ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2020

காலையில் கண் விழித்ததும் ஏன் துருவ தியானம் செய்ய வேண்டும்…?

கேள்வி;-
நம்முடைய உயிர் ஒளியான பிறகு உயிர் பிரிந்து துருவ நட்சத்திரத்துடன் இணைந்து விடும் என்று சொல்கிறார்கள். அப்படியானால்  தினமும் துருவ தியானத்தைக் கடைப்பிடித்தால் உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து விடுமா…? துருவ தியானத்தை தினமும் நான் செய்யலாமா…?

பதில்:-
பழம் கனிந்தால் மரத்தில் தங்காது. நெல் பயிரில் மணிகள் உருவாகி விளைந்து விட்டால் “நெல் செடியை அறுத்து…” நெல்லை மட்டும் பாதுகாப்பாக எடுத்துத் தான் ஆக வேண்டும்.

இது எல்லாம் இயற்கையின் நியதி.

அது போல் மனித ஆன்மா ஒளியானால் விண்ணுக்குத் தான் போகும். இங்கேயே இருக்க முடியாது. இதற்காக நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.

இந்த உபதேசம் கொடுக்கப்பட்டது இந்த இயற்கையின் உண்மையை உணர்த்துவதற்காகத்தான்.

மனித வாழ்க்கையில் நாம் வாழக்கூடிய குறுகிய காலமான சுமார் 60, 70 ஆண்டு காலத்திற்குள் அந்த மெய் ஒளியைப் பெற்று அதன் மகசூலாக நம் உயிரான்மாவை ஒளியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமானது.

தாய் குழந்தையைப் பெற்றடுக்கும் காலம் சராசரியாக 9-10 மாதங்கள் என்று சொல்கிறோம் அல்லவா. அது போல் தான் இதுவும்…!

அதாவது குறைப் பிரசவம் ஆனால் குழந்தை வளர்ச்சி இருக்காது அல்லது இறந்துவிடும்.

குழந்தை எப்படி 10 மாதங்களில் வளர்ச்சியாகி முழுமை அடைந்து வெளி வருகின்றதோ அது போல் நாமும் நமக்குள் அருள் ஒளியை முழுமையாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பது தான் அந்த உபதேசத்தின் மூலக் கருத்து.

நீங்கள் பயப்படுவது போல் ஒரே நாளில் சக்தியை எடுத்து… அப்படியே உடலை விட்டுப் பிரிந்து… விண்ணுக்குச் செல்வது அல்ல. அப்படி யாருமே அடைய முடியாது.

1.சிறுகச் சிறுகத்தான் வளர முடியும்.
2.சிறுகச் சிறுக வளர வேண்டும் என்றாலும்
3.செடிக்குத் தண்ணீர் உற்ற வேண்டும் அல்லவா (செடிக்குத் தண்ணீர் ஊற்றவில்லை என்றால் வாடிவிடும்)

அது போல் ஆகாதபடி அனு தினமும் நாம் அந்த அருள் சக்தியைப் பெற்று ஞானப் பயிரை வளர்த்துக் கொள்ளும் பழக்கத்திற்காகத் தான் குருநாதர் “துருவ தியானம் செய்ய வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்.