ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 10, 2021

துன்பங்களால் அவதிப்படும் நேரத்தில்… நல்லதை (அந்தச் சந்தர்ப்பத்தில்) எப்படிக் கொண்டு வர முடியும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

உதாரணமாக உங்கள் காலில் அடிபட்டு வலியுடன் இருக்கும் பொழுது யாராவது உங்களிடம் வந்து “சந்தோஷமாக இருக்க வேண்டும்…” என்று சொல்லட்டும். உங்கள் வலி இன்னும் கொஞ்சம் அதிகமாகும்…!
 
அதே சமயத்தில் படுக்கையில் நோயுடன் இருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் ஒருவர் வந்து உங்கள் பையன் இன்ன இடத்திற்குப் போனான்… அங்கே போய் வீரமான ஒரு செயலைச் செய்தான்…! என்று சொன்னால் போதும்.
 
அதைக் கேட்டவுடன் ஆஹா… என் பையைன் அப்படிச் செய்தானா..! என்று கேட்டவுடனே படுக்கையிலிருந்து எழவில்லை என்றாலும் தன் உடலில் உள்ள வலிகளை எல்லாம் மறந்து விடுவார்கள்.
 
அல்லது உங்கள் பையன் படிப்பில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கி இருக்கின்றான். மிகவும் கெட்டிக்காரனாக இருக்கின்றான்…! என்று திடீரென்று உங்களிடம் யாராவது சொல்லட்டும்.
1.உங்கள் வலி எல்லாம் போய்விடும்
2.ஒரு இனம் புரியாத ஆனந்த நிலை வரும்
3.உற்சாகத்துடன் எழுந்து நிற்கச் சொல்லும்.
 
இதைப் போன்று தான் உங்கள் உணர்வின் தன்மை கொண்டு அருள் மகரிஷிகளின் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி விட்டு நீங்கள் பார்த்தோர் உணர்வுகளில் வைரத்தைப் போன்று வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் அவர்கள் சொல்லும் செயலும் ஜொலிக்க வேண்டும் நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் வாழ்க்கை வைரத்தைப் போன்ற ஜொலிக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்..
 
அந்தச் சமயத்தில் தீமை செய்யும் உணர்வுகளை நாம் நேரடியாக நுகர்வதில்லை. மாறாக நாம் உயர்ந்த உணர்வுகளைத் தான் (மறைமுகமாக) எடுக்கின்றோம்.  அப்பொழுது வாலி என்ற விஷத் தன்மையான உணர்வு நம்மை இயக்குவதில்லை.
 
ஆக… மனிதனின் வாழ்க்கையில் அறியாது வரும் இடையூறுகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இந்தத் தத்துவத்தைக் கொடுத்துள்ளனர்.
 
ஆனால் படித்தவர்கள் என்ன செய்கிறார்கள்…?
 
ஞானிகள் கொடுத்த தத்துவங்களை வைத்து வாதிடும் திறமைகளைக் காட்டுகின்றார்களே தவிர ஞானிகள் கொடுத்த மூலக் கூறுகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவதில்லை.
 
இராமாயணத்தில் காட்டப்பட்ட குகன் என்பது நம் உடலில் உள்ள இரத்தநாளங்கள் தான்…!
 
வைரத்தைப் போல் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும் நாம் பார்ப்போர் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று எண்ணினால் நம் இரத்தங்களில் இது எல்லாம் கலக்கின்றது.
 
நம் இரத்தநாளங்களில் நாம் கவர்ந்த உணர்வுகள் உடல் முழுவதும் படரப்படும் போது ஒரு அமைதிப்படுத்தும் உணர்வாக… புதிய உணர்வாக  அமைகின்றது.
 
இதைத் தான் காட்டிற்குள் செல்லும் போது இராமன் முதலில் குகனை நண்பனாக்கிக் கொண்டான் என்று காட்டுகின்றனர்.
 
காவியத்திலே குகனைக் காட்டும் பொழுது காடு மலை வனாந்திரம் அனைத்திலும் மிருகங்களிடமிருந்தும் காப்பாற்றும் நிலைகள் கொண்டு பாதுகாப்பாகச் செல்கிறான்… இராமனுக்கு உதவி செய்கின்றான்…! என்று காட்டுகின்றனர்.
 
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி உடலுக்குள் செல்லப்படும் போது இரத்தத்திலே கலந்து…
2.நம் உடல் முழுவதும் அந்த இரத்தங்கள் சுழன்று வரப்படும் போது
3.ஏற்கனவே இருக்கும் பகைமை கொண்ட அணுக்கள் இதை உட்கொண்டால்
4.அதனின் வீரியத் தன்மை அந்த வலுவை இழக்கின்றது.
 
ஆகவே நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்குள் (உடலுக்குள்) எந்த வழியில் செயல்படுகின்றது என்பதை இராமனைக் காட்டுக்குள் போகின்ற மாதிரி காவியங்களைப் படைத்துக் காட்டினார் வான்மீகி.
 
இராமன் காட்டுக்குள் சென்றாலும்…
1.பகைமைகளை எப்படி மாற்றுகின்றான் என்று குகனைக் காட்டி
2.அந்தக் குகனை வைத்து மற்றவர்களை இராமன் எப்படி நட்பாக்குகின்றான்..? என்ற நிலையில்
3.எண்ணங்களின் குவியலும்… இந்த எண்ணத்தின் செயலும்…
4.வாலி என்ற நிலைகள் எவ்வாறெல்லாம் இயக்குகின்றது என்ற நிலையையும்
5.உணர்வின் செயலாக்கங்களைத் தெளிவாக்குவதற்குக் காவியமாகப் படைத்து
6.மனிதன் வாழ்க்கைக்குத் தீமையான உணர்வின் செயலாக்கங்களிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும் என்ற நிலையும்
7.அதை அருள் ஒளிச் சுடராக மாற்றும் நிலை அது எவ்வாறு…? என்றும் இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே வான்மீகி காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நம் இரத்தங்களில் கலக்கச் செய்வோம்… அருள் ஞானம் பெறுவோம்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தியைப் பெறுவோம்.