ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 25, 2019

“கங்கோத்ரி” – பூநீரான கங்கையின் புனிதத்தைப் பற்றி தியானத்தின் மூலம் பெற்ற அனுபவம் 24.08.19

மகாபாரதத்தில் வியாசர் காட்டிய பேருண்மைப்படி சந்தனுவின் மனைவியாக வரும் கங்கை தனக்குப் பிறக்கும் ஏழு குழந்தைகளை கொல்கின்றாள்.

எட்டாவது குழந்தையான பீஷ்மர் பிறந்ததும் அதைக் கொல்லும் நேரம் அதைப் பொறுக்க முடியாத சந்தனு கங்கையிடம் “எனக்குக் குழந்தை வேண்டும்… கொல்லக் கூடாது…!” என்று சொன்னதும் குழந்தையைக் கொடுத்து விட்டு கங்கை சந்தனுவை விட்டு விலகிச் சென்று விடுகிறாள்.

இதனுடைய உட்பொருள் என்ன…? என்று தியானத்தில் கேட்கும் பொழுது கிடைத்த உணர்வுகள்….

இன்று நம் நாட்டின் புண்ணிய நதிகளில் மிக மிக முக்கியமான நதி கங்கை. 
1.கங்கை என்ற பெயர் பல இடங்களில் ஒரு சிறப்பு மிக்கதாகப் பயன்படுத்துகின்றது.
2.“கங்கா ஸ்நானம்…” என்று சொல்வார்கள்.
3.அதன் உட்பொருளை முழுமையாக உணர்ந்தவர்கள் அதை ஆகாய கங்கை (அகண்ட அண்டம்) என்று சொல்வார்கள். 

அந்த ஆகாய கங்கையிலிருந்து தான் கண்ணுக்குப் புலப்படக்கூடிய பொருள்கள் அனைத்துமே உருவாகின்றது.
1.அணுக்கள் உயிரணுக்கள் எல்லாமே அந்த ஆகாய கங்கையின் அம்சமாக உருவானாலும்
2.அந்த உயிரணு என்பது ஒரு பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கினால் மட்டுமே 
3.அது பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதன் வரை வளர்கின்றது.
4.மனிதனாக ஆன பின் அந்த ஆகாய கங்கையைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பும் வருகின்றது.

அந்த உயிரணு ஆகாய கங்கையில் இருக்கும் வரை அதற்கு வளர்ச்சி இல்லை. பூமிக்குள் வந்தால் தான் வளர்ச்சி. (அது தான் எட்டாவது குழந்தையான பூஷ்மர்).

விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் வந்து உடல் பெற்ற பின் அதற்குள் உயிரின் சக்தி அடைப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாததால் அந்த ஆகாய கங்கையைப் பற்றி அறிய முடிவதில்லை.

அதே ஆகாய கங்கையின் ஆற்றல் பூமித் தாயால் தன்னுடைய வளர்ப்பான மலைகளில் ஈர்க்கப்பட்டு ஜீவ நீராக உருவாகின்றது. அத்தகைய நீர் இருந்தால் தான் தாவரங்களும் அதனால் உயிரினங்களும் வளர்ச்சி அடைய முடியும்.

அப்படி ஜீவ நீர் நதியாக ஓடவில்லை என்றால் அவைகள் எதுவுமே வளர முடியாது. வெறும் மணலும் மலைகளும் மட்டுமே இருக்கும்.

இன்று மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்த நிலையில் 
1.அந்த ஆகாய கங்கையின் இயக்கத்தையும் 
2.அதனால் உருவான ஜீவ நீரையும் பற்றி முழுமையாக அறிந்து கொண்டால் 
3.உயிரின் இயக்கத்தையும் உயிருக்குள் சேர்க்க வேண்டிய அந்த ஆகாய கங்கையின் ஆற்றலையும் உணர்ந்து கொள்ளலாம்.

இதை முழுமையாக அறிந்த அக்கால மகரிஷிகள் கங்கையை “கங்கை மாதா” என்று உணர்த்தி அதன் ஆற்றலின் முக்கியத்துவத்தை உணர்ந்து… அந்த ஆற்றலைத் தனக்குள் வளர்த்து… ஆகாய கங்கையுடன் ஐக்கியமாகி… “ஒளி வீசும் நட்சத்திரங்களாக” அங்கே என்றும் அழியாத நிலையில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

தன்னைப் போன்று தன் இன மக்களும் அந்த ஆற்றலைப் பெறுவதற்காகத் தான் “கங்கோத்ரி” எனும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே “கங்கை மாதா” என்று காட்டியுள்ளார்கள்.

கங்கோத்ரியைச் சுற்றியுள்ள அத்தனை மலைகளிலும் நம் ஊனக் கண்களாலேயே 
1.மலைகளும் அந்த நீரை உருவாக்கும் மேகங்களும் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என்றும் 
2.அந்த மலை உச்சிகள் ஆகாய கங்கையின் ஆற்றலை (நீர்) மேகமாக இழுத்து 
3.அதை எப்படிப் பருகி நீராக அருவியாகக் கொட்டுகிறது… என்றும் மிக மிகத் தெளிவாகக் காண முடிந்தது.

கங்கோத்ரிக்கு போகும் அந்தப் பாதைகள் முழுவதிலுமே (சுமார் 60 கிலோ மீட்டர் சுற்ற\ளவுக்கு) அதை உணர முடிந்தது. 
1.அந்த கங்கை என்ற சொல்லின் புனிதத்தையும் அதனுடைய மணத்தையும் 
2.கங்கை வளைந்து நெளிந்து ஆழத்திலும் அகலமாகவும் ஓடுவதையும் பார்க்கும் பொழுது 
3.அது ஒரு பூநீராக… புனித நீராக… விண்ணும் இந்த மண்ணும் இரண்டறக் கலந்து 
4.அதனால் ஏற்படும் சிருஷ்டியின் பிரம்மாண்டத்தையும்… படைப்பின் மூலத்தையும்… காணவும் உணரவும் முடிந்தது.

கங்கையின் புனிதத்தை உணர்ந்ததால் தான் நம்முடைய ஞானிகள் கங்கையில் மூழ்கிக் குளிக்க வேண்டும்… அதாவது அதனுடைய ஆற்றலை எடுத்து நம்முடைய தீமைகளை எல்லாம் (உடல் பெறும் உணர்வுகளை) கரைக்க வேண்டும்… என்றார்கள்.

ஞானிகள் உணர்த்திய அந்த உண்மையைத் தத்ரூபமாக என்னால் உணர முடிந்தது.