ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 13, 2021

மனிதர்கள் உயர்ந்த நிலை பெறவே காவியங்கள் படைக்கப்பட்டது - ஈஸ்வரபட்டர்

மனிதனின் வாழ்க்கையில் வரும் சங்கட குணங்களை விலக்கி மனப் பக்குவம் பெற அறிய வேண்டிய ஞானத்தின் செயல் திறத்தைத் தான் இராமாயணக் காவியத்தின் மூலம் வான்மீகி மாமகரிஷி காட்டினார்.
 
இதைக் கம்பனும் அறிந்தாலும் மூலத்தின் பொருள் விளக்கக் கம்பரசம் (கம்பராமாயணம்) செய்தாலும் அதிலே நவரசத்தின் பொருளைக் காட்டி நர்த்தனமாக விளையாடிய கவிச் சொல்லின் சிறப்பில் இன்றைய மனிதன் சுவைத்திட்ட சுவை என்ன..?
1.வெறும் சிருங்கார ரசத்தைத்தான் சுவைத்தான்…!
2.சிறப்பின் ரசம் அறிந்தானா…?
 
காரணத்தில் காரியத்தை அறிய வைத்த கம்பனும் அறியவொண்ணா மறை பொருள் உண்டு.
 
அனுபவம் என்ற பாதையிலே வான்மீகி மகரிஷி அறிந்து சொன்ன சொல் “ஒளி காந்தம்...” உருவாக்கிய காவியம் தான் அந்த இராமாயணம்.
 
மனிதனின் வாழ்க்கையில் எண்ணங்களின் எதிர் மோதல்களினால் ஏற்படும் துன்பத்திலிருந்து விடுபடும் பக்குவ மனப்பாங்கைப் பெறுவதற்காக  நிகழப் பெற்ற “அனுபவ ஔஷத நெறியின் செயல் விளக்கம் தான் இராமாயணக் காவியம்...!”
 
1.மனிதன் பெறும் பெற வேண்டிய உயர் நிலை என்ன…? என்பது பற்றி
2.அவன் மனதில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் சலிக்கும் (அலசி எடுக்கும்) தன்மையாக
3.ஓர் சல்லடையை வைத்துச் சலிப்பது போல் – மனிதன் பெற வேண்டிய வழி வகைகளை அறிந்திடச் செய்யும் “சூட்சம காவியமே இராமாயணம்…!”
 
எண்ணங்களின் அலை ஈர்ப்புச் சமைப்பில் காந்தமாகிக் காத்திட்ட சக்தியில் வான்மீகி அதைக் கொடுத்ததிலும் ஓர் பக்குவம் உண்டு.

வானை நோக்கி ஏ(ங்)கி உயர்ந்த சக்திகளை எடுதத அந்த வான்மீகி மாமகரிஷி கண்டுணர்ந்த வான இயல் சூட்சமத்தின் தெளிவை நாமும் கண்டுணர்ந்து நம் மனம் தெளிதல் வேண்டும்.