ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 16, 2020

நோய்வாய்ப்பட்டவரை நோயிலிருந்து விடுபடச் செய்யும் பயிற்சி


ஒருவர் கடுமையான வியாதியுடன் இருந்தால்… கடைசியில் அந்த ஆன்மா வெளி வந்த பின் அவர் மீது பற்று கொண்ட உணர்வு நமக்குள் அதிகமாக இருந்தால் அந்த ஆன்மா நம் உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

பின் அந்த உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பெருகத் தொடங்கிவிடுகின்றது. நம் நல்ல குணங்களை எல்லாம் மறையச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும்..?

உடலுடன் இருக்கும் பொழுதே அவருக்குள் இருக்கும் தீமையான குணங்களை மறையச் செய்ய
1.அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் ஓங்கி வளரச் செய்து
2.நம் உடலுக்குள் அது வராது முதலில் தடுத்துக் கொள்ள வேண்டும்.
3.பின் அருள் ஒளியின் உணர்வைச் சொல்லாக வெளிப்படுத்தி
4.செவி வழி பாய்ச்சி அவர்களை உற்று நோக்கும்படி செய்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகரச் செய்தல் வேண்டும்.

நுகர்ந்த உணர்வுகள் அங்கே நோயை நீக்கும் அணுவின் தன்மை வளர்ச்சி அடையத் தொடங்கும். அந்த நினைவை அவர்கள் கூட்டக் கூட்ட அவர்கள் நோயிலிருந்து விடுபடுகின்றனர். இதை நாம் செய்தல் வேண்டும்.

தியானம் இருப்போர்கள் இப்படி நாம் வழி நடத்தி… மற்றோருக்கு இந்த உண்மையின் நிலைகளை உணரச் செய்தல் வேண்டும்.

உதாரணமாக ஒருவன் ரோட்டில் அனாதையாகக் கிடக்கின்றான் அவன் துடிப்பதை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால் உதவி செய்யவில்லை.

யார் பெற்ற பிள்ளையோ..! இப்படிக் கிடைக்கின்றானே…! என்று இரக்க உணர்வு கொண்டு நுகர்கின்றோம். அவன் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் அதே உணர்ச்சிகள் தூண்டுகின்றது. ஆனால் அறியச் செய்கின்றது.

ரோட்டில் கிடப்பவனுக்கு நாம் எப்படி உதவி செய்வது…? என்று சிலர் கூச்சப்பட்டுச் சென்றுவிடுவார்கள்.

ஒரு சிலர் அவரை எடுத்து எப்படியும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். இருந்தாலும் நுகர்ந்த உணர்வுகள் அவர்கள் உடலில் ஜீவ அணுக்களாக மாறும் கருக்களாக உருவாகின்றது.

மீண்டும் அந்த நினைவை அடிக்கடி எண்ணப்படும் பொழுது அது அணுவாக மாறி அவன் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகளை நுகர்ந்து அவன் எப்படிச் சிரமப்பட்டானோ அந்தச் சிரமத்தை உருவாக்கும் அணுக்கள் வந்து விடுகின்றது.

அப்படிப்பட்ட அணுக்கள் பெருகி விட்டால்…
1.அதற்கு உணவாக உட்கொள்ளும் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது அதை நுகர்ந்தால்
2.அவனைப் போன்ற நமக்குள் சிரமப்படும் உணர்வுகளும்
3.அவன் செய்த அந்த உணர்வின் தன்மையை நமக்குள்ளும் வளர்க்கத் தொடங்கிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை நாம் உற்றுப் பார்த்தாலும் உடனடியாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் அந்த அருள் சக்தி கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் பரவி உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… என்ற அந்த உயர்ந்த சக்தியினைக் கொண்டு அவன் கண்டுண்ந்த வேதனை உணர்வு நமக்குள் வராதபடி அதை அடக்கும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

அந்த அருள் ஞானிகளின் அருள் சக்திகளை நமக்குள் கொண்டு வரும் பொழுது
1.இது தான் விநாயக தத்துவத்தில் கூறியபடி அங்குசபாசவா..
2.அதாவது… அங்குசத்தைக் கொண்டு அடக்கத் தெரிகின்றது.
3.ஆறாவது ஆறிவால் நோய்… என்று தெரிகின்றது
3.அந்த மகரிஷிகள்… “நோயை வென்றவர்கள்” என்றும் தெரிகின்றது.
4.நோயை வென்ற அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
5.ஆறாவது அறிவைக் கொண்டு முருகு…! நமக்குள் உருவாகும் சக்தி பெறுகின்றது.

அப்படி உருவாகும் சக்தி பெறும் பொழுது பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன். அருள் ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்கி வளர்க்கப்படும் பொழுது நஞ்சை அடக்கிடும் உணர்வுகளாக விளைகின்றது.

நமது ஆறாவது அறிவால் தீமைகளை ஒடுக்கும் வல்லமை பெறுகின்றோம் என்பதைத் தெளிவாக்க சாஸ்திரங்கள் எத்தனையோ கூறியுள்ளது.

ஏனென்றால்… ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.
1.எதை எப்படி நுகர வேண்டும்..?
2.எதை அடக்க வேண்டும்…?
3.எதன் வழி நினைவுபடுத்த வேண்டும்…? என்று..!

மீண்டும் மீண்டும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நினைவாக்கப்படும் பொழுது உங்களுக்குள் அந்தக் கருவின் தன்மை வலுப் பெறுகின்றது. அப்பொழுது அந்த அணுவின் தன்மையாக உடலுக்குள் வலுப் பெற இது உதவும்.

அணுவின் தன்மை வலுப் பெற்றால் அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து உணவாக எடுத்து வளரப்படும் பொழுது
1.நாம் மெய் உணர்வுகளை நுகரும் அறிவும்
2.அது வழிக் கொண்டு நமக்குள் அந்த உயர்ந்த குணங்களை வளர்க்கும் நிலை வருகின்றது.

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானத்தின் பயனை ஒவ்வொருவரும் இப்படிச் செயல்படுத்த வேண்டும்.