ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 27, 2021

நல்லதை நிலை நிறுத்த... நல்லதை நமக்குள் வலுவாக்க... நல்லதை நிலைக்கச் செய்ய... பக்குவம் தேவை

நம் குழந்தையைச் செல்வமாக வளர்க்கின்றோம். அப்படி அவன் வளரப்படும் பொழுது “அவன் சொன்னபடி கேட்கவில்லை...!” என்று வைத்துக் கொள்வோம்.
 
எல்லாம் செய்தேன்... இவன் இப்படிச் செய்கின்றான்...! என்றுதான் கடைசியில் சொல்கின்றோம். அவனுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லும் நல்ல மனது நமக்கு வருகின்றதா... என்றால் இல்லை.
 
1.நல்லதைச் செய்தேன் என்று சொல்லி வேதனையையும் ஆத்திரத்தையும் வளர்க்கும் நிலை தான் வருகின்றது.
2.நல்லதைச் சொல்ல முடியாது போய்விடுகின்றது.
 
அதே போல் நண்பராகப் பழகுகிறோம். தொழில் செய்யும் போது கடனைக் கொடுக்கின்றோம். இத்தனாவது தேதி பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்றோம்.
 
ஆனால் கொடுக்க வேண்டிய தேதி வந்தபின் பணம் வரவில்லை என்றால் என்ன செய்கிறோம்...?
 
சொன்ன நேரத்திற்குக் கொடுக்கவில்லையே என்று கேட்கின்றோம். ஒரு இரண்டு தடவை கேட்டு விட்டு மூன்றாவது தடவை கேட்கும் போது நம் சொல்லில் கடினம் வந்து விடுகின்றது. பக்குவமாகச் சொல்லிக் கேட்கும் நிலை இல்லை... அந்தப் பண்பை இழந்து விடுகின்றோம்.
 
அழுத்தமாகக் கேட்டு வெறுப்பின் தன்மை ஆகும் பொழுது பக்குவம் தவறி விடுகின்றோம்.
 
1.ஆனால் முதலிலே அவருக்கு நாம் உதவி தான் செய்தோம்.
2.இருந்தாலும் செய்த உதவியை நாம் காக்க முடியாதபடி வெறுப்பின் தன்மை வளர்கிறது.
3.இரண்டு பேருக்கும் இடையே பகைமை ஆகிவிடுகின்றது... உதவி செய்தும் பயனற்றுப் போகின்றது
4.உதவி செய்தோம்... நண்பருடன் மகிழ்ச்சியாக இருந்தோம்... என்று அந்தச் சந்தோஷத்தை எடுத்து வளர்க்க முடியவில்லை.
 
ஆனால் உங்களுக்கு வர வேண்டிய வரவு வரும், என் பணத்தை எப்படியும் நீங்கள் திருப்பிக் கொடுப்பீர்கள் என்று சொல்லி இருந்தால் அங்கே வெறுப்பாக வராது... பகைமையும் ஆகாது.
 
ஆகவே பக்குவம் தவறும் பொழுது அதனால் பின் விளைவுகள் எத்தனையோ வருகிறது.
 
உதாரணமாக நாம் பலகாரம் சுடுகின்றோம். அதைச் சுடும் போது பக்குவமாக எடுத்து வைத்தால் பரவாயில்லை. அப்படிப் போடும் பொழுது தட்டிலே நிறைந்து விட்டால் மேற்கொண்டு போட்டால் கீழே தான் விழுகும்.
 
கீழே விழுந்தால் மண் ஒட்டிக் கொள்கின்றது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் பக்குவம் தவறும் போது பலகாரம் மண்ணாகி விடுகின்றது.
 
சுடச்சுட எடுத்துப் போட வேண்டுமென்று தான் விரும்புகின்றோம். ஆனால் கீழே விழுந்த பிற்பாடுதான் எடுத்துப் போடும் நிலை வருவகிறது. சில நேரம் இப்படி ஆகிவிடுகிறது.
 
அதை நிதானித்துப் பொறுமையாகப் பக்குவமாக நிறுத்தி வைத்து மற்ற பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்தால் இது போன்று ஆகாது. கீழே தரையில் விழுந்த பின்பு தெரிகின்றது.
 
1.அதற்கப்புறம் எடுக்கின்றோம்... எடுத்தாலும் அதிலே மண் ஒட்டி இருக்கின்றது.
2.மற்ற நல்ல பலகாரத்துடன் இதைக் கொண்டு போட்டால் நன்றாக இருக்கும் அதிலேயும் மண் ஓட்டி விடுகின்றது.
3.சுட்டும் பலன் இல்லாது சுவை கெடும் நிலை ஆகின்றது.
 
இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் எந்தச் செயலை எடுத்தாலும்... எந்தச் சொல்களைப் பேசினாலும்... பக்குவம் தவறி விட்டால் நமது வாழ்க்கையில் மீண்டும் வேதனை வெறுப்பு கோபம் குரோதம் என்ற உணர்வு வளர்ந்து நம் நல்ல குணங்களை மாற்றி விடுகின்றது.
 
ஆகவே...
1.இந்த வாழ்க்கையில் நாம் எல்லாம் நல்லதைச் சொன்னாலும்
2.அந்த நல்லதை நிலை நிறுத்த... நல்லதை நமக்குள் வலுவாக்க... நல்லதை நிலைக்கச் செய்ய...
3.அந்த உணர்வுகள் நமக்குப் பக்குவம் தேவை.
 
ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்றுதான் மற்றவருக்கு உதவி செய்கின்றோம். ஆனால் உதவி செய்த நிலைகள் பக்குவம் தவறி விட்டால் பகைமையாகி விடுகின்றது.. வேதனை வெறுப்பு கோபம் என்று எத்தனையோ உணர்வுகள் வருகிறது.
 
ஒருவர் கஷ்டமாக இருக்கிறது என்று கேட்டால்... அந்த நேரத்தில் கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட்டு... இந்த நிலை இருக்கின்றது பார்த்துச் செய்கிறேன்...! என்று சொல்லிப் பழக வேண்டும்.

அப்படிப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்கவில்லை என்றால் நம்மை எங்கேயோ கொண்டு போய்ச் செலுத்திவிடும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.