கலக்கப்படும் பொழுது எத்தனையோ வகையான உலோகத் தன்மைகளாக அது எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது...?
6.வியாழன் கோள் அந்த 27 நட்சத்திரத்தின் சக்திகளை எடுக்கும் போது அந்தக் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி ஒரு பொருளுக்குள் ஊடுருவி “அதை இணைக்கும் சக்தியாக” எப்படிக் கொடுக்கின்றது...?
7.இதிலிருந்து பிரிந்து செல்லும் ஆவித் தன்மையைச் சனிக்கோள் எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது...? என்று நமது குருநாதர் இது அனைத்தையும் தெளிவாகக் கூறுகின்றார்
 
அதே சமயத்தில் ஒவ்வொரு கோளும் அது தனக்கென்று பல உபகோள்களை வளர்க்கின்றது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டு பத்து பனிரெண்டு என்ற எண்ணிக்கையில் உபகோள்கள் உண்டு. அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சக்திகளை எடுத்துச் சுழன்று வருகிறது.
 
வியாழன் கோளுக்கோ 27 உபகோள்கள் உண்டு. இந்த இருபத்தி ஏழும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான நிலைகளை இது கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாகச் சேர்க்கின்றது.
1.அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமாகச் சுழன்று வரும்.
2.அதிலே ஒன்று ஒரு பக்கம் சுற்றி வரும் மற்றோன்று எதிர் பக்கமாகச் சுழன்று வரும்.
 
இன்றைக்கும் விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையில் வருகின்றதா... அது என்ன...? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.
 
ஆனால் அந்த இருபத்தி ஏழு கோள்களும் அது சுழன்று கொண்டு இருக்கின்றது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து அதற்குள் ஒரு கலவையாக்கி இந்த உணர்வின் தன்மை ஒரு புதுவிதமான கதிரியக்கமாக மாற்றுகின்றது.
 
சனிக்கோள் எப்படித் தான் கவர்ந்ததை உறை பனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோளிலும் உறையும் பனியாக மாற்றும் சக்தி அங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
 
இதையெல்லாம் உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளை எதிர்காலத்தில் இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான்...!
 
1.நான் மட்டுமல்ல... உங்களாலும் அதைக் காண முடியும்.
2.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளைக் கண்டுணர்ந்து நீங்களும் தெளிந்து
3.இந்த உலகில் வரும் இருளை மாய்க்க கூடிய சக்தியாக வரவேண்டும். 

ஏனென்றால் நீங்கள் அனைவரும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றோம் (ஞானகுரு).