ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 11, 2019

சூரியனின் பிள்ளைகள் தான் வாலியும் சுக்ரீவனும் ஆஞ்சநேயனும் - விளக்கம்


1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணினால் அது தியானம்.
2.நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று எண்ணினால் தவம்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணிச் சொன்னால் அது தவம்.

என்னை ஒருவன் வேதனைப்படுத்துகின்றான் வேதனைப்படுத்துகின்றான் என்று எண்ணினால் இதுவும் தவம் தான். அந்த வேதனைப்படுத்துவோரை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது அந்தத் தவத்தின் வழி கொண்டு நமக்குள் வேதனைபடுத்தும் தன்மை வரும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் பேரருள் எல்லோரும் பெறவேண்டும் என்று அந்தத் தவத்தை எடுத்துப் பழக வேண்டும்.

தவம் என்றால் என்ன…? தியானம் என்றால் என்ன..? என்றே தெரியாதபடி சிலர் தவமிருக்கிறேன் என்று சொன்னால் எதைத் தவமிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

தியானமிருக்கிறேன் என்ற நிலைகளில் எதைத் தியானம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. யோகா பயிற்சிகளிலும் பல வித்தியாசமான நிலைகளில் கொண்டு செல்கிறார்கள்.

எதனால்… எதை.. எப்பொழுது.. எந்த நிலைகளில் எடுக்க வேண்டும்…? என்ற உணர்வுகளைக் காட்டியிருந்தாலும் ஞானிகள் காட்டிய மரபுகளை மாற்றி இவர்களுக்குகந்த நிலைகளை மாற்றிக் கொள்கின்றனர்.

இராமாயணத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜனகச் சக்கரவர்த்தி சீதாவுக்குத் திருமணம் செய்வதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். அதை எல்லோருக்கும் பறைசாற்றுகின்றார்கள்.

சீதாவைத் திருமணம் செய்ய எல்லோரும் வருகின்றார்கள். அவர்வர்கள் குறி வைத்து ஒன்றைத் தாக்கும் நிலைகளுக்குச் செயல்படுத்துகின்றனர். அவரவர்களின் வல்லமையைக் காட்டுகின்றனர்.

 அதே சமயத்தில் இராமன் தீமை செய்யும் அந்தத் தனுசையே (வில்லை) ஒடித்து விடுகின்றான். தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்த பின் சீதாவைத் தன்னுடன் அரவணைத்துக் கொள்கின்றான்… “கல்யாணராமா…!”

1.அதாவது சந்தோஷமான உணர்வுகளை நமக்குள் அரவணைத்துக் கொண்டால்
2.தீமை செய்யும் எண்ணங்களை நீக்கிவிட்டால் நமக்குள் அனைத்தும் ஒன்று சேர்த்து வாழும்.

என்னை அப்படிச் செய்தானே இப்படிச் செய்தானே என்று வேதனைப்பட்டால் உடலிலே நோய் ஆகிவிடுகின்றது.

அப்படி வராதபடி நம் எண்ணங்கள் அனைத்தும் எப்படி ஒன்று சேர்த்து வாழ வேண்டும்…? என்ற நிலைகளும் பகைமை உணர்வை எப்படி நீக்க வேண்டும்…? என்றும் நம்முடைய எண்ணங்களை எப்படி இயக்க வேண்டும்…? என்ற நிலையும் கோவிலில் இதை நமக்கு அழகாகச் சொல்கிறார்கள்.

உணர்வின் எண்ணங்கள் எப்படி இயக்குகிறது என்ற நிலை இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி.

உதாரணமாக சூரியனின் பிள்ளை தான் சுக்ரீவன். ஆனாலும் எல்லாவற்றையும் எடுத்து வளர்க்கின்றது அதனதன் அறிவாக இயக்குகின்றது உதவிகள் செய்கின்றான் சுக்ரீவன்.

வாலி என்ன செய்கிறான்..? இந்த நோயாளியின் உணர்வை எடுத்துக் கொண்டால் வலிமைமிக்க நிலைகள் வருகிறது. நுகர்ந்தால் நம் நல்லதை வலுவிழக்கச் செய்கிறது. இதுவும் சூரியனின் புத்திரன் தான்.

ஆனால் அதை மாற்ற நாம் உயர்ந்த குணங்களைச் சொல்லப்படும் பொழுது நல்ல நிலைகளில் வாயுவாகச் சென்று இயக்கிக் காட்டுவது ஆஞ்சநேயன். அவனும் சூரியனின் பிள்ளை தான். அவன் மந்திரியாக இருக்கின்றான்.

அருள் உணர்வுகள் உடலுக்குள்ளே சென்றவுடன் இந்த உண்மையை உணர்த்தித் நன்மை தீமை என்ற நிலைகளைச் செயல்படுத்துகிறது என்ற நிலைகளை
1.இப்படி மூன்று பிரிவாகக் காட்டி (வாலி சுக்ரீவன் ஆஞ்சநேயன்)
2.இந்தச் சூரியன் எதைச் செய்கிறது…? என்றும்
3.நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்றும் தெளிவாகக் கூறுகின்றது.

ஆகவே அறியாது புகும் அந்தத் தீமையான எண்ணங்களை நீக்கிப் பழக வேண்டும் என்பதற்குத்தான் கல்யாணராமா…! நமக்குள் ஒன்று சேர்த்து வாழக்கூடிய நிலைகள் வளர வேண்டும். கோவிலில் இப்படி வணங்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

அதன்படி நாம் தீமையை நீக்குகின்றோம் என்ற நிலையில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்…! என்று வாழக்கூடிய நிலை வருகிறது.

சூரியன் என்ன செய்கிறது…? தனக்குள் வரும் உணர்வை நஞ்சினை நீக்கிவிட்டு உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றுகின்றது.

மனிதன் என்ன செய்கின்றான்…? நஞ்சினை நீக்கி விட்டு உணர்வின் அறிவாகத் தெரிகின்றான். இந்த அறிவின் துணை கொண்டு நமக்குள் தீமை புகாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையே மாற்றியமைக்கும் சக்தி தான் மனிதனின் ஆறாவது அறிவு.

அப்படி மாற்றியமைக்கும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை நாம் புருவ மத்தியின் வழியாக எடுத்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதை எல்லோரும் பெற்று அவர்களும் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணினால் இது தான் உண்மையான தியானமும் தவமும்..!