ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 4, 2020

தெய்வீக இசையின் மூலம் நாம் பெறக்கூடிய ஆத்ம சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


எங்குமே… எதிலுமே… “எல்லாமே” ஒலியின் தன்மை கொண்டு உருவாக்கப்படுவது தான்…! உருவாக்கப்படும் நற்சக்தியும் தீய சக்தியும் எதுவாக இருந்தாலும்.. இந்த ஒலி கொண்டு தான் பிறக்கப்படுகின்றது.

இவ்வொலி நாதம் கொண்டு அமையப்படுவது தான் உயிரணுக்கள் யாவையுமே.
1.இந்த நாத விந்துச் சேர்க்கை செயலில் எடுக்கப்படும்
2.சுவாசத்தின் நிலைக்கொப்பத்தான் உயிராத்மாவின் செயலும் உள்ளது.

நெற் பயிரில் அந்தப் பலன் தருவாயிலும் “இக்காற்றலையின் நாதச் சேர்க்கையைத் தன் ஈர்ப்பில் சேமிக்கப்படும் நிலைக்கொப்பத்தான்” அக்கதிரின் மணியில் அரிசியின் நிலை வளர்கின்றது.

ஒரு கதிரில் வரும் நெல் விதையில் எல்லாமே மணியாக இருப்பதில்லை… பதர்களும் உண்டு…!

அதைப் போன்றே கனிகளாக உருவாகும் பொழுதும் ஒரு செடியில் பூக்கும் பூக்களிலும் ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லாமல் ஒரே செடியில் பூக்கும் பூக்களிலும் சில சிறுத்துக் கரடு தட்டிய நிலையில் வரும்.

இதைப் போன்றே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அது எடுக்கும் நாதத்திற்குகந்த விந்துத் தன்மை தான் வளர்கின்றதப்பா…!

இந்நாதத்தால் எடுக்கும் உருவகத் தன்மையில் நம் சித்தர்கள் காட்டிய செயல் முறையின் “ஆரம்பத் தன்மை தான்…” பக்தியால் ஜெபிக்கும் “ஜெப நாதப் பாடல்கள்…!”

1.அன்பென்ற பக்தி பூண்டு
2.ஆசை என்ற நாத இனிமையைக் கூட்டி ஜெபப்படுத்தும் முறை தான்…
3.இவ்வுயிராத்மாவிற்குச் சக்தியைக் கூட்டும் “ஆரம்பச் சேர்க்கை வழி காட்டி முறை…!”

இப்புவியின் வளர்ப்புடனே நல் வளர்ப்பாக பல நாயன்மார்கள் இப்பாடலின் நாதத்தில் சுழல் விகிதத்தில் செயல்பட்ட முறை தான் பக்தியின் நாத ஜெப முறை.

இஜ்ஜெப முறையின் வளர்ச்சியால் நம் பூமியின் சுழல் நாதமான ஓ...ம் என்ற நாதத்தை உள் நாதமான ஓமுக்குள்.. ஓமாக… நம் உயிராத்மாவின் நாதத்தை… இப்புவிக்கே நாதம் தந்த சகல ரிஷிகளின் நாத அலையுடன் கலக்கவிட வேண்டும்.

ஓமுக்குள் ஓமாக இருந்து அவ்வலை நாதத்துடன் தியானத்தில் எண்ணத்தைச் செலுத்தி அவ்வலைத் தொடரின் தொடர்பலையை நம் சுவாசத்தால் எச்சப்தரிஷியின் அலைத் தொடர்புடனும் தொடர் கொள்ள முடியும்.

எண்ணத்தால் செலுத்தும் சுவாச நாதம் கொண்டு அவ்வலையின் தொடர்பை நம் ஆத்ம உயிர் தன் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொன்றின் தன்மையும்
1.“தனித் தன்மை கொண்ட உயர் நாதச் செயலாகத் தான்”
2.ரிஷித் தன்மையின் “வளர் வளர்ப்பு…” செயல் நிலை செயல்படுகிறது.

அவர்கள் வளர்ப்பாக நாம் உருவாக வேண்டும் என்றால்… அது உயிர் வழியாக எடுக்கும் தியானத்தின் சுவாச அலைத் தொடரின் வழி முறைச் செயலினால் தான் முடியும்.

தியானத்தில் எடுக்கும் இந்தச் சக்தியால் இப்பிம்பக் கூட்டின் ஜீவ சக்தி அணு வளர்ச்சிச் சேர்க்கையின் செயல் கொண்டு நம் எண்ணத்தால் எடுக்கும் சப்தரிஷிகளின் அலைத் தொடர்பின் சக்தியை இவ்வுயிராத்மா வளர்த்துக் கொள்ள முடியும்.

“காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது தான் இவ்வுயிராத்மா…” என்று ஏற்கனவே தெளிவாக்கினேன்.
1.எண்ணத்தின் செயலைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியான நிலையின் தொடர் நிலைக்கொப்ப
2.இப்புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து ஞான வளர்ச்சிச் செயலையும் சித்துத் தன்மை வளர்ப்பையும்
3.இவ்வலைத் தொடர்பின் எண்ண நாதச் சேர்க்கையைக் கொண்டு
4.உடல் என்ற இயந்திரத்தின் உதவியால்
5.இவ்வுராத்மாவையே உயர் ஞானக் கூட்டு ஆத்மாவாக உயர்த்த முடியும் - “இவ்வெண்ண நாதத்தால்...!”