ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 1, 2019

ஜோஸ்மத் நரசிம்மர் (பத்ரிநாத் அருகில்) ஆலயத்தில் 28.08.19 அன்று தியானத்தில் பெற்ற அனுபவம்


நரசிம்ம அவதாரத்தைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதிலுள்ள தெரியாத விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அங்கே செய்த தியானம் அமைந்தது.

நரசிம்மரின் முகம் மிகவும் கோரமாகவும் கைகளில் உள்ள நகங்கள் கூர்மையாகவும் அது இரண்யனின் குடலைப் பிளந்து இரத்தக்களரியாக ஆவது போல் வியாசகர் உணர்த்தியுள்ளார்.

1.நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை
2.நாம் எந்த முறையைக் கையாண்டு
3.நம் ஆன்மாவிலிருந்து எப்படிப் பிளந்து வெளியேற்ற வேண்டும்…? என்பதைக் காட்டுவதற்கே அதைக் காட்டியுள்ளார்.

ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளையும் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் பேராற்றல்களையும் நமக்குள் சேர்த்துக் கொண்டே வருகின்றோம்.
1.அதன் மூலம் நரசிம்மரின் முகத்தில் காட்டப்பட்டது போல் வீரியமான உணர்வு கொண்டு
2.நரசிம்ம அவதாரமாக நாம் ஆகி
3.சுவாசத்தின் மூலம் வரும் தீமைகளை எல்லாம் ஊடுருவிப் பிளந்து வெளியே தள்ள வேண்டும்.

தீமைகளை எப்பொழுதெல்லாம் காணுகின்றோமோ… கேட்கின்றோமோ… நுகர்கின்றோமோ… அந்த நேரம் எல்லாம் நாம் “நரசிம்ம அவதாரமாக…!” ஆகிடல் வேண்டும்.

நாம் தான் தியானம் செய்கின்றோம்.. சக்திகளை எடுக்கின்றோம்.. அல்லவா..! அதுவே எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்று சாதாரணமாக எண்ணி விடக் கூடாது. நாம் அந்த நரசிம்ம அவதாரமாக ஆக வேண்டும். ஆனால்…
1.தீமை செய்பவர்களை எண்ணாது தீமை செய்பவர்களைத் தாக்காது…
2.தீமை செய்யும் உணர்வுகளைப் பிளந்து அதை நம் ஆன்மாவிலிருந்து முழுவதும் அகற்றிடல் வேண்டும் என்ற இந்த வகையில் தான்
3.நரசிம்மராக மாற வேண்டும் என்று தெளிவாக அங்கே தியானத்தில் உணர முடிந்தது.

அதே போல் இன்று இந்த உலகில் நடக்கக்கூடிய தீவிரவாதம்… இயற்கையை அழித்தல்… ஆட்சியாளர்களின் அதிகாரச் செயல்கள்… போன்ற நிலைகளில்
1.அறியாத நிலைகளில் அந்தத் தீமை செய்வோர் அனைவரும்
2.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற்று
3.அவர்கள் அனைவரும் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞான சக்தி பெற்று
4.அவர்கள் செயல் அனைத்தும் தன் நாட்டு மக்களைக் காத்திடும் நிலையாகவும்
5.இந்த உலகைக் காக்கும் சக்தியாகவும் மாறி உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும் என்றும்
6.நம் பூமித் தாயைக் காக்கும் நரசிம்ம அவதாரமாகவும் செயல்பட வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றியது.

அவ்வாறு தோன்றிய அந்த உணர்வுகள் மூச்சலைகளாகக் கூட்டுத் தியானத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு இந்தப் பரமாத்மாவில் உள்ள அனைத்து தீமைகளையும் பிளந்து அந்த நச்சுத் தன்மைகளை எல்லாம் நம் பூமியை விட்டு அகற்றிடும் செயலாக உலகெங்கிலும் பரப்பப்பட்டது.