ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 23, 2019

நட்சத்திரங்களின் இயக்கங்களை உள் உணர்வில் உணர்த்தும் விதமாக “அந்த லயன்… இந்த லயன் (LINE)…!” என்பார் குருநாதர்


நம் குருநாதர் அவர் ரிக் வேதத்தைத் தெளிவாகத் தலைகீழாகப் பாடுவார். வேதங்கள் என்றால் என்ன…? என்பதை தெளிவாகச் சொன்னார். அவரும் பிராமணர் தான்.

இதை எனக்குத் (ஞானகுரு) தெரியப்படுத்துவதற்காக ஒரு நாள் குருநாதர் என்ன செய்தார்…?

ரிக் வேதத்தைச் சொல்லிக் கொடுக்கும் ஒரு வாத்தியார் நாங்கள் இருக்கும் தெருப் பக்கமாக நடந்து வந்தார்.

வந்தவுடனே… இங்கே வாடா…! என்று கொச்சையான வார்த்தையால் அவரைத் திட்டி அப்படியே குடுமியைப் பிடித்துத் தூக்கினார் குருநாதர்.

அடுத்து… ஏண்டா இப்படித் தப்பு செய்தாய்…? என்று ஓங்கி ஒரு அறை கொடுக்கின்றார்…! அந்த ஆள் முழிக்கின்றார். அவர் முழித்தவுடனே…
1.அந்த இடத்தில் இந்த மந்திரத்தைச் சொன்னாய் அல்லவா…?
2.அது எப்படி என்று இப்பொழுது திருப்பிச் சொல்லு… என்கிறார் குருநாதர்.

வாத்தியார் பெ…பே…! பெ… பே…! என்கின்றார்.

சொல்லத் தெரியவில்லை என்றதும்… குருநாதரே சொல்கின்றார்
1.அப்படியே சொல்லித் தலைகீழாக கட…கட..வென்று மறுபடியும் மேலே ஏற்றுகிறார்.
2.ஒரு சொல் கூட… அந்த நாதம்… சுருதி மாறாமலே பாடியவுடனே
3.அந்த வாத்தியார் திரு…திரு…திரு… என்று முழிக்கின்றார்.

ஆனால் எனக்கு இது எல்லாம் ஒன்றும் தெரியாது. என்னமோ சொல்கின்றார்… என்னவோ உளர்கின்றார்..! என்று தான் நான் (ஞானகுரு) நினைக்கின்றேன்,

ஏனென்றால் அந்த வேதங்களைப் பற்றிப் பேசுவது அவர்கள் இருவருக்கு மட்டும் தான் தெரிகிறது. அடிவாங்கிய பின் இனிமேல் தப்பு செய்யக் கூடாது…! என்று சொன்னவுடன் சரி…! என்று அவர் போய்விட்டார்.

இவன் திருட்டுப் பயல்… காசு வாங்குவதற்காக மந்திரத்தையே தப்புத் தப்பாகச் சொல்கின்றான்…! என்றார் குருநாதர்.

பின்பு அடுத்த நாள் அந்த ஆள் அடி வாங்கியவர் என்னிடம் வந்தார்.
1.சாமி…! இவர் மனிதனே இல்லை… இவர் ஒரு ரிஷி பிண்டம்…
2.எப்படி நீங்கள் இவரைப் பெற்றீர்கள்…?
3.இந்த வேதத்தை யாரும் சொல்லவே முடியாது
4.சொற் பிழை இல்லாமல் அந்தச் சுருதியுடன் சொல்கின்றார்…!

“அவர் என்னை அடித்தார்… … …! நான் செய்த தப்பெல்லாம் ஓடியே போய்விட்டது… … …!” இனிமேல் நான் இந்த மந்திரம் சொல்லும் வேலைக்குப் போகவே மாட்டேன் என்றார்.

அந்த ஆள் உடுப்பி. நான் என் ஊருக்கே செல்கிறேன் என்றார்.

உங்களுக்கு ஒரு அதிர்ஷ்டம்… அவரைக் (ஈஸ்வரபட்டரை) குருவாக நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள்…! என்று கூறிவிட்டு எனக்கு நீங்கள் ஆசிர்வாதம் கொடுங்கள்… நான் ஊருக்குச் சென்று ஏதாவது வேறு தொழில் செய்து கொள்கின்றேன்…! என்றார்.

நான் சமையல் செய்து ஒரு ஓட்டல் கடை வைக்கலாம் என்று விரும்புகிறேன். நான் செய்யும் சாப்பாடு ருசியாக இருக்க வேண்டும் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள் சாமி…! என்றார்.

அப்புறம் அவரிடம் ஆசீர்வாதம் செய்து ஒரு ரூபாயைக் கையில் கொடுத்துவிட்டுப் போய்விட்டேன். இது நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால்…
1.குருநாதர் அத்தனை நிலைகளையும்
2.அவர் எந்தெந்த வழியில் தெரிந்து இருக்கின்றார் என்ற நிலையை
3.நான் அறியவில்லை என்றாலும் என்னை அறிய வைக்கின்றார்.

அதே சமயத்தில் குருநாதர் என்ன எல்லாம் செய்வார் தெரியுமா…!

டெலிபோன் கம்பத்தை அடிப்பார்… எலக்ட்ரிக் கம்பத்தில் அடிப்பார் இந்த லயன்… அந்த லயன்.. இந்த லயன்.. அந்த லயன்…! (LINE) என்று சொல்லிக் கொண்டே வருகின்றார்.

இவர் என்னத்தைக் “கிரகத்தைச் சொல்கிறார்... பைத்தியம் பிடித்தது போல் எதையோ கூறுகின்றார்…!” என்று நான் எண்ணிக் கொண்டிருப்பேன்.

ஒன்றும் புரியாது.

டேய்…! மிளகாய் ஒரு லட்சம் கோடி…! கோடி..கோடி…கோடி…! என்று சொல்வார். குருநாதர் தெலுங்கு மற்றும் எல்லா பாஷைகளிலும் பேசுவார்.

கோடி இங்கே இருக்கின்றது சாமி…! என்றேன்.

டேய் அந்தக் கோடி இல்லைடா… “ஈ கோடிடா…” என்பார். இப்படி மிளகாய் கோடி… அந்தக் கோடி… காரம் கோடி…! அது...இது… என்று என்னனென்னமோ கோடி… கோடி…! என்று சொல்லுவார்.

எனக்கு அர்த்தம் புரியவே இல்லை. இந்த லயன் அந்த லயன் இந்த லயன் அந்த லயன்…! என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அப்புறம் அந்த உணர்வுகள் எல்லாம் சொன்ன பிற்பாடு…
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் (ஒளிக் கற்றைகள்) ஒன்றோடு ஒன்று கலந்து
2.அந்த உணர்வுகள் எத்தனை “கோடியாக” மாறுகின்றது…?
3.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது…?
4.எதன் செயலை இது மாற்றுகின்றது…? (அப்படி என்றால் அது “அந்த லயன் – LINE)

மின்னலாக வெளிப்படும்போது இந்த உணர்வுகள் எதனுடன் எது எப்படிச் சேர்கின்றது…? உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையை “உள்ளுணர்வில் உணர்த்துகின்றார்…!”
1.அதாவது முதலில் சொல்கின்றார் (புரியாதபடி)
2.பின்பு புரிய வைக்கின்றார்.

இப்பொழுது உங்களிடம் அதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கின்றேன். எனக்குக் குருநாதர் எப்படிச் சொல்லிப் பதிவு செய்தாரோ… அதை உங்களிடமும் பதிவு செய்கின்றேன்.

உங்களுக்குச் சந்தர்ப்பம் வரும் பொழுதெல்லாம் இந்த நினைவுகள் வரும். தீமைகளை அகற்றக்கூடிய சக்தியாக இது உங்களுக்குள் வரும்.

ஏனென்றால் இன்றைய விஞ்ஞான உலகத்தில் உலகமே விஷத் தன்மையாக மாறும் இந்த நேரத்தில் அந்த விஷத்தையே வெல்லக்கூடிய சக்தியாக நீங்கள் பெற வேண்டும். உங்கள் மூச்சு பிறரைக் காக்க வேண்டும்.

அத்தகைய சக்திகளைப் பெறுவதற்குத்தான் இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை
2.குருநாதர் உணர்வுதான் பேசுகின்றது
3.அந்த உணர்வு தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றது.

இதை நிலைநிறுத்தி… உங்களுக்குள் அதை பெற வேண்டும் என்று எண்ணினால்
உங்களையும் காக்கின்றீர்கள்
நாட்டையும் காக்கின்றீர்கள்
மக்களையும் காக்கின்றீர்கள்
இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்…!

உங்களுக்குள் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தினை மீண்டும் மீண்டும் நீங்கள் எண்ணினால் உங்களுக்குள் நிச்சயம் அது வரும்… வளரும்…!