ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 29, 2019

நம் உடல் உறுப்புகள் கெட்டு உடல் எப்படி நலிவடைகிறது…? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்


மனிதனின் வாழ்க்கையில் நாம் சுவாசிக்கும் சாந்த உணர்வின் இசை வேறு. ஆனால் அதே சமயத்தில் கார உணர்ச்சியின் இசை வேறு.

பாதாம் இருக்கின்றதென்றால் அதைப் பாலிலும் மற்றதிலும் போட்டுச் சுவையாகச் சாப்பிடுகின்றோம். ஆனால் அதிலே விஷம் பட்டால் என்ன செய்கின்றது…?
1.அதனின் உணர்ச்சிகள் மாறி அதனுடைய சுருதி மாறுகின்றது,
2.அதைச் சாப்பிட்டால் நம்மைச் சோர்வடையச் செய்கின்றது... மயங்கச் செய்கிறது.
3.அதே பாதாமிலே தனிக் காரத்தை இணைத்தால் “ஸ்ஸ்... ஆஆ...!” என்று அலறும் உணர்வின் தன்மை வருகின்றது.

இதைப் போல தான் சாந்த உணர்வு கொண்டு நாம் இருந்தாலும் கார உணர்ச்சிகள் இதற்குள் பட்டுவிட்டால் இந்தக் கார உணர்வின் தன்மை நம்மை இயக்குகிறது...!

அதாவது
1.கணங்களுக்கு அதிபதியாகி சாந்த குணத்தை அடக்கி
2.கார உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது.
3.அது தான் கணங்களுக்கு அதிபதி கணபதி என்று சொல்வது.

இதை உணர்த்துவதற்காக வேண்டித்தான் விநாயகருக்கு ஒரு பக்கம் எலியைக் காட்டினார்கள்..! எலி என்ன செய்கிறது..?

அது தரையிலே வங்கிட்டுக் குடிகொள்கின்றது. இதைப்போல சாந்த உணர்வு கொண்டு இருக்கும் பொழுது கார உணர்வின் தன்மையை இதற்குள் சேர்த்த பின் இது அந்தச் சாந்தத்திற்குள் ஊடுருவி அதற்குள் வங்கிட்டுக் கார உணர்வாகக் குடி கொள்கின்றது.
1.அதுதான் ஓமுக்குள் ஓ…ம்
2.இந்தப் பிரணவத்தையே மாற்றுகின்றது
3.அதனுடைய இயக்கச் சக்தியையே மாற்றுகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா..!

உதாரணமாக ஒரு குளவி ஒரு சாந்தமான புழுவின் மீது தன் விஷத்தைப் பாய்ச்சிக் கொட்டுகிறது. அதைத் தூக்கிக் கொண்டு வந்து தன் உமிழ் நீரால் மண்ணால் கட்டிய கூட்டுக்குள் வைத்து அடைக்கின்றது.

குளவியின் விஷம் புழுவின் உடல் முழுவதும் பாய்ந்து உடல் சருகாகி விடுகின்றது. ஆனாலும் புழுவின் உயிரும் உடலுக்குள் விளைந்த அணுக்களும் கூட்டுக்குள் அடைப்பட்டு விடுகின்றது.

அதே சமயத்தில் குளவி அந்தக் கூட்டின் மேல் உணர்வின் ஒலி அலைகளை ரீங்காரமிட்டுப் பரப்புகின்றது. விஷத்தால் தாக்கும்போது எந்த உணர்ச்சி இருந்ததோ இந்த ஒலி அலைகள் தாக்கப்படும்போது சூரியன் ஒளிக் கதிர்கள் வரும்போது கூட்டுக்குள் அப்படியே வரும்.

இந்த இரைச்சல் வரும்போது புழுவின் நினைவுகள் அனைத்தும் இந்த குளவியின் பால் வரும்.
1.அப்பொழுது அந்தக் குளவி எந்த உணர்வுகளை எடுத்ததோ
2.அதனின் உணர்வின் தன்மைகளை கூட்டின் வழியாக இந்தப் புழு ஈர்க்கும் சக்தி வருகின்றது
3.அந்த உணர்வின் தன்மை கொண்டு புழு உடலை உருவாக்கிய  அணுக்கள் அனைத்துமே அந்தக் குளவியின் ரூபமாக ஆகின்றது.

குளவியின் ரூபம் ஆனபின் குளவிக்கு எப்படி அந்த உமிழ் நீர் ஊறியதோ இதைப்போல அந்த அணுக்கள் அனைத்தும் உமிழ் நீர் கூட தொடங்குகிறது. அந்த உமிழ் நீரைப் பாய்ச்சி குளவியால் அடைக்கப்பட்ட (மண் கூட்டை) கதவைத் திறந்து வெளி வருகின்றது.

வெளி வந்தபின் தாய்க் குளவி எப்படி அது தான் வளர்ந்ததோ தன் இனத்தை வளர்த்ததோ அதே உணர்வு கொண்டு அது இயக்குகின்றது. இதெல்லாம் இயற்கையின் நியதிகள்…!

இதைப் போல தான் நாம் நுகரும் ஒவ்வொரு உணர்வுகளின் இயக்கங்களும்...!

நாம் நல்ல குணங்கள் கொண்டு பார்க்கும்போது சந்தர்ப்பவசத்தால் கோப உணர்வின் தன்மை உடலுக்குள் சென்று விட்டால் அந்தக் கார உணர்ச்சிகளைத் தூண்டி
1.நல்ல உணர்வின் அணுக்களை இந்தக் கார உணர்ச்சிகள் மாற்றி
2.”ஓமுக்குள் ஓ…ம்…” என்று உணர்வினை மாற்றி இந்த (உடலின்) ரூபத்தை மாற்றுகின்றது.

நல்ல உணர்வுகளைச் சுவாசித்து நல்ல அணுக்களாக இருக்கும்பொழுது நம் உறுப்புகளை அது சீராக்கியது. ஆனால் அதே சமயத்தில் மாறுபட்ட குணங்களைச் சுவாசிக்கும் பொழுது
1.அதனால் அணுக்களுக்குள் மாற்றங்களாகி
2.அதனால் ஏற்பட்ட உறுப்புகளை மாற்றமடையச் செய்து
3.உறுப்புகள் சுருங்குவதும் அல்லது வீக்கமடைவதும் போன்ற செயலாக்கங்களை உருவாக்கும் தன்மை வருகின்றது.

இதெல்லாம் இயற்கையின் நியதிகள். ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.

இயற்கையில் நுகர்ந்த உணர்வின் தன்மையால் உணர்வின் செயல்கள் எப்படி மாற்றுகின்றது… உடலுக்குள் எப்படி மாற்றங்கள் ஆகிறது…? என்பதனை நாம் தெளிவாக தெரிந்து கொள்வதற்குத்தான் நமது சாஸ்திரங்கள் இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றது.

உலக ரீதியிலேயே மற்றவர்கள் அந்த மகான் இப்படிச் செய்தார்… இன்னது செய்தார்..! என்றெல்லாம் கூடச் சொல்லலாம். ஆனால் நமது சாஸ்திரங்கள்…
1.இயற்கை எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையை நாம் அறிந்து கொள்ள
2.அது ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர் வைத்து
3.மனிதனானபின் இத்தகைய தீமைகளில் இருந்து விடுபட மெய் ஞானிகள் இப்படிச் செயல்படுத்தினர்.

அந்தப் பேருண்மைகளைத் தான் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.