ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 22, 2019

உபதேசத்தாலோ... நூலில் இருந்து படித்தோ மட்டும் ஞானத்தின் வளர்ச்சி பெற்றிட முடியாது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


நல் உபதேசத்தைக் கேட்பதும்… நல்ல நூலைப் படிப்பதும்… நம் உணர்வின் எண்ணமுடன் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

1.இஜ்ஜீவ உணர்வின் சக்தியைக் கொண்டு
2.இவ்வெண்ண நிலையை எதன்பால் திருப்புகின்றோமோ
3.அவ்வலைத் தொடரின் பதிவு ஒலிகள் அதனுடன் கூடிய நல் அலைகளை மீண்டும் பதியச் செய்ய
4.இவ்வெண்ணத்தால் எடுக்கும் தியானத்தால் இவ்வுணர்வு முழுவதுமே
5.நற்சக்தியின் அலையை நாம் பதிவு செய்து கொள்ள முடியும்.

கோவில் குளங்களுக்குச் செல்லும் பக்திமானுக்கு அவன் கனவிலும் நினைவிலும் இதே நிலைகள் தான் சுழன்று கொண்டிருக்கும்.

பல கோவில்களுக்குப் போவது போலவும் அங்குள்ள ஆண்டவனைத் தரிசிப்பது போல “கனவுகளிலும்…” அதே சமயத்தில் “நினைவான எண்ணத்தில்…” எக்கோயிலுக்குச் செல்லலாம்...? எந்த நூலைப் படிக்கலாம்…? எந்த ஞானியைத் தரிசிக்கலாம்…? என்ற உணர்வு அலைப்பிடிப்பில் தான் பக்திமானுடைய எண்ண உணர்வலை எடுக்கும் சுவாசம் கொண்ட அலை பதிந்திருக்கும்.

திருடனுக்கும் சரி… அவன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு எவ்வலை ஓடுகின்றதோ…! அவ்வலையின் செயலுக்குகந்த எண்ணத்திற்கொப்பத்தான் அவன் நினைவும் கனவும் இருக்கும்.

விவசாயி ஆனாலும் சரி.. விஞ்ஞானி ஆனாலும் சரி… குடித்துத் தன் உணர்வை இழந்தவன் ஆனாலும் சரி…
1.எந்த ஒரு பழக்கப்பட்ட செயலுடன் கூடிய வாழ்க்கையுடன் வாழ்கின்றோமோ அதன் நிலைக்கொப்ப
2.உணர்வின் எண்ணத்திற்கொப்ப சுவாசத்தால் இவ்வுடலில் பதிவாகியுள்ள நிலைக்கொப்ப சுழற்சியில் தான்
3.ஒவ்வொரு மனித ஆத்மாவின் ஜீவ சக்தியின் அலைத் தொடரும் செயலும் வெளிப்படுகின்றன.

இச்சுழற்சியில் “அந்தந்தக் குண அமிலச் செயல் வட்டத்திற்குள்” மட்டும் உணர்வைச் செலுத்தி வாழ்பவனை அவனுள் பதிவாகியுள்ள குண அமிலத்திலிருந்து மீட்டுவது கடினம்…!

அதே சுழற்சியில் இருந்தாலும் ஆத்ம வளர்ச்சியை வளர்க்க முடியாது.

உணர்வுடன் கூடிய எண்ணத்தை நம்முள் “பல கோடி ஆண்டுகளாகப் பதிவாகி உள்ள குண அமிலத்துடன்…”
1.நற்சக்தியின் அமிலத்தை ஞானத்தால் நாம் எடுக்கும் ஜெபத்தைக் கொண்டு
2.நம்மைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூட்சம நிலையில் உள்ள சப்தரிஷிகளுடன் தொடர்பு கொண்டு
3.உணர்வின் எண்ணமுடன் இழுக்கும் சுவாசத்தைக் கொண்டு உடல் முழுவதும் அதைப் பாய்ச்சி
4.ஏற்கனவே நாம் பல காலமாகச் சேமித்து வைத்துள்ள இக்குண அமிலத்துடன்
5.நற்சக்தியின் ஒலி அலை பாயப்பாய
6.மனிதச் சக்திக்குள் எச்சக்தியும் அறியக்கூடிய நிலை பெறலாம்.

நம்மைக் காட்டிலும் உயர்ந்த சக்தியைப் பெறும் வழித் தொடரை நாம் பெற்றோமானால் தான்
1.ஜீவனுடன் கூடிய இம்மனித உடல் பிம்பத்திலிருந்து எச்சக்தியையும்
2.இருந்த இடத்திலிருந்தே உணரவும் காணவும் மாற்றி அமைக்கவும் முடியும்.

ஆனால் நற்சக்தியின் பயனைப் பக்குவம் கொண்ட பத நிலையில் செயல்படுத்தக்கூடிய நிலையும் நாம் பெற வேண்டும்.

புகழ் கண்டு மயங்காதே…
புகழாரம் பாடாதே…
புகழ் தேடிச் செல்லாதே…!

இன்னல் கண்டு கலங்காதே…
இகழ்ச்சி கண்டு பதறாதே…
இகழ்ந்துரைக்க எண்ணாதே…!

நம் ஞானத்தின் வழித் தொடர் வெளிப்பட்டவுடன் நம்மை எதிர் நோக்கியுள்ள நிலைகள் தான் மேலே குறிப்பிட்டவை எல்லாம்.

1.இந்நிலையுடன் கூடிய உணர்வின் பிடியில் சிக்குண்டவர்கள்…
2.தன் வளர்ச்சியின் ஞானத்திலிருந்தே உயர முடியாத சுற்றலில்
3.இன்றளவும் பலர் சுற்றிக் கொண்டுள்ளார்கள்.

ஆகவே ஞானத்தின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் தொடர்பிலேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம்…!