ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 20, 2021

“மதி வழி” கொண்டு நாம் முன்னாடி சென்றால்... ”விதி வழி” பின் செல்லும்...! - ஈஸ்வரபட்டர்

இராமன்... லட்சுமணன்... சீதை என்று அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.
 
ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வரும்போது எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் அந்த ஆசை நிலையைச் சித்தரிப்பதே மாயமான்...!
 
அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வலுவாகி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை.
 
“ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.
 
உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)
 
ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை... சூட்சமமாக அங்கே பொருள்படுத்தியுள்ளார் வான்மீகி...!” எல்லாம் ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்... வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்...!.
 
1.ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
2.இந்த உலக ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
3.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.
 
ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து... பலம் குன்றுவதைக் காட்டவே... இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.
 
அதாவது மனித வாழ்க்கையில் மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டி தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள்
1.தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் இந்த உலக வாழ்க்கையின் “அதி ஆசை நிலை...!”
 
இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை...”
 
மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி “மாயமானாகிய அதி ஆசை நிலையைத்தான் தகர்க்கின்றது...!”
 
ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உரு கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தி ஊட்டியதாகச் சொல்லப்படுகிறது.
 
எப்படி...?
 
1.உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து
2.வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி
3.ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.
 
ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.
 
அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.
 
அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலக ஆசை நிலையாகிய மாயமான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன...! ஏன்...?
 
காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்...!
 
அது மட்டுமல்ல...! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி...!)
 
உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.
 
மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும் எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டியுள்ளார்.
 
1.மனித உயிரான்மாக்கள் பெற வேண்டிய உயர் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
2.”மதி வழி” கொண்டு நாம் முன்னாடி சென்றால்...
3.”விதி வழி” பின் செல்லும்... என்று தெளிவாக அருளியுள்ளார் வான்மீகி மாமகரிஷி...!