ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 5, 2019

செல்வம் நம்மைத் தேடி வர வேண்டும்…! என்றால் என்ன செய்ய வேண்டும்…?


விஞ்ஞான அறிவால் பேரழிவுகள் வருகின்றது. அந்த அறிவிலிருந்து நீங்கள் மீள வேண்டும். மற்றவர்களையும் மீட்க வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும்.

இந்த உடல் இருக்கும் பொழுதே நாம் பிறவி இல்லை என்ற நிலையை அடைதல் வேண்டும். ஏனென்றால்
1.எத்தனை நிலை இருந்தாலும் கோடிச் செல்வங்கள் நாம் வைத்திருப்பினும்
2.நமக்கு அந்தச் செல்வம் உறுதுணையாக இருப்பதில்லை.

ஏன்..?

“நம் உடல் நலம் சரியில்லை…!” என்றால் செல்வத்தைக் கொண்டு வந்து நமக்கு முன்னாடி வைத்தால் அதன் மீது வெறுப்பு தான் வரும்.

அந்தச் செல்வத்திற்காகவும் சொத்தின் பாகங்களைப் பிரிக்கும் பொழுதும் ஒருவருக்கொருவர் சகோதரர்களுக்குள் சண்டையாகிப் பகைமையாகி அதனால் எடுத்துக் கொண்ட வெறுப்பு உணர்வுகள் நோயின் தன்மையாக அடைந்த பின் அந்தப் பணத்தைப் பார்த்தாலே வெறுப்பு தான் வரும்.
1.இதனால் தான் எனக்குப் பகைமையானது…
2.இதனால் தான் எனக்கு நோயே வந்தது…
3.சனியன்…! அதன் முகத்திலேயே நான் முழிக்கக் கூடாது…! என்று சொல்வார்கள்.

அதே சமயத்தில் புறப் பொருளைப் பற்றித் தெரியாதபடி அருளைப் பற்றி நாம் தெரிந்து… அதை வளர்த்துக் கொண்டால்… பொருள் மேல் ஆசையே வராது. (அனுபவத்தில் பார்க்கலாம்)

ஆகவே… அருள் ஞானத்தின் மீது ஆசை வரப்படும் பொழுது அருள் சக்தியை வைத்துக் கிடைக்கக்கூடிய பொருளைச் சிதறாதபடி எடுக்கப்படும் பொழுது மன நிம்மதி கிடைக்கும்…!

போதுமான நிலைகளில் நமக்கு வேண்டியது நிச்சயம் வந்து கொண்டே இருக்கும். இதையும் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

உதாரணமாக நான் (ஞானகுரு) யாரிடத்திலும் தபோவனத்திற்காகப் பணத்தைத் தேடிப் போவதில்லை. ஆனால் தபோவனத்தின் வளர்ச்சி அதுபாட்டுக்கு வளர்கிறது.

எப்படி…?

1.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்..! என்று
2.குருநாதர் இட்ட கட்டளைப்படி அருள் சேவையைச் செய்து கொண்டேயிருக்கின்றேன்.
3.பணம் எப்படி வருகிறது… எப்படி நடக்கிறது…? என்பது இங்கே என்னுடன் கூட இருப்பவர்களுக்கே தெரியாது.

ஆனால் வெளியில் இருந்து பார்க்கிறவர்கள்.. இந்தச் சாமி என்ன கள்ள நோட்டு அடிக்கிறாரா..? என்று கேட்கிறார்கள்…! அதற்கு என்ன செய்வது..?

காசு வருகிறது… எந்த வழியில் காசு வருகிறது…! என்று எல்லோருக்கும் ஒரு சந்தேகம். எனக்கே கூடச் சந்தேகம் தான்.

“காசு இல்லை…!” என்று நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அடுத்த நாள் பார்த்தால் எந்த வகையிலாவது பணம் வந்து விழுகிறது.

காரணம்…
1.இந்த இயற்கையின் உணர்வுகள் எதை எண்ணுகின்றோமோ…
2.அதை மக்கள் மத்தியிலே ஒன்று சேர்த்து.. அந்த உணர்வின் தன்மை
3.“நாம் எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும்…!” என்ற இந்த உணர்வு ஒன்று சேர்க்கப்படும் பொழுது
4.அது தான் தன்னிச்சையாக எடுத்து அந்தச் செயல்களைச் செயல்படுத்துகின்றது.
5.நான் (ஞானகுரு) அல்ல…! 

எல்லோரது மனமும் அந்த உறுதியாக்கப்படும் பொழுது அந்த ஒளியின் உணர்வை நமக்குள் உறுதியாக்கும் சக்தியாகச் செயல்படுகின்றது.

இங்கே எம்முடன் பத்து இருபது வருடமாகப் பழகியவர்கள் இதை எல்லாம் அறிந்திருக்கலாம். எப்படி வளர்ச்சி அடைகிறது… எப்படி எப்படிச் செயல்படுகிறது..? என்ற நிலையைச் சிலர் உணர்ந்தும் இருக்கலாம்.

யாம் ஆசீர்வாதம் கொடுக்கும் பொழுது காசு ஏன் உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் இதற்குத்தான். மற்றவர்கள் யாரும் இப்படிக் காசு கொடுக்க மாட்டார்கள்…!

அருளைப் பெருக்குங்கள்.. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள்… அழியாச் செல்வம் உங்களைத் தேடித் தேடி வரும்…!