ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 18, 2021

கோப உணர்வின் இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

இன்றைய சகஜ வாழ்க்கையில் கோபப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த நேரத்தில் நமக்குள் உணர்வுகள் அழுத்தமாகி அதிகமான சப்தமும் போடுகின்றோம். ஏன்...?
 
நாம் நுகரும் உணர்வுகள் எல்லாம் நம் உயிரிலே மோதிய பின் அது டிரன்சாக்சன் செய்து நம் உடலுக்குள் பரவச் செய்கிறது.
 
விஞ்ஞான ரீதியாக மைக்கின் மூலமாக... ஒரு டிரான்ஸிஸ்டர் ஒலிகளைக் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப ஒலிக்கற்றைகளை ஒலி பெருக்கிக்கு அனுப்பி அதன் மூலம் தான் அந்தச் சப்தங்களை நாம் கேட்கின்றோம்.
 
1.இதைப் போல தான் எதிர்மறையான அலைகள் நம் மீது மோதும் போது
2.நாம் சுவாசித்த அந்தக் கார உணர்வின் ஒலிக்கற்றைகள் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது
3.அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை நாமே அடக்க முடியாத நிலைகளாகி
4.ஓங்கிச் சப்தமிடுவது... சப்தமான பேச்சுக்களைப் பேசுவது... கொடூர உணர்ச்சிகளை தூண்டும் செயல்களைச் செய்வது...
5.இப்படித் தான் நாம் அந்த இடத்தில் செயல்படுகின்றோம்.
 
அந்தக் கொடூர செயலைச் செயல்படுத்தும்போது கேட்போர் உணர்வுகளிலும் அது பாய்ந்து நம்மைக் கண்ட பின் அவர்களும் வெறுக்கும் தன்மை வருகின்றது.
 
அந்த வெறுக்கும் தன்மை அதிகரிக்க அதிகரிக்க... நமக்குள் கோபத்தின் தன்மை அடுத்து எல்லை கடந்தே செல்லும்.
1.யார் மேல் கோபம் படுகின்றோமோ... யாரை வெறுக்கின்றோமோ...
2.அவர் உணர்வுகளை நினைத்து நினைத்துக் கோபத்தின் உணர்வுகள் எல்லை கடந்து செல்கின்றது.
 
அதனால் நமது உடலில் கடுமையான நோயாக இரத்தக் கொதிப்பாக உருவாகி விடுகின்றது. அப்படிப்பட்ட நிலைகள் வரும் பொழுது சிந்திக்கும் நிலைகள் அழுத்தம் அதிகமாகி விட்டால்... அதன் உணர்வு இரத்த அழுத்தம் (PRESSURE) அதிகமாகும்போது கண்ணிற்குக் கவரும் உணர்வுகள் அந்த இரத்தத்தின் வழி அந்த உணர்வின் தன்மையாக இயக்கும்.
 
ஆனால் கண்ணிலே இந்த இரத்தத்தின் தன்மை அதிகரித்து விட்டால் கண்கள் சிவந்து விடும். கண்கள் சிவந்து விட்டால் கொடூர உணர்வுடன் காட்சி தரும்.
 
சில பேர் கோபப்பட்டால் பார்க்கலாம்... வெளியில் தெரியவில்லை என்றாலும்... கோபத்தின் கனலை அவர்கள் கண்களிலே கண்டுவிடலாம். சிவப்பு நிறமாக அதன் உணர்வு இயக்கும்.
 
அந்த நேரத்தில் எதைப் படித்தாலும்... எதைப் பார்த்தாலும்... வெறுத்திடும் தன்மையே வரும். அனைத்தையும் அழிக்கும் உணர்வே வரும்.
 
1.கோபம் வந்து விட்டால் தன் பிள்ளையானாலும் அடித்துத் தாக்கும் உணர்ச்சி வந்துவிடும்
2.கோபம் வந்தால் நல்ல பொருட்களைக் கண்டாலும் தட்டி எறியச் செய்யும்
3.கோபம் வந்துவிட்டால் நல்ல பொருளைத் தூக்கி (கனமாக இருந்தாலும்) உடைக்கச் செய்யும்
4.புலி எப்படி இரக்கமற்று மற்றதைத் தாக்குகின்றதோ அத்தகைய உணர்ச்சி தான் இயக்கும்.
 
உதாரணமாக ஒரு நல்ல உணர்வுடன் ஏதாவது தென்பட்டாலோ அல்லது யாராவது அந்த நேரத்தில் மகிழ்ச்சியாகச் சிரித்தாலோ அவர்களைப் பார்க்கும் பொழுது வெறுக்கும் உணர்வுகளைத் தான் தோற்றுவிக்கும்.
 
இதற்கெல்லாம் காரணம் யார்...? நமது உயிரே...! நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதன் உணர்ச்சிகளாகத் தான் நம்மை இயக்குகின்றது.
 
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதிலே எப்பொருளைப் போடுகின்றோமோ... அது அந்த வெப்பத்தால் அதன் உணர்வின் மணங்களை வெளிப்படுத்துகின்றது. அந்த மணத்திற்கொப்ப நுகர்ந்தோர் உணர்வுகளையும் இயக்கச் செய்கின்றது.
 
இதைப் போலத் தான் இந்த உயிரின் இயக்கங்கள் என்பது அது நெருப்புக்கு ஒப்பானது தான்...!
1.நாம் எண்ணியதைத் தான்... நாம் நுகர்ந்ததைத்தான் அது இயக்கிக் காட்டுகின்றது.
2.அந்த உணர்வைத்தான் கண் கொண்டு பார்க்கவும் செய்கின்றோம்.
 
கோபம் வந்துவிட்டால் சிந்திக்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது. அதே சமயத்தில் நமது செயல்களும் சீராக இருப்பதில்லை.
 
ஒரு கணக்குப் பார்த்தால் சரியாகப் பார்க்க முடிவதில்லை. ஒரு பொருளைச் சீராக பார்த்து... அதனின் தரத்தைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் தன்மையும் இழந்து விடுகின்றது.
 
1.ஆனால் தரமாக சரக்காக இருப்பினும்
2.நம் உணர்வுடன் அந்த தரமிழந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நல்ல பொருளைப் பார்க்கும்போது வெறுப்பாகின்றது.
3.நல்லவைகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது
4.வியாபாரத்தில் இத்தகைய நிலைகள் பெற்றால் வியாபாரம் மந்தமாகும்.
 
வியாபாரம் மந்தமாகும் பொழுது வேதனை என்ற உணர்வு கூடி கோபமும் வேதனையும் மீண்டும் அதிகமாக அதை நமக்குள் வளர்க்க வளர்க்கச் சிந்தனை குறைவாகி விஷத்தின் தன்மை ஆற்றல் அதிகமாகி இந்த உடலில் கடுமையான நோய்கள் உருவாகி விடுகின்றது.
 
பின் மனித உடலை உருவாக்கிய நல்ல அணுக்களின் செயலாக்கங்களை அது மாற்றி விடுகின்றது.
 
உதாரணமாக குளவி ஒரு புழுவைக் கொட்டிய பின் அந்த உணர்வுகள் கலந்து கொண்ட பின் புழுவின் உடலே குளவியாக மாற்றமடைகின்றது.
 
அதைப்போல் தான் நம் உடலிலும் அத்தகைய மாற்றம் ஆகும் பொழுது...
1.இந்த உடலை விட்டு உயிராத்மா சென்றபின்
2.எந்தக் காரமான உணர்வை இந்த உடலில் அதிகமாக எடுத்தோமோ
3.அதற்கொப்ப மற்றொரு உடலின் ஈர்ப்புக்குள் சென்று
4.அங்கே இதன் உணர்வை முழுமையாக்கி அந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளி வரும்போது
5.அடுத்துப் புலியாகத் தான் நாம் பிறக்க முடியும்.