ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 27, 2019

எங்கேயுமே இல்லாத தத்துவங்கள் நம் ஆலயங்களில் தான் உண்டு...!


பரிணாம வளர்ச்சியில் நல்ல குணங்கள் கொண்டு வளர்ந்ததால் தான் நாம் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம். ஆனால் நம் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் வந்துவிட்டால் நம் உடலில் நோயாக மாறுகின்றது.

அப்படி நோயாக மாறாது தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்....?

நம் உடலில் மனிதனாக உருவாக்கக் காரணமான நல்ல குணங்களைத்தான் கோவில்களிலே தெய்வமாக வைத்துக் காண்பிக்கின்றார்கள்.

1.தெய்வத்திற்கு வைரக் கிரீடத்தை வைக்கின்றார்கள்
2.தங்க நகைகளைப் போடுகின்றார்கள்
3,அழகான பட்டாடைகளையும் உடுத்துகின்றார்கள்
4.மலர் மாலைகளையும் போடுகின்றார்கள்
5.கனிகளையும் வைக்கின்றார்கள்.
6.இருட்டறைக்குள் வைத்து திரையைப் போட்டு மூடி இத்தனை அலங்காரமும் செய்கிறார்கள்
7.திரையை நீக்கியவுடன்... அங்கிருக்கும் சாமி மங்கலாகத் தெரிகிறது... சரியாக உணர முடியவில்லை.

அப்படி என்கிற பொழுது விளக்கை வைத்துக் காண்பிக்கின்றார்கள். “விளக்கைக் காட்டியவுடன்” அங்கிருக்கும் பொருள்கள் எல்லாமே தெரிகிறது.

வைரக் கிரீடம் இருக்கிறது பட்டாடை தெரிகிறது நகைகள் தெரிகிறது கனிகள் தெரிகிறது... எதனால்...? இந்த விளக்கினால்…!

அப்பொழுது நம்முடைய ஆறாவது அறிவினால் அதைத் தெரிந்து கொள்கிறோம். ஆடு மாடுகளுக்கு இவை எல்லாம் தெரியுமோ...? அங்கே உணவுப் பொருள் இருந்தால் அதை உட்கொள்ளப் போகும். அந்தக் குணத்தை அறிய முடியாது.

1.ஆகவே மனிதர்கள் தெய்வ குணங்களைத் தெரிந்து கொள்வதற்குத் தான் உருவம் அமைத்தார்கள்..
2.இது துவைதம்...! விளக்கைக் காட்டும் பொழுது உருவம் தெரிகிறது.
3.அப்பொழுது நாம் எதை எண்ண வேண்டும்...?
4.பொருளறிந்து செயல்படும் இந்தச் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா...! என்று எண்ணுதல் வேண்டும்.
5.(அங்கிருக்கும் பொருள் எல்லாம் விளக்கினால் தெரிகிறது அல்லவா...!)

நம் பையன் வெளியிலே இரண்டு பேருடன் பழகி விளையாண்டு கொண்டிருக்கின்றான். அப்பொழுது அவர்கள் செய்யும் அதே குறும்புத்தனத்தை நம் பையனும் செய்யத் தொடங்குகிறான்.

நாம் என்ன சொல்கிறோம்...?

ஏண்டா அவர்களுடன் சேர்ந்து கெட்டுப் போகிறாய்..? என்று தான் நம் பையனைத் திட்டத் தெரிகிறது. ஆனால் அவனை மாற்றத் தெரிகிறதா..? தெரியவில்லை...!

அப்பொழுது அவர்களுடன் சேர்ந்து அந்த மாதிரி ஆகிவிட்டான்...! என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..?

ஈஸ்வரா…! அவன் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும். அந்தப் பையன்களிடம் சேராத நிலைகளில் நல்ல உணர்வு பெறவேண்டும் என்று நாம் நல்ல உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

ஏனென்றால் அவர்களுடன் சேர்ந்ததால் தான் நம் பையனும் தவறு செய்கிறான்..! என்று அறிந்து கொள்கிறோம். அதற்காக வேண்டி மேலே சொன்ன நல்ல உணர்வைப் பாய்ச்சிவிட்டு
1.இந்த மாதிரி அவன் கெட்டவனப்பா...! அவனுடன் சேராதே...!
2.அதனால் தான் உனக்கு இடைஞ்சல் வருகிறது... நீ பார்த்துச் செய்யப்பா...!
3.நீ எவ்வளவு நல்லவனாக இருந்தாய்..! அவர்களுடன் சேர்ந்ததால் உனக்கும் இந்தக் குறும்புத்தனம் வந்ததல்லவா...! என்று சொல்லி
4.அருள் உணர்வைப் பாய்ச்சி அவனைத் திருத்த வேண்டும்.

அதே போல் உதாரணமாக வீட்டில் மருமகள் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றார்கள். யாரோ வருகிறார்கள்...! என்று சொல்லி அவசரமாகக் கூட்ட வேண்டும் என்று செய்கிறார்கள்.

அதிலே கொஞ்சம் குப்பையை விட்டு விட்டால் போதும் மாமியார் பார்த்து என்ன செய்கிறது...? கூட்டுவதைப் பார்...! இங்கே இவ்வளவு குப்பை இருக்கிறது... அதைக் கூட்டத் தெரிகிறதா...?

மருமகள் மீது பிரியம் இருந்தால் அன்பாகச் சொல்லும். அன்பு இல்லை என்றால் இந்த மாதிரிக் குறையாகத் தான் சொல்லும்.

மருமகள் என்ன சொல்கிறது...? குப்பை இருக்கிறது...! என்று சொன்னால் நான் கூட்டி விடுகின்றேன். இதற்கு ஏன் இந்த மாதிரி வெடுக் என்று பேச வேண்டும்…? என்று மாமியாரை எண்ணுகிறது.

அப்பொழுது அந்த இடத்தில் என்ன நடக்கிறது…? ஒருவருக்கொருவர் பகைமையாகும் சந்தர்ப்பம் உருவாகிறது.

இந்த மாதிரி ஆகாமல் ஒருவருக்கொருவர் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் கோவிலில் விளக்கை வைத்துக் காட்டுகின்றார்கள்.

இந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும்... வைரத்தைப் போல் எங்கள் சொல்லும் செயலும் வாழ்க்கையும் ஜொலிக்க வேண்டும்... தங்கத்தைப் போல் மங்காத மனம் நாங்கள் பெறவேண்டும்.. மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் நாங்கள் பெறவேண்டும்... கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும்...! என்று ஆலயத்தில் ஒவ்வொருவரும் எண்ணுதல் வேண்டும்...! இந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி ஆலயத்தில் காட்டியபடி மருமகள் எண்ணினால்
1.சரி... அத்தை அவர்கள் மனதில் ஏதோ நினைத்துச் சொல்கிறார்கள்.
2.அவர்களுக்கு என் மேல் நல்ல பிரியம் வர வேண்டும்
3.அரவணைத்துச் சொல்லும் அந்த நல்ல மனது வரவேண்டும் என்று எண்ணினால் அங்கே பகைமைகள் அகலுகிறது.

அதே போல் மாமியாரும் ஆலயத்தில் காட்டியபடி எண்ணினால்
1.மருமகளுக்குச் சிந்தித்துச் செயல்படும் சக்தி வர வேண்டும்
2.பொறுப்புடன் செயல்படும் சக்தி பெறவேண்டும் என்கிற பொழுது அங்கே குறைகள் அகலுகிறது.

இப்படி..
1.ஒவ்வொருவரும் அந்தப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்
2.பரிபக்குவ நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
3.சந்தர்ப்பவசத்தால் குடும்பத்தில் வரும் குறைகளை அகற்ற வேண்டும் என்று தான்
4.எங்கேயும் இல்லாத இந்தத் தத்துவங்களை நம் கோவில்களில் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் நடந்து பழக வேண்டும்.