ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 4, 2021

ஒரு சிலரிடம் பேசினாலோ... அல்லது அவர்களை எண்ணினாலோ... நெஞ்சிலே படபடப்பும் இதயத் துடிப்பும் அதிகரிக்கின்றது... ஏன்...?

விஞ்ஞான அறிவு கொண்டு ரேடியோ நிலையங்களிலிருந்தும் டி.வி. நிலையங்களிலிருந்தும் ஒளி... ஒலிபரப்பு செய்கின்றனர்.
 
வீட்டிலிருக்கும் ஆண்டென்னா மூலம் அந்த அலைகளை நாம் கவர்ந்த பின் ரேடியோ பெட்டிக்குள் அல்லது டி.வி. பெட்டிக்குள் அது ஒவ்வொரு பாகங்களுக்கும் அது அனுப்பச் செய்கின்றது. ஒலி பெருக்கிக்கு வருகின்றது.
 
அங்கே அந்த அலைகள் வரும் போது அதிலே அதிகமான அழுத்தம் இருந்தல் கிர்....ர்ர்.. என்று சப்தத்துடன் இரைய ஆரம்பித்து விடுகின்றது. நாம் இதை எல்லாம் பார்த்திருக்கின்றோம்.
 
அதைப் போன்று தான் மெய் ஞானிகள் கண்டுணர்ந்த வழிப்படி பார்த்தோம் என்றால்...
1.உதாரணமாக ஒரு கோபப்படுவோரின் உணர்வுகளையோ
2.கோபத்தைத் தூண்டும் உணர்ச்சிகளை உண்டாக்குவோரை
3.நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதை நாம் நுகராமல் இருக்க முடியாது.
4.நம் கண் கரு விழி அந்த மனிதனை நம் உடலில் பதிவாக்கி விடுகின்றது.
 
இதற்கு முன்னாடி அவன் சந்தோஷமாகப் பேசி இருந்தாலும் அவன் உடலிலிருந்து வரும் அந்த உணர்வினையும் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்துவிடுகின்றது.
 
ஆக நண்பன் கோபமான நிலையில் இருக்கும் போது நண்பன் என்று நெருங்கிப் பார்த்தால் அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை நம் கண்ணில் உள்ள கரு விழி பதிவாக்குகின்றது.
 
அது பதிவான பின்பு தான் அந்தக் கோபப்படும் உணர்வுகளை கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.
 
நம் ஆன்மாவாக மாற்றிய பின்... உயிரின் காந்தப்புலன் அதைக் கவர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது. அப்பொழுது அவன் பட்ட கார உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது.
 
1.ஏனென்றால் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் போன்று
2.இந்த உடலில் உணர்ச்சிகள் பட்ட பின் வாயு வேகத்தில் உடல் முழுவதும் பரவுகின்றது.
 
நெருப்பில் ஒரு மிளகாயைப் போட்ட பின் அந்தக் காரமான நெடி  குறைந்தது 100 அடி வரையிலும் கூட காற்றிலே பரவும். இதே மாதிரித் தான் நம் உடலுக்குள் இந்த உணர்ச்சிகள் வேகமாகப் பரவத் தொடங்கும்.
 
அப்படிப் பரவும் போது நம் இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றப்படும் போது...
1.நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்தக் காரத்தை ஏற்றுக் கொள்ளாதபடி சில அணுக்கள் படபடக்கின்றது.
2.ஒரு சில அணுக்கள் மயக்கம் அடைகின்றது
 
அதைப் போன்ற அணுக்கள் எந்தெந்த உறுப்பில் இருக்கின்றதோ... நுரையீரலிலோ இதயத்திலோ உள்ள சாந்தத்தையும் நல்ல நிலையைக் கிரகிக்ககூடிய அணுக்களுக்கு... இந்தக் கார உணர்ச்சிகள் பட்ட பின் ஒரு படபடப்பும்... வேகமாகத் துடிக்கும் நிலைகளும் வருகின்றது.
 
நாம் துடிக்கின்றோமா...? நாம் நுகர்ந்த உணர்வுகள் இதயத்தைத் துடிக்கச் செய்கின்றதா...? என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
 
இப்படித் துடிக்கும் உணர்வுகள் இதயத்தில் ஏற்படும் போது நம் சிந்தனைகள் குறைகின்றது. நம்முடைய அன்றைய செயல்களும் தடைபடுகின்றது.
 
சிந்தனை குறைந்திருக்கும் சமயம் நம் குழந்தைகள் என்று பாசமாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் நம்மிடம் வந்து ஏதாவது கேட்டால்... “கிரகம்... தொலைந்து போ...!” என்று வெறுத்துத் தள்ளும் நிலைகளே வருகின்றது.
 
இது எதனால் வருகின்றது...? நாம் கோபப்படுகின்றோமா...? நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகின்றதா...? என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
 
ஒவ்வொரு மனிதனும் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உணர்வுகள் தான் அவனை இயக்குகின்றது.
 
1.இருந்தாலும் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து
2.அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்தால்
3.மனிதன் அதை இயக்க முடியும்... நல்லதாக்க முடியும் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.