ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 20, 2019

“ஞானிகளின் அருகாமை… நமக்கு எப்பொழுது கிடைக்கும்…?” என்பதைப் பற்றி ஈஸ்வரபட்டர் ஒரு அனுபவத்தின் மூலமாகக் காட்டியது


தியானத்தில் அமர்ந்து குருநாதரால் உபதேசிக்கப்படும் உபதேசத்தைக் கேட்பதற்கு முன்  ஈஸ்வரபட்டரின் உருவமும் அவர் ஆசியும் கிடைத்தது.

ஒரு பக்கம் அவரும் மற்றொரு பக்கமும் நானும் அமர்ந்துள்ள நிலையில் அவருடன் தொடர்பு கொண்டதின் சக்தியினால் அவரிடமிருந்து நான் பெற்ற அருள் மொழிகள்… அவர் உணர்த்திய உண்மைகள் எல்லாம் தியானத்தின் மூலம் அவரிடமும் ஞானகுருவிடமும் தொடர்பு கொண்டிருந்தாலும்
1.அவர் உணர்த்தும் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டிருந்தாலும்
2.அவர் உபதேசித்த செயல் வடிவை என்னால் செயலில் காண முற்பட்டும் முன்னேறும் நிலை பெறவில்லை.

அவரிடம் தொடர்பு கொண்டவுடன்… என் எண்ணத்தில் “சகலத்தையும் அறியக்கூடிய உணர்வு எண்ணத் துடிப்புடன்” ஈஸ்வரபட்டரிடம் ஆசி கேட்டேன்.

உடனே தன் கையால் வாயை மூடிக் கொண்டார்…! எனக்கும் அவருக்கும் மத்தியில் மிகப் பெரிய நீளமான “திரைச் சீலை” ஓடியது.

திரைச் சிலைக்கு அப்பக்கம் மாமகரிஷி ஈஸ்வரபட்டரும் இந்தப் பக்கம் நானும் அமர்ந்துள்ள நிலையில் திரைச் சீலையின் இப்பக்கம் இருந்தே அவர் அமர்ந்திருப்பதுவும் பேசுவதும் கேட்கின்றது.
1.ஆனால் எனக்கும் அவருக்கும் மத்தியில் திரை…!
2.இந்தத் திரைக்குப் பொருள் என்ன…? என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.

உடனே என் எண்ணத்தில் நான் இன்னும் பயந்த நிலையில் தான் இருக்கின்றேன்…. அவர் உணர்த்துவதை எடுத்துச் சொல்லும் பக்குவம் ஒன்று தான் உள்ளது.

அவர் அருளும் ஞானத்தின் வழி செயல் அடைய முடியாததற்கு இந்தப் பயம் தான் திரையாக உள்ளதா…? என்று எண்ணியவுடன் தலையை மட்டும் அவர் ஆட்டுவதை உணர்ந்தேன்.

பிறகு தியானத்தில் ஒரு நொடிப் பொழுதில் என் நினைவு இவ்வுலகக் குடும்ப எண்ணங்களுடன் மோதுண்டது.
1.என் உறவினரில் ஒருவர் அறியாது பெருமை கொள்ளும் செயலின் எண்ணம் வந்தது
2.பிறகு பிறரிடம் நெருங்கிய அந்த உறவினரின் குறையை நான் எண்ணிப் பார்க்கும் பொழுது
3.இதை எப்படியும் குருநாதர் நிறைவுபடுத்தித் தந்து விடுவார்… என்ற எண்ண மோதலில்
4.குருவிடம் அப்பொழுது அதை எண்ணித் தியானிக்கவும் செய்தேன்.

இப்படி வரிசையாக எண்ணங்கள் சென்ற பின் இப்பொழுது உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை எதற்கென்று புரிந்ததா…? என்று குருநாதர் கேட்டார்.

உன் குடும்பச் சுழற்சியில் எந்த ஒரு நிலைக்கும்…
1.எண்ணத்தின் ஈர்ப்பை அவர்களிடம் செலுத்தி
2.அவர்களுடனே ஒன்றி
3.அவர்களுக்காக வேண்டுகிறாய்.

பந்தம் பாசம் அன்பு பரிவு அனைத்தும் வேண்டியது தான். “பற்றற்ற நிலை…” என்ற உபதேசத்தை என்னிடம் பெற்றவரும் நீ தான். ஆனால் உன் ஞானத்தால் பற்றற்ற நிலையின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மற்ற உறவினர்களைக் காட்டிலும் இரத்தத் தொடர்புடைய சொந்தங்களின் ஈர்ப்பு அதிவிரைவில் நம்மை வந்து சாடும்.

தியானத்தால் நல்வழிப்பட்டு ஞானத்தின் பால் நீ செல்ல வேண்டிய நிலையில்… பந்த பாசங்களின் உணர்வு எண்ணத்தை உன்னுள் அவர்களின் நிலையையெல்லாம் ஏற்றிக் கொண்டே வருகின்றாய்.
1.அவர்களுக்காக அதே சுழற்சி வாழ்க்கையிலேயே இருந்து
2.அவ்வெண்ணத்துடன் உன் எண்ணத்தைக் கலக்கவிடுவதனால்
3.உன் ஞான வளர்ச்சியும் வளர முடியாது.

பந்தபாசங்களை எல்லாம் நீ ஒதுக்கிவிட்டு ஞான வழிக்கு வா…! என்று உணர்த்தவில்லை.

அவர்களிடம் உள்ள குறையையும் நிறையையும் உண் எண்ணத்துடன் நீ ஏற்றிக் கொள்ள வேண்டியதில்லை.
1.அவர்களின் நிலைக்காக அவர்கள் எண்ணச் செயல் மோதும் பொழுதெல்லாம்
2.அவர்களுக்கு நல் உணர்வு தா ஈஸ்வரா…
3.அவர்கள் நிலை உயரட்டும்…! என்ற எண்ணத்துடன் இறைசக்தியின் அலையைச் செலுத்த வேண்டும்.

ஆகவே அவர்கள் உணர்வலையுடன் நீ கலக்காமல் நீ பெற்ற நற்சக்தியின் அலையைக் கொண்டு அவர்கள் உயர உன் எண்ணத்தைச் செலுத்திடல் வேண்டும்.

பிறரின் எண்ணச் சுழற்சியில் “நீ சிக்காமல்…” உன் எண்ணச் சக்தியை இறை சக்தியின் செயலாக அவர்களிடம் செலுத்திவிடு…! என்று உபதேசம் அளித்தார் ஈஸ்வரபட்டர்.

இப்பொழுது தெரிகிறதா உனக்கும் எனக்கும் உள்ள திரை எதற்கென்று…? என்று மறுபடியும் வினா எழுப்பினார் குருநாதர்.