ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2020

இருள் சூழ்ந்த இந்த உடலான உலகம் வேண்டாம்..! என்று சொன்னவர்கள் தான் “இராமகிருஷ்ணரும்… விவேகானந்தரும்…”


ஒரு மந்திரவாதியிடம் சீடனாக இருந்தவன் “ஒரு பெரிய மகான் இங்கே வருகின்றார்…” என்ற நிலையில் கேள்விப்பட்டு விவேகானந்தரைக் காலில் விழுந்து பாத நமஸ்காரம் செய்கின்றான். உங்கள் அருள் வேண்டும்…! என்று அவரிடம் கேட்கின்றான்.

“நீ ஏங்கி வந்த நல்வழி நடக்கட்டும்… என்றும் அதன் வழி நீ உயர்வாய்...!” என்றும் விவேகானந்தர் அவனை ஆசீர்வதிக்கின்றார்.

இந்த ஆசியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்ட பின் தன்னுடைய மந்திரவாதியான குருவிடம் சொல்கிறான். நான் அந்த மகானிடம் சென்றேன்… அவர் எனக்கு நல்வாழ்த்து கூறினார்..! என்கிறான்.

அப்படியா..! அவர் நாளை மடியப் போகின்றார். இரத்த இரத்தமாகக் கக்கப் போகின்றார்…! அதன் வழியில் அவர் சொன்னதை நீ செய்தாய் என்றால் நீயும் இரத்த இரத்தமாக வாந்தி எடுத்து மடியப் போகின்றாயா…? என்று சிஷ்யனிடம் கேட்கின்றான்.

அதைக் கேட்டதும் இவனும் நடுங்குகின்றான்.

அந்த மந்திரவாதி சொன்னபடி விவேகானந்தர் சுற்றுப் பயணம் செய்யும் பொழுது பேச முடியாதபடி இரத்த வாந்தி எடுக்கின்றார். முச்சுத் திணறல் ஆகிப் பேச முடியாது தடுக்கின்றது.

அப்பொழுது தன் குருவை நினைக்கின்றார். ஒவ்வொரு நிமிடமும் தடைப்படும் உணர்வை உணர்கின்றார்.
1.மற்ற மந்திரவாதிகள் என்ன செய்கின்றனர்..?
2.நல்ல செயல் செய்வதை ஏன் தடைப்படுத்துகின்றனர்…? என்று சிந்திகின்றார்.

இருந்தாலும் தான் சாந்த உணர்வு கொண்டாலும் கொடூர உணர்வின் செயலுலிருந்து “தான் மீளவில்லையே…” என்று உணர்கின்றார். அப்படி உணரப்படும் பொழுதுதான் தன்னுடைய சிந்தனை மேலிட
1.இனி வாழ்க்கை என்ன…? என்ற நிலையில்
2.தன் உணர்வின் தன்மை வெளியாக்கி உயிரான்மாவை வெளியேற்றிக் கொள்கின்றார்.

எத்தனை காலம் நாம் போரிடுவது..? நன்மையின் தன்மைகளைச் செய்தாலும் விஷத்தின் தன்மை தனக்குள் கலக்கப்படும் பொழுது குரு காட்டிய வழியிலிருந்து நாம் பின் தங்கிவிடுவோமோ…!

இந்த உடல் நமக்கு எதற்கு..? என்ற உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு கொதிகலனாக மாற்றித் தன் உடலை விட்டுப் பிரிந்து சென்றார் விவேகானந்தர்.

ஒரு சமயம் இராமகிருஷ்ண பரமகம்சரும்.. அவருடைய சீடர்களும்.. ஞானத்தை அறிய வேண்டும் என்ற ஆவல் கொண்ட மற்ற பக்தர்களும்.. மாலை நேரத்தில் நடந்து வருகின்றார்கள்.

அதே சமயத்தில் இராமகிருஷ்ணரின் செயலாக்கங்களை அறிவதற்காக மந்திரத்தால் ஜெபித்துப் பொருளை வரவழைத்தும் சில ஆவி நிலைகளை இயக்கும் மந்திரவாதி ஒருவனும் இந்தக் கூட்டத்துடன் கூட வருகின்றான்.

அப்பொழுது இருண்டு விடுகின்றது. இராமகிருஷ்ண பரமகம்சருடன் வந்த ஒருவருக்குக் கல் தடுக்கியது.

அப்படி இடறிக் காயம் அடைந்த பின் “ஐயோ… இருட்டாகிவிட்டதே…, விளக்கு எடுத்து வர மறந்து விட்டோமே…” என்ற ஏக்க உணர்வுடன் கூட்டத்தில் ஒருவர் சொல்கிறார்.

அப்பொழுது அங்கே அந்த இடத்தில் இராமகிருஷ்ணரால் வெளிச்சத்தைக் கொடுக்க முடியவில்லை…! என்ற இறுமாப்பு கொண்டு இவர்களுடன் வந்த அந்த மந்திரவாதி “ஜெய் பவானி…!” என்று தொடையைத் தட்டினார். “சலோ…!” என்று சொன்னவுடன் “ஒரு வெளிச்சம்” முன்னால் சென்றது.

மந்திரவாதி தன் மந்திரத்தின் தன்மை கொண்டு ஆவியை ஏவல் செய்து அந்த விளக்கை முன் அனுப்பினார்.

அப்பொழுது அதைப் பார்த்ததும் இராமகிருஷ்ண பரமகம்சர் சிரித்து விடுகின்றார்.

மந்திரவாதி… தனக்குள் சகலமும் கற்றுள்ளேன் என்ற உணர்வுடன்... பிறிதொரு ஆவியின் வலிமை கொண்டு செயலாக்கும் வலிமை எனக்கு உண்டு…! என்ற எண்ணத்தில் இதைச் செய்து காட்டுகின்றான்.

நான் “இந்த வெளிச்சத்தை” விரும்பவில்லை என்கிறார் இராமகிருஷ்ணர். ஏனென்றால்
1.என் உடலில் அக வெளிச்சமான… அறிவின் தெளிவு வரவில்லை
2.இருளை அகற்றிச் செயல்படும் “முன் சிந்தனை…” என்ற இந்த உணர்வு இல்லாது போய்விட்டது
3.இங்கே வந்தோருக்கும் வரவில்லை.

ஆகவே சிந்தித்துச் செயல்பட்டால் இத்தகைய குறையிலிருந்து விடுபடலாம் அல்லவா…! அந்த அறிவின் ஒளி எனக்குள் வளர வேண்டும் இந்த ஒளி தான் எனக்குப் பெறவேண்டும்…!

சலோ… சல்…ஜாவ்…! என்று நீ சொல்லும் உணர்வுகள்… நீ ஏவல் செய்து குட்டிச் சாத்தான் மூலம் எனக்கு வழி கொடுப்பதை… இன்னொரு ஆவியைக் கொண்டு அடக்கி இதன் உணர்வு கொண்டு மாயாஜாலம் செய்தாலும்… இந்த ஒளி கறிக்கு உதவாது… இந்த உடலுக்கும் உதவாது.

அறிவின் ஒளியாகத் தெரிந்து நடந்தால்.. இந்த உணர்வுகளையே ஒளியின் சரீரமாக மாற்ற முடியும்… “அது தான் எனக்குத் தேவை…!” என்று அங்கே தெளிவாக உபதேசிக்கின்றார்.

இராமகிருஷ்ண பரமகம்சர் சிரித்ததைக் கண்டு பல பேருக்கு மத்தியில் தன்னை அவமதித்து விட்டாரே…! என்று அந்த மந்திரவாதி ஏவல் செய்தார்.

எந்த வாயினால் கூறினாரோ அந்த உணர்வை அடக்க ஏவல் செய்து… பேச முடியாதபடி.. உணவு உட்கொள்ள முடியாதபடி… பல துன்பங்களை இராமகிருஷ்ண பரமகம்சருக்கு உருவாக்கினார் அந்த மந்திரவாதி.

ஆனால் மற்றவர்கள் எல்லோரும் இராமகிருஷ்ணருகுக் கேன்சர் நோய் என்ற நிலையில் முடிவுக்கு வருகின்றார்கள். அதற்கு மருந்து கொடுக்கவும் துணிகின்றார்கள்.

ஆனால் இராமகிருஷ்ண பரமகம்சருக்கு மந்திரமும் தெரியும். உடலில் உள்ள உணர்வுகளும் தெரிகின்றது. இது வந்த நிலை வேறு…!

இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டபின் மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்குத் தான் செல்லாமல் உடலைக் காக்க மற்ற எதையும் முயற்சிக்காது
1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல…
2.இந்த உடலைச் சொந்தம் கொண்டாட வேண்டாம்…
3.அருள் ஒளியைச் சொந்தம் கொண்டாட வேண்டும்.
4.எனக்குள் நடந்த இந்த நிகழ்ச்சி இந்த உடலுடன் போகட்டும்…
5.எனக்குள் எடுத்துக் கொண்ட அறிவு என்னுடன் என்றுமே வளரட்டும்…
6.இருள் சூழ்ந்த இந்த உடலான உலகம் எனக்கு வேண்டாம்….
7.அருள் ஒளி பெற்ற அருள் ஒளியின் உடல் எனக்குத் தேவை…
8.ஒளியின் சரீரம் தான் எனக்கு தேவை…! என்று
9.அவரை வைத்தியம் பார்க்க வந்தோருக்கெல்லாம் உபதேசித்துள்ளார்.

இதை எல்லாம் குருநாதர் எனக்கு (ஞானகுரு) நேரடியாகக் காட்டிய உண்மைகள். அன்று நடந்த சம்பாஷணைகளை அப்படியே காதில் கேட்கும்படிச் செய்தார்.

ஆனால் இராமகிருஷ்ணர் உபதேசித்த இந்தப் பேருண்மைகள் எதுவும் வெளியிடப்பட்ட நூல்களில் வரவில்லை என்பதையும் குருநாதர் உணர்த்தினார்.