ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2019

மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வின் இயக்கங்களாக நாம் எப்படி மாறுவது…? என்பது தான் ஆலயத்தின் பண்புகள்


ஒரு கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது அதைச் சொன்னதும் நமக்கும் அந்தக் கோபமான எண்ணம் வருகின்றது. அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது. அது சமயம்…
1.ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொன்னோம் என்றால் ஒன்றுமில்லை.
2.ஏய்…ய்..! ஏண்டா இப்படிச் செய்கிறாய்…? என்றால் வெறுப்பு தன்னாலே வருகின்றது.
3.காரத்தின் தன்மை அதிகமாகின்றது.
4.ஆகவே சூடாகச் சொல்லும் பொழுது வெறுக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொல்லும் பொழுது அந்த உணர்ச்சி “ஏதோ தவறு செய்து விட்டோம்… போலிருக்கிறது…!” என்று வருகிறது.

சாதாரணமாகச் சொல்லும் பொழுது அரவணைக்கும் தன்மையாக வருகின்றது.
1.ஆக இந்தக் கோபம் சுவையை ஊட்டுகின்றது.
2.தன்னைத் திருந்தச் செய்கிறது.

இதைத்தான் நம்முடைய உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்பதைத் தெளிவாக்கப்படுகின்றது ஆலயங்களில். இந்த உடல் ஒரு ஆலயம். அதிலே எத்தனையோ குணங்கள் நமக்குள் இருக்கின்றது.

இரண்டு பேர் சண்டை போட்டால் அதை நாம் பார்த்தால் அந்த உணர்வு நமக்குள் வந்து பதிவாகி விடுகின்றது. உள்ளுக்குள் புகுந்து விடுகின்றது.

ஒருவன் கோபத்துடன் செயல்பட்டு மற்றவரை வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வைப் பார்த்ததும் அதே உணர்வு கோபத்துடன் அடுத்தாற்போல் வேதனைப்படும் சொல்லாகவும் வேதனைப்படும் செயலாகவே நமக்குள்ளும் மாறுகின்றது.

அங்கே சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல...! இங்கே நம் உடலிலேயும் வேதனையை உருவாக்கும் அணுவாகி உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லும் அணுவாக மாறுகின்றது.

எப்படிக் காடுகளில் புலி கரடி பாம்பு போன்ற பிராணிகள் மற்றவைகளைக் கொன்று சாப்பிடுகின்றதோ அது போல் நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமை செய்யும் அணு மற்றதைக் கொல்கிறது.

ஏனென்றால் நம் உடல் ஒரு பெரிய காடு. எந்தெந்தத் தாவர இனங்களின் சத்தை வளர்த்ததோ அதனின் மணம் அந்தக் குணம் அந்த அணுவின் தன்மையாகி ஒன்றுக்கொன்று போர் முறையாகி விட்டால்
1.ஐயோ… பளீர்.. என்று இங்கே (ஊசி குத்துவது போல்) மின்னுகிறதே
2.இங்கே உடலில் வலிக்கின்றதே… வயிறு வலிக்கிறதே… இது எல்லாம் வரும்.

போர் முறை வரப்படும் பொழுது அதைச் சீராக ஜீரணிக்கும் சக்தி இல்லாது போய்விடுகின்றது. உடல் உறுப்புகளின் இயக்கங்கள் தடைப்படுகின்றது.

ஒரு அரசன் ஒரு கிராமத்திற்குப் போகும் பொழுது அதை அடக்கி அங்கே தன் நிலைகளை எப்படிச் செயல்படுத்துகின்றானோ இதே மாதிரி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலுக்குள் அது போகும் பாதைகளில் அங்கே இருப்பதை எல்லாம் துரத்திக் கொண்டே செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! இதுகள் எல்லாம் எதிலிருந்து வந்தது..? என்று ஞானிகள் தெளிவாக்கியிருக்கின்றார்கள்.

எந்த உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருகின்றதோ அது சீதாலட்சுமி… (சீதா என்றால் சுவை) அந்தச் சுவையை வளர்க்கும் சக்தியாக வளருகின்றது.

அதாவது கோப குணத்தை வெளிப்படுத்தினால் அது சீதா..! சூரியனின் காந்த சக்தி கோபத்தை எடுத்து வைத்துக் கொண்டு சீதாலட்சுமியாக மாறுகின்றது.
1.கோபிப்பவரைப் பார்த்ததும் சீதாராமா…
2.அந்தக் கோபத்தின் உணர்ச்சியின் வேகமாக அதே எண்ணங்கள் நமக்குள்ளும் வருகின்றது.

ஒருவன் கசப்பான செயலைச் செய்கின்றான். அந்த உணர்வுகள் சீதா லட்சுமியாக மாறுகின்றது. சுவாசித்ததும் சீதாராமனாக அதே கசப்பான வெறுப்பின் எண்ணங்கள் வருகின்றது. இது தனித் தன்மை.

அதே போல் பண்பு கொண்ட தெய்வீக உணர்வுகளை ஆலயத்தில்  காட்டப்படும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்தால் சீதா…! அந்தத் தெய்வ குணங்களை… அந்தச் சுவையை எண்ணுகின்றோம். அப்பொழுது சீதாராமனாக நமக்குள் வருகின்றது.

அது எப்படி வருகிறது..?
1.இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்…
2.ஆலயத்தில் காட்டிய தெய்வ குணத்தை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இத்தகைய உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது அதே உணர்வலைகளை எடுத்து எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதைக் கலவையாக்கி நீங்களும் இதே மாதிரிச் சொல்கிறீர்கள்.

அப்பொழுது இந்த உணர்வலைகள் அந்த ஆலயம் முழுவதும் படர்கிறது. கோவிலுக்குள் இந்த உணர்வுடன் சென்றால் மகிழ்ச்சி ஊட்டும் உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.

ஆலயங்களை உருவாக்கியதன் நோக்கமே அது தான்.