ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2020

நம் எண்ணத்தால் எந்த மண்டலத்திற்கும் செல்ல முடியும்…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


விக்கிரமாதித்தனின் கதையில் வரும் நிலை யாவையுமே கதையல்ல… உண்மைத் தன்மை உடையது…! விக்கிரமாதித்தன் பூஜித்த உஜ்ஜயினி காளியானவள்… பெண்ணாகப் பிறப்பெடுத்து ஞானத்தால் வளர்த்த சப்த காளியப்பா அவள்.

அவளின் வழித் தொடரைப் பிடித்தவன் தான் விக்கிரமாதித்த மகாராஜா. அக்கதையில் உள்ள யாவையுமே ஒரு சில மாறியிருந்தாலும் உண்மை நடப்புகள் தானப்பா அவை யாவுமே…!

அரசாண்டவனின் ஞானம்… சித்து நிலை பெற வழி வந்ததின் தன்மை பக்தி பூண்டு… பூஜித்துப் பூஜிப்பின் பலனால் அக்காளியின் ஞான அலைத் தொடர்பைப் பெற்று… அக்காளியின் செயலாகவே சித்து நிலை பல பெறும் தன்மைக்கே விக்கிரமாதித்தன் ஆளானான்.

காடாறு மாதம்… நாடாறு மாதம்… என்ற நிலையில் காடுகளில் வாழ்ந்த காலத் தன்மையில் தன் ஆத்ம உயிருக்கு வேண்டிய வலுத் தன்மையை… ஞானத்தின் வழியான சித்து மார்க்கம் பெறுவதற்காகவும் பல செயல்களை அறியவும் அணுவுக்குள் அணுவாக அணுவின் தன்மை முலாமை எல்லாம் தன் உயிராத்ம வலுவுக்கு ஏற்றிக் கொண்டான்.

இந்தப் பூமியின் கனி வள விகிதமானது ஏழு குணத் தன்மை கொண்டது. அதன் வளர்ச்சி கனி வளங்களின் தன்மை ஒவ்வொன்றில் பலவாக வளர்ந்துள்ளது.

வண்ணமும் ஏழு… சுவை குணங்களும் ஏழு… என்று சொல்கிறோம். இந்த ஏழின் தன்மை எதன் குண நிலை அடிப்படையில் கலவை பூண்டது…?

ஆவியாகிக் கனம் கொண்டு ஜீவனாகிச் சுழலும் இயற்கைத் தன்மையில் இவ் ஈர்ப்பின் இயற்கை நிலைச் செயலுக்கொப்ப
1.பால்வெளியின் கூட்டுக் கலவை அமிலத்தின் “குறிப்பிட்ட செயல் சேர்க்கையின் தன்மையில்”
2.சக்தி பெற்ற சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றார்கள் அல்லவா…!
3.அவர்களின் ஈர்ப்பு வளர்ப்பு நிலை தான் (படைப்பு) இந்தப் பூமியின் தன்மை குணம்.

சுவையும்… வண்ணமும்.. மணமும் ஏழாக… ஈர்ப்புக் கூட்டுக் கலவைச் சேர்க்கை ஜீவன் கொண்ட சிவ சக்தி என்ற ஆண் பெண்ணின் செயல் கொண்டு உருவானது தான் இந்தப் பூமி.

பூமியின் குணத்தைச் சிருஷ்டித்து வழி நடத்தும் ரிஷிக் குணத்தில் ஒவ்வொருவர் பெற்ற தனித் தன்மையின் சக்தியை ஒன்றாக்கி வளர்த்த தன்மை தான் இந்தப் பூமியின் தன்மை.

1.இப்படி எத்தன்மை பூண்டு இந்தப் பூமி உருவானதோ…
2.அதன் கலவைக் கூட்டில் எல்லாம் தன் ஆத்ம உயிரைச் செலுத்தி
3.தன் வலுவை இந்தப் புவி ஈர்ப்பின் வலுவிலேயே தன் வலுவைக் கூட்டி
4.எந்த வலுத் தொடர்பைத் தந்து ஏழு குணச் சேர்க்கையில் இந்தப் பூமி உருவானதோ – அந்த ஏழில் முலாம் பெற்ற சித்தன்
5.இவ்வேழுக்கு மேல் சக்தி கொண்ட வலுச் சக்தியான பிற மண்டலங்களின் சக்தியுடன்
6.எந்தச் சக்தியையும் உருவாக்க வல்ல பத்தாவது நிலையான ரிஷித் தன்மை கொள்கின்றான்.

கங்கைத் தீர்த்தம் புனிதமானது… என்றும் இதை ஒட்டிய ஒவ்வொரு தீர்த்தத்திலும் தான் குளித்தெழுந்தால் புண்ணியம் என்றும்… புண்ணியத் தீர்த்தங்களை நாடி மனிதன் சென்று அங்கே குளித்து இந்த உடல் பிம்பத்திற்குப் புனிதம் என்று நீராடி வருகின்றான். இது பக்தி மார்க்க முறை.

ஆனால் இந்த எண்ணத்தை
1.இந்தப் பூமியின் சக்தி அலையான அமிலத் தீர்த்தத்தில்
2.தன் ஆத்ம உயிரையே குளிக்கச் செய்தானப்பா அன்றைய சித்தன்.

பக்தி மார்க்கமும் ஜெப முறையும் வழி காட்டிகள் தான். வழியின் வலு அறிந்து தியானத்தால் ஞானம் பெற வேண்டும்.

ஆகவே இந்தப் புவியில் பிறந்த பல கோடி எண்ண ஆத்ம உயிர்களின் ஈர்ப்புப் பிடி அலைச் சுழற்சியில் இருந்து…
1.இந்தப் புவி ஈர்ப்பின் உணர்வில் சிக்காத வண்ணம்
2.தன் ஆத்ம உயிரின் ஈர்ப்பிற்குத் தன் உணர்வின் எண்ணமானது
3.நாம் எடுக்கும் தியானத்தால் உயர் ஞானம் கொண்டு மாமகரிஷிகளின் அலை ஈர்ப்பின் செயலாக ஒன்றிட வேண்டும்.

இந்த மனித பிம்ப ஆத்ம உயிரின் நுண்ணிய காந்த ஈர்ப்பின் அலை சக்தி வளர்ப்பினால் இந்தப் புவி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் மகரிஷிகளின் அலைத் தொடர்பில் வலுத் தொடர்பு கொண்ட பின்
1.தன் எண்ணத்தைக் கொண்டு
2.எந்த மண்டலத்திற்கும் தன் உயிரைச் செலுத்த முடியும்.