ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2020

சித்து வழியில் முதல் சித்து எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


அல்லி மலர் சூரியனைக் கண்டவுடன் மலர்ந்து சூரிய ஒளி மறைந்தவுடன் கூம்பி விடுகின்றது. இன்னும் சில மலர்கள்… சூரிய ஒளியின் அலை பாயும் இடத்தில் எல்லாம் அதன் மலர் முகம் காட்டி மலர்ந்து “அதன் ஒளி திக்கிலேயே…” அதன் ஈர்ப்பும் திரும்பிய நிலையில் வாடிவிடுகின்றது.

இவை எல்லாமே “இயற்கை…” என்கிறான் மனிதன்…!

1.எல்லாச் சக்தியைக் காட்டிலும் இனி தன் செயற்கைக்கு உதவுவது சூரிய சக்தி தான்…! என்ற உண்மையைத் தெரிந்தும்
2.சூரியனின் சக்தியைச் செயற்கைக்குப் பாழ்படுத்தும் இன்றைய மனிதன்
3.அடுப்பான இந்தப் பூமியில் - பாத்திரமான இச்சரீரத்தில் ஒளியான ஜீவ சக்தி தரவல்ல சூரிய சக்திகளைப் போட்டு
4.இவன் சமைக்கும் கலவையில் எச்சுவையையும் பெறவல்ல சக்தி
5.”இச்சரீர ஜீவனின் உள்ளதை” மனிதன் அறியவில்லை.

இயந்திரத்தின் துணை கொண்டு சூரிய அலையைச் சில உலோகங்களின் தொடர்பைக் கொண்டு சக்தி பெறும் மனிதன்…
1.தன் எண்ணத்தின் ஆற்றலைக் கொண்டு…
2.எதனையும் செயல்படுத்தக்கூடிய செயல் தெய்வமாகத் தன்னுள் உள்ள ஆத்ம சக்தியைச் செயல்படுத்தி
3.இவ்வாத்மாவின் தொடர்பலையால் எவ்வலையையும் அதன் தொடர்பு கொண்டு தொடர்புபடுத்தி
4.அதன் மூலம் செயலாக்கக்கூடிய ஆற்றல் இந்த ஆத்ம ஞானத்திற்குண்டு…! என்பதை உணர வேண்டும்.

இவ்வுடலின் செயலுக்கொப்ப… இவ்வெண்ண ஈர்ப்பு செல்லும் முறையைச் சிறிது மாற்றி… இவ்வுடலை இயக்கும் ஆத்மாவை… இவ்வெண்ணத்தில் நாம் செலுத்தும் ஞானத்திற்கு வர வேண்டும்.

இது நாள் வரை உணர்த்திய ஞான உபதேசத்தின் தியான வலுவால்
1.இவ்வாத்மாவைச் சக்தி வாய்ந்த ரிஷிகளின் ஆத்மாவுடன் தொடர்புபடுத்தி
2.அவர்கள் பெற்ற சக்தி நிலையை நாமும் பெறவல்ல இயக்க நிலையை
3.இம்மனித ஞானத்தால் செயல்படுத்துங்கள்.

இச்சரீரக்கூடு ஜீவத் துடிப்புடன் (உயிர் உடலில்) இருந்தால் தான் இவ்வியக்கத்தின் காந்த மின் அலையின் வளர்ப்பைக் கொண்டு “ஆத்ம பலத்தை நாம் பெருக்க முடியும்…”

அதன் மூலம்… ஆத்ம பலம் பெற்ற நிலையில் வேறு ஒரு ஈர்ப்புப் பிடிப்புக்கு நாம் சிக்காமலும்… இக்காற்றுடன் கலந்துள்ள பல கோடி நிலைகளில் நம் சரீர சுவாச ஈர்ப்பிற்கு எவ்வலையும் உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாவானாலும் சரி… உடலுடன் உள்ளவர்களின் எண்ண அலைகளானாலும் சரி… இவ்வீர்ப்பு வட்டத்தில் சிக்காமல் இருக்க முடியும்.

அதாவது ஒரு எரியும் நெருப்பில் எது போட்டாலும் அதுவும் பஸ்பமாகி விடுவதைப் போல்
1.இச்சரீர இயக்கத்தால் நாம் பெற்ற ஆத்ம பலம் கூடக் கூட
2.இவ்வாத்மாவின் வலுவை நாம் தனித்துக் காண முடியும்
3.வலுப் பெற்ற ஆத்மாவை நாம் உள்ள இடத்திலிருந்தே எங்கும் அனுப்பி எதனையும் அறிந்து வரச் செயல்படுத்த முடியும்
4.தன்னைத் தான் உணர்ந்து… தன்னுள் உள்ள இறைவனான ஆத்மாவை அறியவல்ல செயல் தான் “சித்து வழியில் முதல் சித்து…!”

ஆகவே ஆத்ம பலம் பெற்று வேறு ஒரு ஈர்ப்பலைக்கு இவ்வாத்மா செல்லாத வலுவாக நம் எண்ண ஞானம் வளர்ந்திருக்க வேண்டும்.

வாழ்க்கைப் பந்தத்தில் சுவைக்கும்… மற்ற பொருள் நிலை எவற்றுக்கும் இவ்வெண்ணமானது பேராசைக்கோ… ஏக்கத்திற்கோ… சஞ்சல சலிப்பு நிலைக்கோ… செல்லும் வழி முறை சிறிது இருந்தாலும்
1.இவ்வாத்மாவின் செயல் தனித்து தன்னிச்சைக்கு இயங்க
2. இச்சரீர பிம்பத்தின் உணர்வில் செயல் நிலை தடைப்படும்.

எவ் ஈர்ப்பலையின் பிடிப்பிலும் இவ்வெண்ணச் செயலின் உணர்வு ஞானத்தின் வளர்ச்சியானது செயல் கொள்ளும் பக்குவம் கொண்டு தான் இவ்வாத்ம பலம் கூடியுள்ள தருணத்தில்
1.நாம் ஜெபித்த… தியானித்த… சித்தர்களின் வளர்ந்த ரிஷிகளின் தொடர்பு வட்ட அலை ஈர்ப்பு கிடைத்து
2.நம் ஆத்ம வலு வளர்ந்த வளர்ப்பின் “பதம் பார்த்து” நம்மை வழி நடத்துவார்கள்.

ஆத்ம வலுவை மட்டும் இச்சரீர பிம்ப வாழ்க்கையில் இருந்துதான்… இந்த ஞானத்தால் வளர்ச்சியுறச் செய்ய முடியும். ஆத்ம பலம் பெற்ற ஞானத்தால் இவ்வாத்மாவின் பலம் கொண்டே இச்சித்துத் தொடரின் செயல் சித்துக்களை இவ்வாத்மாவினால் தான் வளர்த்துக் காட்ட முடியும். “வெறும் சரீர பிம்ப இயக்கத்தால் பெற முடியாது…!”

முதல் சித்தான ஆத்ம பலம் பெற… இச்சரீர பிம்ப எண்ணத்தின் அறியும் ஞானத்தைக் கொண்டு… ஆத்ம பலத்தால் சித்து நிலைத் தொடர் யாவையும் நாம் பெற முடியும்…!