பண்டைய கால மகரிஷிகள் இங்கே அதிகம் செயல்பட்டதாக இந்த ஸ்தலத்தின் வரலாறு
கூறுகிறது.
முன்னோரு காலத்தில் இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த சகரர் என்ற அரசன் அசுவமேதயாகம்
நடத்தினார். அசுவமேதயாகம் முழுமை பெற்றால் தனது இந்திர பதவிக்கு ஆபத்து என்று
அறிந்த இந்திரன் யாகக் குதிரையைக் களவாடி கபில முனிவர் தியானிக்கும் இடத்தில்
மறைத்து விடுகின்றான்.
குதிரையைத் தேடி சகரரின் அறுபதினாயிரம் மகன்களும் செல்கின்றனர். கடைசியில்
கபிலர் ஆசிரமத்தில் கண்டதும் குதிரையை அவரே பிடித்து வைத்திருப்பதாக எண்ணி அந்த
முனிவரை ஏசுகின்றனர்.
ஏசியதும் அந்த முனிவர் கண் விழித்துப் பார்த்து அவர்களை எரித்துச் சாம்பலாக்கி
விடுகின்றார். பின் யாகம் நடத்தும் அரசனின் மற்றோரு மகன் நடந்ததை அறிந்து கபில
முனிவரிடம் மன்னிப்புக் கேட்டு யாகக் குதிரையை அழைத்துச் சென்றதாகக் காவியம்
உண்டு.
1.அந்த அறுபதனாயிரம் பேரையும் மீட்க வேண்டும் என்றால்
2.ஆகாய கங்கையை இங்கே பூமிக்குக் கொண்டு வந்து
3.இறந்த அறுபதனாயிரம் பேரின் எலும்புகளில் அந்த நீர் பட்டால்
4.அவர்கள் எல்லோரும் சொர்க்கம் அடைவார்கள் என்று கபிலர் சொல்கிறார்.
திலீபனின் மகனான பகீரதன் அந்த அறுபதனாயிரம் பேரையும் மீட்க பெரும் முயற்சி எடுத்தான்.
அது குறித்து கங்கையை வேண்டி பகீரதன் தவம் செய்ய கங்கை ஒரு நாள் பிரசன்னமாகி
உனக்கு என்ன வேண்டும்…? என்று கேட்கின்றது.
இங்கே பூமிக்குள் கங்கை வர வேண்டும் என்று பகீரதன் சொல்ல கங்கை எனக்கு
இப்பொழுது வர விருப்பமில்லை….! என்று சொல்லி மறைந்து விடுகின்றது.
பின்னர் முனிவர்கள் பகீரதனிடம் நீ சிவபெருமானை நினைத்துத் தவமிருந்தால் அவர்
சொன்னால் கங்கை நிச்சயம் பூமிக்குள் வரும் என்று சொல்கின்றனர்.
அவ்வாறே பகீரதன் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருக்கின்றார். பல காலம்
தவமிருந்த பின் சிவபெருமானின் காட்சி கிடைக்கின்றது. கங்கையை பூமிக்கு வரச்
செய்வதாக அவரும் ஆசி கொடுக்கின்றார்.
கங்கையின் வேகத்தைத் தன் ஜடாமுடியில் தாங்கி பூமிக்குள் கொண்டு வருகின்றார்
சிவன். அதன் பின்னரும் பல சிக்கல்கள் உருவாகி அதில் ஒவ்வொன்றிலிருந்தும் கடும்
தவம் இருந்து வென்று முடிவில் அறுபதனாயிரம் பேரின் எலும்புகளின் மீதும் கங்கையைப்
படச் செய்து அவர்களை மீட்டதாக அந்தக் காவியம் சொல்கிறது.
பகீரதன் கங்கையைக் கொண்டு வந்து புண்ணியம் பெறச் செய்ததால் அந்த இடத்தைப் “பாகீரதி
நதி…!” என்று அழைக்கின்றனர்.
இதனுடைய உட்பொருளை ஞானிகள் காட்டிய அருள் வழியில் பார்ப்போம்.
அசுவமேதயாகம் என்றால் விண்ணிலே தோன்றிய ஒரு உயிர் பூமிக்குள் வந்து பல கோடிச்
சரீரங்கள் பெற்று… ஒன்றை ஒன்று வென்று… ஒன்றை ஒன்று கொன்று ஒன்றுக்கு இரையாகி… இப்படிப்
பல நிலைகளை வென்று தான் மனிதச் சரீரம் பெறுகின்றது.
மனிதச் சரீரம் பெற்ற நிலையில் இராமாயணத்தில் தசரதச் சக்கரவரத்திக்கு
அறுபதனாயிரம் மனைவிகள் என்று குறிப்பிட்டது போல்
1.உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் அனைத்தும்
2.எண்ணிலடங்கா சக்திகளாக… உடலாக… மாறுகிறது…! என்று இங்கே காட்டுகின்றார்கள்.
நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் இரத்தங்களில் கலந்து இந்திரலோகமாக… அணுக்களாக…
அதனதன் வீரியத்திற்கொப்ப வலிமைக்கொப்ப உருப்பெருகின்றது.
அதிலே ஏதாவது ஒன்று உடலில் உள்ள மற்றதை எல்லாம் அடக்கி வீரியம் பெற்று
ஆட்சிக்கு வந்து விட்டால் “இந்திரலோகம்” (இரத்தத்தில் உள்ள அணுக்கள்) மாறுகின்றது.
அப்படி மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்திரன் தன் பதவியைத் தக்க
வைக்கப் பல வேலைகளைச் செய்கிறான்…! என்று காவியங்கள் கூறுகின்றது. (நாம்
வளர்த்துக் கொண்ட குணங்கள் அனைத்தும் தன்னைக் காக்க அது அது முயற்சிக்கும்)
இவ்வாறு எடுத்துக் கொண்ட குணங்கள் மாறுபட்ட நிலையாகும் பொழுது
1.உடலை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ரிஷியிடம் சாபம் பெறுவதாக
2.இங்கே கபில முனிவரின் சாபத்தைக் காட்டுகின்றார்கள்.
மனிதனான நிலையில் அடுத்த நல்ல நிலையை அடைய முடியாத நிலையை அவ்வாறு காட்டுகின்றார்கள்.
ஆனால் பகீரதனோ எப்படியும் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று பல தடவைகள் முயற்சி
செய்வதைக் காட்டுகின்றார்கள்.
1.இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும்
2.எத்தனையோ கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாது
3.மனிதனுக்கு அடுத்த நிலையான பிறவியில்லா நிலையை அடைய வேண்டும் என்ற அவனின்
முயற்சியைத் தான்
4.“பகீரதப் பிரயத்தனம்” என்று சொல்வார்கள்.
இதிலே “ஆகாய கங்கை” என்பது விண்ணிலிருந்து வரும் பேராற்றல் மிக்க மகரிஷிகளின்
அருள் சக்திகள். அதன் வேகத்தை நாம் எடுக்க (தாங்க) வேண்டும் என்றால்
1.நம் உடலின் உச்சியில் உள்ள இரண்டு கண்ணின் நினைவையும் புருவ மத்திக்குக்
கொண்டு வந்து
2.அதன் மூலமாக விண்ணிலிருந்து சுவாசிக்க வேண்டும் என்று தெளிவாகக்
காட்டுகின்றார்கள்.
அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் வலிமையாகச் சேர்த்து வளர்க்கும் பொழுது அதில்
வரும் தடைகளை எல்லாம் எண்ணாது “ஒரே நிலையில் அந்தச் சக்திகளைப் பெற வேண்டும்”
என்பதையே பகீரதன் பல காலம் கடும் தவமிருந்ததாகக் காட்டுகின்றார்கள்.
1.அருள் மகரிஷிகளின் ஆற்றலை நாம் சேமிக்க வேண்டிய இடம் நம் உடலில் உள்ள
எலும்புகள் என்றும்
2.அதிலே இருக்கும் ஊழ்வினை என்ற வித்துகளை அருள் ஒளியின் உணர்வாக மாற்றும்
பொழுது தான்
3.அனைத்து வகையான சாபங்களிலிருந்தும் (ஜென்ம வினை பாவ வினை சாப வினை தீய வினை)
விடுபட்டு
4.எல்லா உணர்வுகளும் உயிருடன் ஒன்றி மனிதன்
சொர்க்கம் அடைவதாக ஞானிகள் காட்டுகின்றார்கள்.
இந்தப் பேருண்மயை உணர்த்தியது வியாசக பகவான். அங்கே உத்தரகாசியில் வியாசகரை
எண்ணித் தியானமிருக்கும் பொழுது இந்த விளக்கங்கள் எல்லாம் எனக்குக் கிடைத்தது.
வியாசகரின் அருள் சக்தி உலக மக்கள் எல்லோருக்கும் கிடைத்து பகீரதனைப் போன்று
விடா முயற்சி எடுத்து அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உடலில் உள்ள
அனைத்து உணர்வுகளையும் உயிருடன் ஒன்றச் செய்து பேரொளியாக அழியா ஒளிச் சரீரம் பெற
அருள்வாய் ஈஸ்வரா.