ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2019

உயிரிலே பட்டால் தான் உணர்ச்சிகள் நமக்குத் தெரிய வரும்… உயிரிலே படவில்லை என்றால் உணர்ச்சிகளே இல்லை…!


ஒரு மனிதன் வேதனைப்படுவதை நாம் காண நேர்ந்தால் அந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அதிலே மோதி அதே உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் படர்கிறது.

அந்த மனிதன் மேல் நாம் இரக்கமாக இருந்தால் அவன் படும் அதே வேதனை உணர்ச்சிகள் நமக்குள்ளும் தோற்றுவிக்கிறது.

அந்த வேதனை என்ற உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி விடுகின்றது. ஏனென்றால் ஓ.. என்று அது பிரணவமாகி ம்.. என்று உடலாக அடங்குகிறது.

ஒரு செடியின் சத்தை வேக வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.வேக வைக்கும் பொழுது ஆவியாக வெளி வருகின்றது
2.மேலே பச்சை (குளிர்ந்த) நீரை ஊற்றி விட்டோம் என்றால் அந்த ஆவியை… செடியின் சத்தை “ரசமாக…” இறக்கிவிடும்.

இதே போல் தான் நம் உயிரிலே மோதும் உணர்ச்சிகள் அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக எல்லாவற்றிலும் மோதி இயக்கச் செய்கிறது. அதற்குத்தக்க நம் எண்ணம்… சொல்… செயல்… என்ற நிலைகளில் இயக்குகின்றது.

அதே சமயத்தில் சுவாசித்த (வேதனை) உணர்வுகள் (ரசமாகி) உமிழ் நீராக மாறி நம் உடலிலே சேர்த்து நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது.

நாம் வயிறு நிரம்ப சத்துள்ள ஆகாரத்தைச் சாப்பிட்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.இந்த வேதனை என்ற விஷம் நம் குடலில் ஜீரணிக்கக்கூடிய அணுக்களில் பட்டவுடனே
2.அது மயக்கம் அடைந்து சரியாகச் ஜீரணிப்பதில்லை.
3.சிறிது நேரம் ஆனவுடன் புளித்து விடுகிறது… அப்பொழுது எதிர்த்துத் தாக்க ஆரம்பித்து விடுகின்றது.
4.அதனால் குடலுக்குள் ஒருவிதமான எரிச்சல் வருகின்றது.

இப்படி ஆனதும் நம் ஆகாரத்தை நல்ல சத்துள்ளவைகளாக மாற்றுவதற்கு மாறாக… ஒரு பழம் அழுகி விட்டால் எப்படி அதனின் ருசி கெட்டுப் போகுமோ… அதே மாதிரிச் சுவைத்துச் சாப்பிட்ட அந்த ஆகாரத்தை நல்ல இரத்தமாக மாற்றுவதற்கு மாறாகச் “சுவை கெட்ட இரத்தமாக” மாறுகின்றது.

அப்படி இரத்தமாக மாறிய பின் அந்த மனிதன் உடலில் எந்த உணர்ச்சிகள் இயக்கியதோ அதே உணர்ச்சி நம் இரத்தத்தில் பட்டவுடன் அது கருவாகி விடுகின்றது.

அந்த மனிதன் உடலில் எந்த நோய் விளைந்ததோ அதே நோய் இங்கேயும் விளையக் கூடிய சக்தி பெறுகின்றது. நமக்குள் அந்த ஊழ்வினை என்ற வித்தாக இருப்பதனால்
1.அதைக் கண் கருவிழி பதிவாக்கிய நிலையில்
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அந்த மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி
3.உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் அவன் வேதனைப்படுகின்றான் என்று உணர்த்துகின்றது.

அவன் (உடலில்) எப்படி… வேதனைப்படுகின்றான்…? எதனால் வேதனைப்படுகின்றான்…? என்று உற்றுப் பார்க்கின்றோம். உயிரிலே மோதும் பொழுது உணர்வால் அறிகின்றோம். அந்த உணர்ச்சியாக இயங்குகின்றோம்.

நம் கண்கள் புறக் கண். உயிரோ அகக் கண்.
1.என்ன தான் கண்ணில் பார்த்தாலும்
2,அந்த உணர்ச்சிகள் உயிரிலே இயக்கவில்லை என்றால் அது என்ன…? ஏது…? என்றே தெரியாது (இது முக்கியமானது)
3.உங்களுக்கு முன்னாடியே (கை நீட்டி) அவனை அடித்தாலும் கூட உங்களுக்குத் தெரியாது.
4.அடி வாங்கியவன் வேதனைப்பட்டால் கூட உங்களால் அறிய முடியாது.
5.ஆனால் அந்த உணர்வுகள் உயிர் பாகம் போகப்படும் பொழுது தான்… உயிரிலே மோதினால் தான்… அந்த உணர்ச்சிகளையே ஊட்டும்.
6.வேதனையோ கோபமோ ஆத்திரமோ அதை அப்பொழுது தான் உணர முடியும்.

இப்படிக் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்தது அத்தனை உணர்வுகள் இயக்கினாலும் அந்த வினை இயக்கமாக நம் இரத்தத்தில் கலந்து கொண்டே தான் இருக்கும்.

ஒருவன் வேதனைப்படுகின்றான்.. ஒருவன் கோபப்படுகின்றான்… ஒருவன் குரோதப்படுகின்றான்… என்றாலும் அது அது தனித் தனிப் பிரிவாக நம் இரத்தத்திற்குள் வேலை செய்யும்.

காட்டிலே எத்தனை இலட்சம் மரங்கள் இருக்கின்றது…? அதிலிருந்து வரக்கூடிய சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொண்டால் எந்த மரத்தின் சத்து அதிகமாகின்றதோ அந்த மரத்தின் வாசனை அதிகமாக வரும்.

இதே மாதிரி நாம் ஒரு நிலத்தில் ஊன்றுவது போல் நம் உடலில் கோபமோ வேதனையோ வெறுப்போ பயமோ எல்லாமே ஊழ்வினை என்ற வித்துக்களாக உருவாகிவிடுகின்றது.

அவர் உடலில் பட்ட உணர்வுகள் அனைத்தும் அது தீய வினைகள். அவர் வேதனைப்பட்ட உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது தீய வினைகள். இதே மாதிரி கோபப்படுவோரைப் பார்க்கின்றோம். அதுவும் தீய வினைகள்.

சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற எத்தனையோ வகை உணர்வுகளை உற்றுப் பார்த்தோம் என்றால் அவைகள் எல்லாம் நம் எலும்புக்குள் பதிவாகி அந்தத் தீய வினைகள் நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

நம் உடலில் வினைகள் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. இதை எல்லாம் அன்றாடம் நீக்குகின்றோமா என்றால் இல்லை…! அதை எல்லாம் நீக்கி நல்ல வினைகளாகச் சேர்க்க வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் ஞானிகள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாகச் சுவாசித்து உடலிலே சேர்த்துக் கொண்டே வந்தீர்கள் என்றால் ஒளியின் அணுக்களாக மாறும்.

இந்த உடலுக்குப் பின் நாம் அழியாத நிலை பெறலாம்.